அட்சய திருதியில் எவற்றையெல்லாம் ரெட்டிப்பு ஆக்க வேண்டும்?

அக்ஷயம் + திருதி என்று பிரித்து பார்த்தால், அ-க்ஷயம்: அழிவு அற்றது (அ) அல்லது குறைவில்லாதது என்று பொருள்.
அட்சய திருதியில் எவற்றையெல்லாம் ரெட்டிப்பு ஆக்க வேண்டும்?

அக்ஷயம் + திருதி என்று பிரித்து பார்த்தால், அ-க்ஷயம்: அழிவு அற்றது (அ) அல்லது குறைவில்லாதது என்று பொருள். அக்ஷய திருதியன்று சுவாமி தரிசனம், விஷ்ணு சஹசர நாமம், காயத்ரி ஜபம் சொல்லுவது, தெரிந்த சுலோகம் சொல்லி கடவுளைப் போற்றி பாடினால் கடவுளின் அருள் தொடர்ந்து கிட்டும். அன்று கடவுளைப் பூஜித்து அவருக்கு பிரசாதத்தைப் படைத்து வழிபாட்டால் உங்களை உயர்வு பெறச் செய்யும். எடுத்துக்காட்டாக இந்தத் திதியில் தான் குசேலன் கிருஷ்ணருக்கு அவலை கொடுத்து, கிருஷ்ண பரமாத்மா அவலை உண்டது இந்த திதியில் தான்.  அன்று முதல் குசேலன் தன்னுடைய நட்பில், செல்வ வளர்ச்சிக்கு குபேரனாக உயர்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ் மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்து மூன்றாம் நாள் வருவது திருதியை ஆகும். திருதியை திதியில் பிறந்தவர்கள் நல்ல குணமான பாக்கியவான்கள், பணம் ஈட்டுவதில் குறிக்கோள் கொண்டவர்கள், கோயிலுக்கு கைங்கரியம் மற்றும் தான தர்மங்கள் செய்பவர்கள், பலசாலியானவன் என்றெல்லாம் நூல்களில் கூறப்படுகிறது.  இந்த திதியில் கல்வி மற்றும் சங்கீதம் கற்கவும், வீடு கட்டவும், கிரகப்பிரவேசம் செய்யவும், சீமந்தம் செய்யவும், அழகு கலை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்பு, சிலை சிற்பங்கள் செய்யவும் சரியான நாளாகக் கூறப்படுகிறது. அதிலும் சித்திரை மாத சுக்ல பட்ச திருதி அன்று செய்யப்படும் காரியங்கள் இன்னும் மேன்மேலும்  உயரும். எல்லா துவக்க முயற்சிகளுக்கும் நற்காரியங்களுக்கும் இது சரியான திதியாகக் கருதப்படுகிறது.  

அக்ஷய திருதி (அக்ஷய தீஜ்) என்ற இந்த திதி இந்துக்களுக்கும் சமணர்களும் முக்கிய புண்ணிய நாளாக கருதப்படுகிறது. தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரையில் வரும் வளர்பிறை  திருதியில், சுடர் ஒளி பொருந்திய கிரகங்களான சூரியனிலிருந்து சந்திரன் 36 பாகையில் பயணம் செய்யும் பொழுது,  சந்திரன் தனக்கு பிடித்த ரோகிணியில் பயணிக்கும் காலம் அக்ஷ்ய திருதியை ஆகும். சூரியன் மற்றும் சந்திரன் அவரவர் உச்சம் பெற்ற வீட்டில் (மேஷம், ரிஷபம் ) இருப்பது, இருட்டைப் போக்கி வெளிச்சத்தைத் தரவல்லது. அட்சயம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அட்சயா என்பது எப்பொழுதும் குறையாதது என்று பொருள்.

பல்வேறு புராணங்களில் முற்காலத்தில் அட்சயபாத்திரம் பற்றி நாம் அறிந்திருப்போம். அந்த பாத்திரத்தில் அளவில்லா அறுசுவை உணவு கொடுத்துக்கொண்டே இருக்கும் ஒரு அதிசய அக்ஷயம் ஆகும். மகாபாரதத்தில் பாண்டவர்கள் தங்களுடைய உரிமைகளை இழந்து காட்டில் வனவாசம் செய்யும் பொழுது, முனிவர்களுக்கு உணவு கொடுக்க முடியாத தருணத்தில், திரௌபதி சூரிய பகவானிடம் பெற்ற அட்சய பாத்திரம்  கொண்டு உணவு தந்ததாக புராணங்கள் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு அக்ஷய திதியில் ஆரம்பிக்கப்பட்டது.  அதேபோல் அக்ஷய திருதி அன்றுதான் மணிமேகலைக்கு அட்சய பாத்திரம் கிடைத்தது. 

