வண்ணத்துப்பூச்சி வடிவுடைய தைராய்டு பாதிப்பு - ஜோதிட சூட்சுமங்கள்

ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் பாவங்களின்  சூட்சுமங்களில் தைராய்டு மற்றும் ஹார்மோன் பிரச்னைகள் அவற்றோடு மற்ற முக்கிய பக்க விளைவுகளைப் பார்ப்போம்.
வண்ணத்துப்பூச்சி வடிவுடைய தைராய்டு பாதிப்பு - ஜோதிட  சூட்சுமங்கள்

இன்றைய காலகட்டத்தில்  ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் நோயில்லா வாழ்க்கை வாழ்வது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. ஒரு சிலருக்கு தனது இறுதிக் காலம் வரை மருந்தே உணவாக அமைந்துள்ளது. அதில் ஒன்றாக தைராய்டு பாதிப்பு கருதப்படுகிறது. 

அட, ஜோதிடத்திற்கும் - தைராய்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேட்கின்றீர்கள்? புரிகிறது. 

ஜோதிடத்தில் கிரகங்கள் மற்றும் பாவங்களின்  சூட்சுமங்களில் தைராய்டு மற்றும் ஹார்மோன் பிரச்னைகள் அவற்றோடு மற்ற முக்கிய பக்க விளைவுகளைப் பார்ப்போம். 

தைராய்டில் தான் அயோடின் அதிகம் உள்ளது அது குறைவானால் இளம் வயதினருக்கு மன வளர்ச்சி, உடல் வளர்ச்சி மற்றும் ஹார்மோன் குறைபாடு ஏற்படும். இந்த பாதிப்பு ஆண்களை விடப் பெண்களுக்கு  அதிக பாதிப்பைத் தருகிறது. முக்கியமாக திருமணத்திற்குப் பின்பு பெண்கள் இந்த பாதிப்பை அதிகம் எதிர்கொள்ளுகிறார்கள். அதுவும் பெண்களின் கர்ப்பகாலத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். முக்கியமாக கருவில் உள்ள குழந்தை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும். பாவ கிரகங்கள் என்ன வேலை செய்தாலும் அவற்றுக்கு ஏற்ப தீர்வை மனிதக்குலம் அறிவியல் சார்ந்த மருத்துவத் துறையில் ஆராய்ந்து கொண்டு தான் இருக்கிறது.

தைராய்டு இயக்கம் மருத்துவம் கூறுவது என்ன?

தைராய்டு  என்பது கழுத்து முன்பகுதியில், வண்ணத்துப்பூச்சியின் வடிவில் காணப்படும் ஒரு நாளமில்லா சுரப்பி ஆகும். இங்கு தான் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்கப்படுகிறது. இந்த சுரப்பியின் செயல்பாடு அதிகமாகவோ குறைவாகவோ மாறுபடும் (ஹைப்போ/ஹைப்பர் தைராய்டிசம்). இவை சரியான விகிதத்தில் ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் துணைகொண்டு   உடலில் உள்ள முக்கிய பாகங்களை இயக்க மற்றும் திசு வளர்ச்சிக்கு உதவுகிறது. இந்த சுரப்பி உணவு செரிமானத்திற்கும், மூளை மற்றும் இதயத்துடிப்பு செயல்படுவதற்கும் முக்கிய ஊக்கியாகும். 

தைராய்டு ஹார்மோன்கள் சரியான அளவில் சுரக்காவிட்டால்,  உடலின் முக்கியமான பாகங்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். தைராய்டு சுரப்பி இருதயம், மூளை மற்றும் நம் உடலின் பல முக்கிய செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உருவாக்குகிறது. கருப்பையில் உள்ள குழந்தை நன்கு வளர்வதற்குத் தாயிடமிருந்து தைராக்சின் ஹார்மோன், சரியான அளவில் சென்றாக வேண்டும். அப்படிக் கிடைக்காதபோது, குழந்தைக்கு மூளை நரம்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கும்.

நோயின் அறிகுறிகள்

உடலில் அதிக எடை கூடுதல் / குறைத்தல், மாதவிடாய் கோளாறு, கட்டுப்படுத்த முடியாத குளிர், தோல் கடினத்தன்மை, சருமம் உலர்வது மற்றும் வெளிரிய தன்மை, மறதி, தூக்கமின்மை, பதட்டம், மலச்சிக்கல், விரல் நகங்கள் நொறுங்குதல், முடி கொட்டுதல், உணவு முழுங்குவதில் கடினம், தொண்டையில் வீக்கம் அல்லது கட்டி, கழுத்து வலி, குரலில் மாறும் தன்மை, மூச்சு பிரச்னை, பெண்கள் ருது ஆக பிரச்சனை, கரு பாதிப்பு , உடல் மற்றும் மனச்சோர்வு என்று பல்வேறு பாதிப்புகள் ஏற்படுத்தும்.

