12 ராசிக்குமான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்!

12 ராசிக்குமான செவ்வாய் பெயர்ச்சி பலன்களை நித்ய ஸன்யாஸ், ஜோதிட ஆய்வாளர் கணித்து வழங்கியுள்ளார்.
12 ராசிக்குமான செவ்வாய் பெயர்ச்சி பலன்கள்!

45 நாள்களுக்கு ஒருமுறை நிகழும் செவ்வாய் பெயர்ச்சியானது 12 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை நித்ய ஸன்யாஸ், ஜோதிட ஆய்வாளர் கணித்து வழங்கியுள்ளார்.

செவ்வாய் பெயர்ச்சி மார்கழி 12, டிசம்பர் 28(வியாழக்கிழமை) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். அடுத்த 45 நாள்களுக்கு தனுசு ராசியிலிருந்து அருளாசி வழங்க உள்ளார். 

செவ்வாய் பகவான் இருக்கும் தன்மைக்கேற்ப அதாவது நட்பு, ஆட்சி, உச்சம், குருப்பார்வை இவற்றின் அடிப்படையில் காவல்துறையில் பணியை வழங்குவார். காவலராகவோ, காவல்துறை அதிகாரியாகவோ, காவல்துறை உயர் அதிகாரியாகவோ, படைத் தளபதியாகவோ பதவியை வழங்குபவர். 

துணிச்சல், முரட்டுத் துணிச்சல், கோழைத்தனம் இதற்குக் காரணமாக இருக்கும் செவ்வாய் ஏழாம் வீட்டோடும், 7-ம் வீட்டு அதிபதியுடனும் அல்லது 3-ம் வீட்டு அதிபதியோடும் தொடர்புகொள்ளும் வகையில் ஒருவரின் காமத்தை மாற்றியமைப்பவர். பொதுவாக இது 2, 4, 7, 8, 12ல் இருக்கும்போது செவ்வாய் தோஷமாகக் கருதப்படுகிறது. 

மழை, கனமழை, புயல் காற்று, பூகம்பம், போர் விபத்து இவற்றுடனும் தொடர்புடையவர். செவ்வாய் ராகுவுடனோ, சனியுடனோ சேரும்போது அவர் காவல் தெய்வங்களாக அதாவது கையில் அரிவாளுடன் குதிரை ஏந்திநிற்கும் காவல்தெய்வங்களைக் குறிப்பவை. செவ்வாய் குருபார்வையுடன் சுபத்துவமாக இருந்தால் முருகன் போன்ற சாத்வீக தெய்வதைக் குறிப்பவையாகும். 

இதற்கு முன்னதாக விருச்சிக ராசியிலிருந்த செவ்வாய் ஆட்சியடைந்து அவரின் பார்வை மிகவும் கொடூரமாக இருந்தது. தற்போது தனுசு ராசிக்கு வரும் செவ்வாய் குருவின் சாத்வீகமான கிரகத்தின் வீடாக உள்ளது. குரு மேஷத்திலிருந்து பார்ப்பதால் அவரின் பார்வையும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. அவர் பார்வையின் கெடுதல்கள் கிட்டத்தட்ட 70 சதவீதம் குறைந்து ஏறத்தாழ அது நன்மையை உண்டாக்கக்கூடிய வாய்ப்பும் அதிகமாக உள்ளது. 

12 ராசிக்குமான செவ்வாய் பெயர்ச்சியும் அதன் பலன்களும்.. 

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். 8-ம் அதிபதியும் செவ்வாய். 9-ம் வீட்டிற்குச் செல்லும் செவ்வாய் குருவின் பார்வை பெறுவதால் தந்தைவழி உறவுகளைப் பலப்படுத்தும். 12-ம் இடத்தைப் பார்க்கும் செவ்வாயால் தந்தைக்கு மருத்துவச் செலவு உண்டாகும். உடல் உபாதை இருந்தால், மருத்துவச் சிகிச்சை மூலமாகக் குணமடையும். 3-ம் இடத்தைப் பார்ப்பதால் துணிச்சலான காரியங்களைச் செய்து அதில் வெற்றியடைவர். 4-ம் வீட்டைப் பார்க்கும் குருவால் தாய்க்கு விபத்து போன்ற சிறு உபாதைகள் ஏற்படும். 