அட்சய திருதி அன்று படைக்கும் கடவுளான பிரம்மர் இந்த பிரபஞ்சத்தில் முதல் யுகமான கிருதயுகத்தை உருவாக்கிய நாள். மற்றும் இதிகாசபடி திரேதாயுகம் ஆரம்பமானது இந்த திதி ஆகும் (திரேதா யுகாதி). இந்தியாவின் முக்கிய நதி கங்கை உருவாகிய நாள். விஷ்ணுவின் அவதாரமான பரசுராமன் அவதரித்த அருமையான திதி. மகாபாரதத்தில் திரௌபதிக்கு சரியான நேரத்தில் கிருஷ்ணர் வஸ்திரம் தொடர்ந்து கொடுத்தது இந்த அக்ஷய திருதி அன்றுதான்.

இந்த திதியில் தான் நாம் சிக்ஸர் (இரட்டை பலன்) அடிக்க முடியும். அதாவது இந்த திதியில், மற்றவர்களுக்கு தான தர்மங்கள் கொடுத்து உங்களை மேன்மேலும் உயர்த்தி உங்களின் கொடுப்பினைகள் / பாக்கியங்களை உயர்த்திக்கொள்ள முடியும். இந்த திதியில் செய்யும் பரிகாரங்களும் கடவுளால் ரெட்டிப்பாக ஏற்றுக் கொள்ளப்படும். இந்த நாளில் தான் பிரம்மரால் உலகம் தோன்றியதாகக் கூறப்படுகிறது. இன்னும் புராணங்களில் அக்ஷய திதி பெருமைகள் சொல்லப்படுகிறது.

தர்மம் யாரைக் காக்கும்

நாம் செய்த கர்மா ஒருபுறம் இருக்க, நம் முன்னோர்களின் கர்மாவையும் சேர்த்து  நாம் அனுபவிக்கும் நிலை. இவற்றை கழிக்க ரெட்டிப்பு பலன் தரும் இந்த திதி நமக்கு உதவும். அதேபோல் நாம் செய்யும் தர்மம் நம் வம்சாவளியைக் காக்கும். இதுவும் ஒரு வகை பிக்சட் டெபாசிட்(FD). அதுவும் சூரியன் சந்திரன் உச்சம் பெற்ற நிலையில் பூஜை மற்றும் தான தர்மம் செய்வது உடல் வலிமை மற்றும் ஆத்ம பலத்தைப் பெருக்கும்.

அட்சயம் என்றால் ஒன்றை ரெட்டிப்பு ஆக்கும் தன்மை. ஒரு மனிதனுக்கு எது தற்பொழுது தேவை என்று அவரவருக்கு தெரியும். ஒரு சிலருக்கு பணம், பதவி புகழ், வீடு, வங்கியில் பண இருப்பு, தங்கம் வெள்ளி வைரம் தேவைப்படுகிறது. பொருளை விட முக்கியமானவை பசிக்கு உணவு, பிணி அகல வழி, செயலின் தீர்க்க தீர்வு, அழியா கல்வி மற்றும் மன அமைதி முற்றிலும் அவசியமான ஒன்று. இந்த அக்ஷய திருதியில் கிரக பலம் பெற்று இவற்றை அடைய என்ன செய்யலாம் என்று சிறு விளக்கம் பார்ப்போம்.
 
1. நம்மிடம் இல்லாத ஒன்றை வாங்கி வைத்தால், அவற்றிலிருந்து ஒரு பகுதியை மற்றவருக்கு கொடுத்தால் பன்மடங்காகப் பெருகும் என்பது உண்மையே. ஒரு மனிதனின் தற்பொழுது அத்தியாவசியத் தேவை உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம். அதற்கு மேற்பட்டுச் சேர்ப்பது என்பது எதிர்காலத்தில் நமக்கும், நம் தலைமுறைக்கும் முக்கியமான ஒன்று. அக்ஷய திதியில் அத்தியாவசியத் தேவையான அரிசி, பருப்பு, உப்பு  உள்பட பொருட்களை நமக்கு வாங்கிக்கொண்டு அவற்றில் சிறிது தானம் செய்வது நன்று. அக்ஷய திருதியில் உங்களால் முடிந்த உணவை சமைத்து மற்றவருக்கு தானம் செய்யவும். 

2. குடும்பத்தில் வறுமை நீங்க அன்னதானம், பறவை மிருகங்களுக்கு உணவு நீர் கொடுத்தால் நன்று. முக்கியமாக சந்திரன் தோஷம் பெற்றால் தயிர்ச் சாதம், மோர், பானகம், பழச்சாறு விநியோகம் செய்வது நன்று. அன்று சந்திர ஸ்தலம், சந்திர மௌலீஸ்வரரை தரிசிப்பது நன்று.