தைராய்டு சுரப்பி பிரச்னையும் - கிரகங்களும் பாவங்களும்

சுரப்பி என்றவுடன் அவற்றுக்கு முக்கிய காரணியாக நீர் கிரகம் மற்றும் ரத்த நாளங்கள் என்று கூறப்படும் செவ்வாய், அதோடு கழுத்து பகுதி மற்றும் நரம்பு என்றவுடன் புதன் கிரகம் சம்பந்தப்படும். அவற்றோடு சேரும் கிரகங்கள் அந்த அங்கத்தைப் பாதிக்கும் எடுத்துகாட்டாக சூரியன் நீச்சம் அல்லது ரிஷபம், மகரம், கும்பம் ஆகிய பகை ராசியில் வலுவிழந்து, புதன் மற்றும் அசுபரோடு / நீர் தத்துவத்தோடு 3,6,8,12 சம்பந்தம் பெரும்போது  இருதயம், மூளை, கண் பாதிப்பு இந்த ஹார்மோன் காரணியால் நோயின் தாக்கம் ஏற்படும்.

நோயின் பிரச்னை சிறிதாகவோ பெரிதாகவோ படம் போட்டுக் காட்ட ராகு கேது, லக்கின பாவ கிரகங்கள் முன்னே அணிவகுக்கும். சில சமயம் அழுக்கு சேர்க்கும் கிரகமான சனியும், சர்ப்ப கிரகங்களோடு, சந்திரன் சேரும் பொழுது உயிர்க்கொல்லி நோய், புற்றுநோய் வர வாய்ப்பு உண்டு.

ஒரு மனிதனின் உடலில் உள்ள நீர் தன்மையும், ரத்த நாளங்களையும் குறிப்பது சந்திரன் செவ்வாய் முக்கியமான பங்கு ஆகும். இவர்கள் பாவ வீட்டில் பாவியோடு சேர்க்கை பெரும்பொழுது இந்த நோயின் தாக்கம் அதிகம் இருக்கும். அதற்கு தசாபுத்தி வேலை செய்ய வேண்டும்.

ஒருவரின் தசாபுத்தி கிரகங்கள் முக்கியமாக நெருக்கமான பாகையில் அல்லது 6,8,12ல் வலுப்பெறும்பொழுது நோயின் தாக்கம் வெளிப்படும். கோச்சாரத்தில் தைராய்டு நோயை தரவல்ல பாவகிரகங்கள் பார்வை சேர்க்கை பெரும் பொழுது நோயின் தாக்கம் இருக்கும்.

பெண்களின் மாதவிடாய் பிரச்னை பல்வேறு காரணங்கள் இருந்தாலும் ருது ஆவதற்கு செவ்வாய் சந்திரன் முக்கிய காரணியாகும். அதனோடு தொடர் பிரச்னைக்கு தைராய்டு சார்ந்த கிரகங்கள் பாதகத்தை ஏற்படுத்தும்.

விருச்சிகமும் தைராய்டு தொடர்பு

காலப்புருஷனின் மறைவான எட்டாவது ராசியான விருச்சிகம். அங்கு குரு, புதன், சனி நட்சத்திரங்கள் உள்ளன. பெண் ராசி. உடலில் பிறப்பு உறுப்புகள் மற்றும் அதன் பாதிப்புகளைக் குறிக்கும். சில சமயம் அது செவ்வாய் வீடு இருந்தாலும் இங்கு புதன் பலம் அசுபத்தை ஏற்படுத்தும். புதன் இங்கு இருந்தால் படிப்பு அல்லது உடம்பு சார்ந்த உறுப்போ பாதிக்கும். இங்கு நீர் கிரகமான சந்திரன் நீச்சம். விருச்சிக லக்கினம் அல்லது ராசி பிறந்த பெண்களுக்கு 10ல் 6பேருக்கு தைராய்டு பிரச்னை இருக்கும். முக்கியமாக பெண்களுக்கு, புதன் நட்சத்திரமான கேட்டையில் இன்னும் ஹார்மோன் மற்றும் தைராய்டு குறைபாடு அதிகம் ஏற்படுத்தும். இவை நிறைய ஜாதக ஆராய்ச்சியில் புலப்பட்ட உண்மை.

புதன் தொண்டை மண்டலத்தில் குறிக்கும். காலப்புருஷனின் மூன்றுக்கும் ஆறுக்கும் உரியவர். கழுத்தில் உள்ள ரோகம் வெளிப்படும் பாவம். கிரகங்களில் புத்திசாலியான கிரகம் அதனால் மூளைக்கு அதிக வேலை கொடுப்பவர். உடலின் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிகள் தூண்டும் நரம்பு மண்டலத்தின் அதிபதி புதன் ஆவார். புதன் யாரோடு சேர்கிறாரோ அந்த கிரக தன்மையை  உள்வாங்கி அந்த கிரகத்தின் சுப அசுப தன்மையை வெளிப்படுத்துவார். அவ்வாறு வெளிப்படும் நேரம் தைராய்டு சுரப்பி, முக துணை உறுப்புகள், கழுத்து, தோள்பட்டை, தோல் நோய், நரம்புத் தளர்ச்சி, தொண்டை பாதிப்பு ஆகிய முக்கிய நோய் காரணியாக புதன் இருப்பார்.