ரிஷபம்

ரிஷப ராசிக்கு 7-ம் வீட்டு அதிபதி 8-ம் வீட்டுக்குச் சென்று, சுபத்துவமான குருவின் பார்வை பெறுகிறார். 12-ம் வீட்டைப் பார்க்கும் குருவால் வெளிநாடுச் செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். ஏழாம் வீட்டு அதிபதி 8-ம் வீட்டுக்குச் செல்வதால் மனைவியுடன் தற்காலிக பிரிவு ஏற்படும், ஆனால் அது லாபத்திற்கான பிரிவாக அமையும். 8-ம் இடத்திற்குச் செல்லும் குரு 11,2,3ம் வீட்டைப் பார்க்கிறார். விவசாயிகளுக்கு வருமானம் பெருகும். உங்கள் வார்த்தைகளால் லாபமடைவீர்கள், காரியங்களைச் சாதிப்பீர்கள். துணிச்சல் அதிகப்படும். இளைய சகோதரருடன் இணக்கம் ஏற்படும். 

மிதுனம்

இந்த செவ்வாய் பெயர்ச்சி 6-க்குடைய செவ்வாய் 7-ல் அமர்ந்து குருவின் பார்வை பெறுகிறார். இதனால், மனைவி, மனைவியின் உறவினருக்காக கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும், அது நல்ல காரியத்திற்காக அமையும். 7-ல் அமர்ந்த செவ்வாய் குருவின் பார்வை பெறுவதால் மிதுன ராசிக்கு நல்ல துணிச்சல் ஏற்படும். 2ம் வீட்டைப் பார்க்கும் செவ்வாயால் உங்கள் பேச்சினால் சில காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். 

கடகம்

செவ்வாய் ராசியை 8-ம் பார்வையாக பார்க்கிறார். இது துர் பார்வை அதாவது கொடூர பார்வை. ஆனால் குருவின் பார்வை பெற்று கடக ராசியைப் பார்ப்பதாலும், அஷ்டம சனி நடைபெற்று வருவதாலும் கவனமாக இருப்பது நல்லது. விபத்துக்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதிகப்படியாக ஏற்பட வாய்ப்பில்லை, ஏன்னென்றால் செவ்வாய் 6-ம் வீட்டு குருவின் பார்வை பெறுவதால் நிலப் பத்திரங்களை வைத்து கடன் பெற வாய்ப்புள்ளது. மிகப்பெரிய உடல் உபாதைகள் இருந்தால் அறுவை சிகிச்சையின் மூலம் சரியாக வாய்ப்புள்ளது. தந்தைவழி சொத்தில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். சிலருக்கு நல்ல பயணங்கள் அமையும். வீடு, நிலம் வாங்க வாய்ப்பு அதிகம்.

சிம்மம்

சிம்மத்திற்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அதிக நன்மையை ஏற்படுத்தப்போகிறது. 4, 9-க்கு அதிபதியாகிய செவ்வாய் குருபார்வை பெறுவதால் தந்தை சார்ந்த விஷயங்களில் வளர்ச்சி ஏற்படும். தந்தையின் உறவினர்களால் இணக்கம் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களால் நல்ல வருமானம் கிடைக்கும். 4-ம் வீட்டு அதிபதியை செவ்வாயை குரு பார்ப்பதால், தாய் அரசு ஊழியராக இருந்தால் உத்தியோக உயர்வு ஏற்படும். புதிய வீடு, மனை, நிலங்கள் வாங்கவும், புதிய வாகனங்கள் வாங்கவும் ஏற்ற தருணம் இது. அதற்கான வாய்ப்புகள் ஏற்படும். முக்கியமாக இந்த செவ்வாய் பெயர்ச்சி சிம்ம ராசிக்கு மிகப்பெரிய நன்மைகளை ஏற்படுத்தும். 

கன்னி 

4-ம் வீட்டில் அமரும் செவ்வாயை குரு பார்ப்பதால் மனைவி, நண்பர்களிடையே இணக்கமான சூழல் ஏற்படும். தாயாருக்கு சரியான மருத்துவ உதவி கிடைத்து உடலும், உள்ளமும் பலப்படும். செவ்வாய் 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தைப் பார்ப்பதால் வேளான் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழில் சார்ந்த துன்பங்கள் அகலும். செவ்வாய் தனுசு ராசியிலிருந்து கன்னி ராசியைப் பார்ப்பதால் தொழில் வளர்ச்சியடையும். லாபம் அதிகரிக்கும். 