3. சுக்கிரன் தோஷம் மற்றும் திருமண தோஷத்தால் ஏற்படும் திருமணத் தடை உள்ளவர்கள் சுமங்கலிக்கு தாம்பூலத்துடன் நிறைய மஞ்சள் கிழங்கு, புடவை, ஜாக்கெட் பிட் வாங்கி தந்தால் நன்று. பணம் அதிகம் உள்ளவர்கள் ஏழைப் பெண்ணிற்கு தாலி செய்ய நம்மால் முடிந்தது அளவு தங்கம் வாங்கி கொடுத்து தோஷத்தை நிவர்த்தி செய்து திருமணம் வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

4. படிப்பு குறைவாக உள்ள குழந்தைக்கு, உங்களால் முடிந்த அளவு புத்தகம், பேனா, பென்சில் வாங்கித்தரவும். முடிந்தால் பழம், கொழுக்கட்டை மற்றும் இனிப்பு உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அன்றைய நாளில் புதிய கல்வி துவக்கங்கள் செய்யலாம். அன்று முழுவதும் நல்ல நாளாகும்.

5. சூரியனால் பாதிக்கப்பட்டவர்கள், முன்னோர்களின் -பித்ரு கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள், வயதானவர்களுக்கு வஸ்திரம், கொடை செருப்பு தானம், மிளகு, எள் சேர்த்த உணவு, கோதுமையால் ஆன உணவு என்று தானம் கொடுக்கலாம். முக்கியமாக பித்ருகளுக்கு சிரார்த்தம் செய்யலாம். செங்கல்பட்டு அருகில் நென்மேலி எனும் கிராமத்தில் சிரார்த்த சம்ரக்ஷண பெருமாள் மிகவும் விஷேசம். அங்கு அகால துர் மரணம் அடைந்தவர்கள், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மறந்தவர்கள் இந்த திதியில் தர்ப்பணம் செய்யலாம்.

6. நீண்ட நாள் பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஆயுள் குறைவு உள்ளவர்கள் உங்களால் முடிந்த அளவு கேன்சர், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், நாள்பட்ட பிணியால் பாதிக்க பட்டவர்கள் மருந்துவ உதவி செய்தால் உங்கள் பிணி குறைக்கப்படும். வைத்தீஸ்வரர் கோவில்,  திருக்கடையூர், திருப்பைஞ்ஞீலி, ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, திருவேல்விக்குடி, மருதீஸ்வரர் கோவில்,  எமன் மற்றும் சித்ரகுப்தர் கோவில்களுக்கு சென்று உங்களால் முடிந்த பரிகாரம், காணிக்கை, பக்தர்களுக்கு அன்னதானம் என்று செய்யலாம்.

8. சந்திரன் ஒரு குழப்பவாதி, அவரால் உங்களுக்கு குழப்பம் மனநிலை பாதிக்கும். அவற்றைச் சரிசெய்ய இந்த திதியில் நீர் நிலை உள்ள கோவிலுக்கு சென்று குளித்து அங்குள்ள பெருமானை தரிசிக்கலாம். குளம் தூர்வார உதவி அல்லது விவசாயிகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்தால் உங்களுக்கு பாதிப்பு குறைக்கப்படும்.

9. தொழிலில் உயரமுடியாதவர்கள் அல்லது சனியின் பிடியில் பாதிக்கப்பட்டவர்கள் ஏழை தொழிலாளிகளுக்கு அல்லது கடினமாக உழைப்பவர்களுக்கு, சுவையான உணவு, எள்ளு உருண்டை, நல்ல உடை என்று  கொடுத்தால் நன்று.

10. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் குரு பலம் குறைந்தவர்கள் தங்கம், வெள்ளி வாங்கலாம். அவற்றில் உங்களால் முடிந்ததை கோவில் குடமுழுக்கு, ஏழை பிராமணருக்கு மற்றும் கோவில் திருப்பணிக்குத் தேவையானதை வாங்கித் தரலாம். இனிப்பு பலகாரங்கள் செய்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இந்த அக்ஷய நாளில் மாங்காடு அல்லது அருகில் உள்ள அம்பாள் கோவிலுக்கு கற்கண்டு கலந்த பால், சர்க்கரைப் பொங்கல் மற்றும் இனிப்பு கொடுக்கலாம்.

11. நிலம், மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் மாங்கல்யகாரகன் செவ்வாய் ஆவார். அவர் நீச்சம் அல்லது தோஷம் பெற்றால் இந்நாளில் வைத்தீஸ்வரர், திருச்செந்தூர் முருகன் அல்லது செவ்வாய் பகவானை தரிசிக்கலாம். திருதியை திதியின் கிரகம் செவ்வாய் பலம் பெற்றது. செவ்வாய்க் கிழமையில் வரும் அக்ஷய திதி மிகவும் விசேஷமான ஒன்று.

முக்கியமாக செய்யவேண்டியது நமக்கு எந்த பிரச்னை நோக்கி நாம் செல்கிறோமோ அவற்றை குறைக்கும் சிறு தீர்வு மேலே சொல்லப்பட்ட பரிகாரம் ஆகும். இந்தத் திதியில் விஷ்ணுவின் அவதார கடவுள், பராசக்தி, செவ்வாயின் அம்சமான முருகர், காமாட்சி தாயையும், திரிபுரசுந்தரி, சூரியன் வழிப்பட்ட கோயில், கௌரி மாதாவையும், அக்னியையும் போற்றி நமஸ்கரிப்போம்.

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com