விருச்சிகம், கடகம் மற்றும்  மறைவு ஸ்தானதோடு சந்திரன் சம்பந்தப்படும்பொழுது தைராய்டு சுரப்பி, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு மற்றும் அவற்றை சார்ந்த பக்கவிளைவு வெளிப்படும். அதே அசுப பாவத்தோடு சந்திரன் ராகு சேரும்பொழுது நோயின் தீவிரத்தை தரவல்லவர். சந்திரன் கேது சேரும்பொழுது இந்த நோயினால் மனசோர்வையும் தரும்.

புதனோடு குரு அல்லது ராகு நெருக்கமான பாகையில் சேரும்பொழுது பார்வை படும்போது தைராய்டு காரணியான தொண்டை  வீக்கம் அல்லது கட்டி போன்று வெளியே தெரியும். ராகு கேது வலிமை பொறுத்து ஹைப்போ அல்லது ஹைப்பர் நிலை மாறுபடும். குரு தாக்கம் உள்ளவர்கள் மது குடிப்பது மற்றும் புகைபிடிக்கக் கூடாது.   

சந்திரன் நீச்சமோ அதோடு சுரப்பி செவ்வாய் சுக்கிரன் சம்பந்தம் பட்டாலோ தைராய்டு பிரச்னை ஏற்படுத்தும். செவ்வாய் சந்திரன் வெள்ளை சிகப்பு ரத்த ஓட்டத்தைக் குறிக்கும். இந்த கிரகம் வலு அதீதமாகவோ குறைவாகவோ இருந்தால் உடலில்  மற்றும் கரு பிரச்னை அதிகம் ஏற்படும். ஒரு சிலருக்கு குரு மற்றும் ஐந்தாம் பாவம் நன்றாக இருக்கும் ஆனால் அதற்கு மாறாக நீர் கிரகம் சந்திரன் மற்றும் சுக்கிரன் நல்ல நிலையில் இருக்காது. அவர்களுக்கு இந்த சுரப்பிகள் மூலம் இயக்குநீர் (ஹார்மோன்) மற்றும் விந்து பிரச்னையை ஏற்படுத்தும். 

புத்தக குறிப்புகள் ( கடலக்குடி ஜாதக தத்துவம்)

கழுத்தில் ரோகம்: ஜோதிடத்தில் 3க்குடையவன் புதனுடன் கூடினால் கள ரோகம் உண்டாகும். மூன்றில் குளிகன் இருந்தால் விசேஷமாகக் கழுத்தில் ரோகமுண்டாகும்.

மறைவான இடத்தில் ரோகம்: கடகத்தில் விருச்சிகத்திலிருந்து பாவருடன் கூடினால் மறைவான இடத்தில் ரோகம் உண்டாகும்.

கண்டமாலை (முன் கழுத்துக் கழலை) முதலியன 6, 12 பாவத்தில் செவ்வாய் சனி - இவர்களின் யோகமிருந்து சுபரால் பார்க்கப்பட்டால் கண்டமாலை நோய் உண்டாகும். தைராய்டு சுரப்பியின் அசாதாரணமான வீக்கமே கண்டமாலை என அழைக்கப்படுகிறது. தைராய்டு சுரப்பி அதிகமாக சுரந்தாலும் குறைவாக சுரந்தாலும் (மிகைச்சுரப்பு/குறைச்சுரப்பு), தைராயிடு சுரப்பால்   வீங்குகிறது. போதுமான அளவுக்கு இயக்குநீர் சுரக்கப்படாததால் உடல் சுரப்பியைத் தூண்டும்போது அதன் வீக்கம் வெளிப்படுகிறது. பல்வேறு நோய்கள் என்றபொழுது - பதினோராம் பாவம் 6க்குரியவனுடன் சம்பந்தம் பெற்றால் பலவித நோய்க்கு உள்ளாவான். சுக்கிரன் செவ்வாய் 7லிருந்தால் அதிக நோய் பீடிக்கும்.

உடல் மனச் சோர்வு மற்றும் குழந்தை பேற்றுக்கு முக்கிய கிரகங்களைத் தவிர அவற்றோடு தொடர்புகொண்ட பாவத்தையும் ஆராய வேண்டும். முக்கியமான ஹார்மோன் மற்றும் தைராய்டு சுரப்பி நிலையை ஆரம்பத்திலேயே கண்டறிய வேண்டும். இந்த சுரப்பி முக்கியமாக கருத்தரிக்க உதவும் ஊக்கி. அதற்கு ஏற்றார் போல மருத்துவ ஆலோசனை உடன் அறுவை சிகிச்சை இல்லாமல் முன்பே கண்டறிந்து உணவு, அயோடின் சார்ந்த உணவு மூலம் அல்லது யோகா பயிற்சி மூலம் தீர்வை காண வேண்டும்.

ஒவ்வொரு வருடமும் 25ம் தேதி மே மாதம் தைராய்டு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வரும் காலங்களில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். 

Whatsapp message: 8939115647
Email : vaideeshwra2013@gmail.com

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com