துலாம்

2,7-ம் வீட்டு அதிபதியான செவ்வாய் 3-ம் இடத்துக்குச் செல்கிறார். பொதுவாக மூன்றாம் இடம் துணிச்சல், செயல், வீரிய ஸ்தானமாகும். இதனால் எப்போதும் நமையைச் செய்யும். முடிக்கமுடியாத காரியங்களையும் எளிமையாக முடிப்பார்கள். இளைய சகோதரர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். 3ம் இடத்தில் அமர்ந்த செவ்வாய் 6ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகள் அகலுவார்கள். நோய், நொடிகள் குணமாகும். 9, 10-ம் வீட்டைப் பார்க்கும் செவ்வாயால் தந்தையின் உடல்நிலை மேம்படும். தொழில் விருத்தியடையும் நல்ல மகசூல் கிடைக்கும். 

விருச்சிகம்

ராசியதிபதி 2-ம் வீட்டுக்குச் செல்வதாலும், குருவின் பார்வை கிடைப்பதாலும் விருச்சிக ராசிக்கு பேச்சில் அதிகாரம் இருந்தாலும், அவை மற்றவர்களை புண்படுத்தாது. அதேசமயம் நல்ல காரியத்தை சாதிக்க உதவும். பொதுவாக உடல், உள்ளம் சார்ந்த பிரச்னைகள் விலகித் தெளிவு ஏற்படும். வருமானம் உயரும். அரசு அதிகாரியாக இருந்தால் பதவி உயர்வு கிடைக்கும். 

தனுசு 

12,5-க்குடைய செவ்வாய் தனுசு ராசிக்கு வருவதாலும், குருவின் பார்வை கிடைப்பதாலும் சுப காரியங்களுக்கான எதிர்பாராத பயணம் ஏற்படும். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீடு, நிலம் சார்ந்த செலவுகள் இருக்கலாம். 5-ம் வீட்டு அதிபதியான செவ்வாயை குரு பார்ப்பதால் புத்திர ஸ்தானம் வலுவடைகிறது. இந்த ராசியின் மகன், மகள்கள் சுபமான பலன்கள் அடைவார்கள். சமீபத்தில் திருமணம் நடைபெற்ற தம்பதிகளாக இருந்தால் ஆண் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது. வீடு, பூர்வீகச் சொத்தில் செலவு ஏற்படும். வீட்டைப் புதுப்பிப்பீர்கள். உடல் உபாதைகள் அகலும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். 

மகரம்

11,4-க்குரிய செவ்வாய் விரயத்துக்கு வருவதால் வீடு, நிலம் சார்ந்த எதிர்பாராத செலவுகள் ஏற்படும். 11-ம் வீட்டுக்குரிய செவ்வாய் 12-ல் மறைவதால் விவசாயிகளுக்கு வருமானம் குறையும். மனைவி வழி உறவினர்களால் செலவு ஏற்படும். பூர்வீகச் சொத்து, வீட்டைப் பிரித்துக்கொடுக்கும் வாய்ப்பு ஏற்படும். இந்த ராசிக்கு இயல்பாக வரும் வருமானமும் செவ்வாய் பெயர்ச்சியால் குறைய வாய்ப்புள்ளது. 

கும்பம்

கும்ப ராசிக்கு ஜென்ம சனி நடைபெறுவதால், விருச்சிகத்தில் இருந்து செவ்வாயின் கொடூர பார்வையால், உடலாலும், உள்ளத்தாலும் நலிவடையச் செய்தது. தனுசு ராசிக்கு வரும் செவ்வாய் கும்ப ராசிக்கு மிகப்பெரிய விடுதலையை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். 11-ம் வீட்டுக்கு வரும் செவ்வாய் லாபத்தை ஏற்படுத்தும். விவசாயத்தில் மிகப்பெரிய லாபம் கிடைக்கும். வேளாண்மை சார்ந்த தொழிலில் பலன் கிடைக்கும். ஆனால் வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது கவனம் தேவை. பூர்வீகச் சொத்துக்களால் நல்ல தகவல் கிடைக்கும்.  

மீனம்

2,9-க்குடைய செவ்வாய் 10-ல் அமர்கிறார். ஏற்கனவே குரு 2-ல் அமர்ந்து நல்ல பலன்களை வாரி வழங்கி வருகிறார். தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். காவல்துறை, ராணுவம் துறையில் மிகப்பெரிய உயர்பதவி கிடைக்கும். மீன ராசிக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி மிகப்பெரிய நற்பலன்களை அளிக்கப்போகிறது. துணிச்சல், தன்னம்பிக்கை பிறக்கும், அதேசமயம் தாயாருக்கு வைத்தியச் செலவு ஏற்படும். இந்த ராசியினுடைய மகன், மகள்கள் அரசுத்தேர்வு எழுதியிருந்தால் அதில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com