கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: காக்கும் கடவுள் கெங்கையம்மன்..!

கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீர்ப்பவராய் இருப்பவர் அன்னை கெங்கையம்மன்.
கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: காக்கும் கடவுள் கெங்கையம்மன்..!


குடியாத்தத்தைக் காக்கும் கடவுளாக, கோபாலபுரம் கெங்கையம்மன் இருந்து அருள்பாலிக்கிறார்.  மனமுருக அம்மனை நினைத்தாலே போதும்; தீவினைகள் அகலும்- நல்வினைகள் தொடரும்.  நாடி வந்து வழிபட்டால் பாவங்கள் பொடிபடும்; சங்கடங்களைத் தீர்த்து நல்வழி காட்டுவாள்.

மதுரையில் மீனாட்சி, காஞ்சியில் காமாட்சி, திருச்சியில் சமயபுரத்தாள், காசியில் விசாலாட்சி... என்று ஊர்தோறும் அம்மன்கள் காக்கும் கடவுள்களாக இருந்து அருள்பாலிக்கின்றனர். இதேபோல், குடியாத்தத்தில் அருள்பாலிப்பவர் கெங்கையம்மன். இந்தப் பகுதியை மட்டுமல்ல; வட தமிழ்நாட்டு மக்களையும், கர்நாடக, ஆந்திர எல்லையோர மக்களையும் கெங்கையம்மன் காத்துவருகிறார்.

புண்ணியத் தலங்களை உள்ளடக்கிய குடியாத்தம் நகரத்தின் எட்டுத் திசைகளிலும் அருள்பாலிக்கும் எல்லைக் காவல் தெய்வங்களாக  கோபாலபுரம் கெங்கையம்மன், பச்சையம்மன், கிங்கிணியம்மன், காளியம்மன், படவேட்டம்மன், மாசுபடா அம்மன், புங்கனூர் அம்மன், அங்காளம்மன், காமாட்சியம்மன், முத்தியாலம்மன் உள்ளிட்ட தெய்வங்கள் காத்து நிற்கின்றனர்.

இவற்றில், கருணையே வடிவமாய், காட்சிக்கு எளியவளாய், சாந்த சொரூபியாய், நாடி வருவோருக்கு நல்வழி காட்டுபவராய், நினைத்தாலே சங்கடங்களைத் தீர்ப்பவராய் இருப்பவர் அன்னை கெங்கையம்மன். சில நூறு ஆண்டுகளுக்கு மேலான பழைமை வாய்ந்த இந்தக் கோயிலில் சிரசுப் பெருவிழா நூற்றாண்டுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

கோயில் அமைவிடம்: சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில், வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் இருந்து 10 கி.மீ. தொலைவில் குடியாத்தம் நகரம் உள்ளது. இங்குள்ள பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரை கி.மீ. தொலைவில், நகரின் மையப் பகுதியான கோபாலபுரத்தில், கெüண்டன்ய மகாநதியின் வடக்கு கரையில் கோயில் உள்ளது.   தலவிருட்சம் வேப்ப மரம்.

கோயில் அமைப்பு: வசிஷ்ட முனிவர் இந்த நதியில் தவம் புரிந்தததாக வரலாறு கூறுகிறது. கிழக்கு-மேற்காக அமைந்துள்ள கோயிலின் பின்புறத்தில் அரசமரமும், முகப்பில் வேப்பமரமும் அமைந்துள்ளன. இதனால், சிவனும் சக்தியும் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

கிழக்கு-மேற்காக சுமார் 250 அடி நீளத்திலும், வடக்கு-தெற்காக சுமார் 150 அடி நீள அகலத்திலும் கோயில் அமைந்துள்ளது. மூலவர் கெங்கையம்மன் 25 அடி அகலமும், 40 அடி நீளமும் கொண்ட கர்ப்பக் கிரகத்தில் கிழக்கு நோக்கிய வண்ணம் வெள்ளிக் கவசம் அணிந்து, சிம்ம வாகனத்தில் சாந்த சொரூபமாய் காட்சியளிக்கிறார்.

மூலவர் மண்டபத்தை ஒட்டியவாறு, 27 அடி நீளத்திலும், 90 அடி அகலத்திலும் மிகப் பிரம்மாண்டமான கான்கிரீட் தளத்துடன் கூடிய சிரசு மண்டபம் அமைந்துள்ளது. இங்குதான் அம்மன் சிரசு பொருத்தப்படுகிறது. மூலவர் மண்டபத்தைச் சுற்றி, துர்கை, பைரவி, வராகி, தாட்சாயிணி சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிலும் மதில் சுவர்கள் அமைக்கப்பட்டு, புதுப்பொலிவுடன் கோயில் அமைந்துள்ளது.

காக்கும் கடவுள் கெங்கையம்மன் 

இக்கோயிலுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் கோபாலபுரம் பகுதி மக்கள் கோயிலில் கங்கா தேவி, துர்கை அம்மன், கௌண்டன்ய மகரிஷி, விநாயகர் உள்ளிட்டோருக்கு சந்நிதிகளைக் கட்டியுள்ளனர்.

கோயில் வளாகத்தில் மேற்கூரை அமைத்து, துர்கையம்மன், சில அம்மன் சிலைகளை பிரம்மாண்டமாய் புனரமைத்து 2018-ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதுதவிர, ஆற்றங்கரையோரம் முனீஸ்வரர், சப்தகன்னிகள் கோயில் சந்நிதிகள், அன்னதானக் கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன.

150 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் கொடிமரம் புதுப்பிக்கப்பட்டு, 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

வழிபாடும் பூஜைகளும்..: நாள்தோறும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு தரப்படும் தீர்த்தம் அம்மை நோயைக் குணப்படுத்தும் அருமருந்தாக உள்ளது. ஆடி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடுகளும் உண்டு.

தமிழக முதல்வரின் அன்னதானத் திட்டத்தின்படி, கோயிலில் நாள்தோறும் பிற்பகலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

விழா ஏற்பாடுகள் தீவிரம்: விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் கோயில் தக்கார் வே.சங்கர், ஆய்வாளர் சு.பாரி, செயல் அலுவலர் இ.திருநாவுக்கரசு, ஊர் நாட்டாண்மையும் நகர்மன்ற முன்னாள் உறுப்பினருமான ஆர்.ஜி.சம்பத், கௌரவ ஊர் தர்மகர்த்தா கே.பிச்சாண்டி , முன்னாள் அறங்காவலர்கள், கோயில் திருப்பணிக் கமிட்டி நிர்வாகிகள், கோபாலபுரம் வாசிகள், ஸ்ரீகெங்கையம்மன் இளைஞர் நற்பணி மன்றத்தினர், நகர பொதுமக்கள் இணைந்து செய்துவருகின்றனர்.

விழாவுக்கு வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நகர்மன்றத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் செய்துவருகின்றனர். ஒன்றியப் பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை ஒன்றியக் குழுத் தலைவர் என்.இ.சத்தியானந்தம் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர் செய்துவருகின்றனர்.

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன் மேற்பார்வையில், டிஎஸ்பி கே.ராமூர்த்தி, காவல் ஆய்வாளர் லட்சுமி உள்ளிட்ட 1,700 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களின் முக்கிய நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மருத்துவத் துறை, தீயணைப்பு}மீட்புப் பணிகள் துறை, மின்வாரியம் உள்பட பல்வேறு துறை அலுவலர்களும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை அளித்துவருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com