
ஜோதிட சாஸ்திரத்தில் நீதிமான், தர்மவான் என்று போற்றப்படும் சனிபகவான், ஏழை, பணக்காரன், உயர்ந்தவர், தாழ்ந்தவர், மந்திரி, தொழிலதிபர், பிச்சை எடுப்போர் என எந்தப் பாகுபாடும் இவருக்கு கிடையாது. இவரைப் பொருத்தவரை எல்லோரும் சமம். அவரவர் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலாபலன்களை வழங்கி வருகிறார். வாரி வழங்குவதில் இவருக்கு இணை இவரே. அதேபோல் கஷ்ட நஷ்டங்களை கொடுப்பதிலும் தயவு தாட்சண்யமின்றி செயல்படுவார். அதனால்தான் 'சனி போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை" என்று கூறுவார்கள்.
சனி கிரகமும், யோகங்களும்!
யோகம் என்பது கிரகங்களின் சேர்க்கையால் ஏற்படும் நல்ல பலன்களைக் குறிக்கின்றது. யோகம், அதிர்ஷ்டம், திரவிய லாபம், வெற்றி, நல்ல கல்வி, குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவற்றைக் குறிக்கின்றது. சனி கிரகத்தினால் பல யோகங்கள் ஏற்படுகின்றன. சனி கெட்ட கிரகமே அல்ல. சனி கொடுத்தால் எவர் தடுப்பார் என்று கூறப்படுகின்றது.
சக யோகம்
சனி 1,4,7,10 ஆகிய கேந்திர ஸ்தானங்கள் ஏதாவது ஒன்றில் அமர்ந்து அது சனியுடைய சொந்த ஆட்சியான மகர, கும்ப இராசியாகவும் அமைந்துவிட்டால் இந்த யோகம் ஏற்படும். சனி உச்ச நிலைமையடைந்தாலும் இந்த யோகம் உண்டாகின்றது. இந்த யோகத்தை உடையவர் பல வேலையாட்களை அடக்கி ஆள்பவராகவும், ஒரு பெரிய ஸ்தானத்திற்கு தலைவராகவும் இருப்பர்.
இரவி யோகம்
சூரியன் லக்னத்திலிருந்து பத்தாவது வீட்டிலும், பத்தாமிடத்திற்கு அதிபதி சனி கிரகத்துடன் இணைந்தும் மூன்றாவது வீட்டில் காணப்பட்டால் இந்த யோகம் உருவாகின்றது. இந்த யோகத்தை உடையவர் அகன்ற தாமரை மலரைப் போன்ற கண்கள் உடையவர்களாக இருப்பர்.
தன யோகம்
சனி தன்னுடைய சொந்த வீட்டில் அமர்ந்து அது லக்னத்திற்கு எட்டாவது வீடாக அமைய வேண்டும். செவ்வாயும், புதனும் இணைந்து லாப ஸ்தானமான பதினோராம் இடத்தில் இருக்க வேண்டும். இந்த அமைப்பை உடையவர்கள் மிகவும் யோகம் உடையவர்கள். அதிக அளவில் பொன் சம்பாதித்து தனவந்தராக ஆகும் யோகம் உடையவர்.
பஹீபுத்ர யோகம்
ராகு நவாம்சத்தில் லக்னத்திற்கு ஐந்தாமிடத்தில் அமர்ந்து, அந்த இடம் சனி கிரகத்திற்கு சொந்தமான நவாம்ச வீடாக அமையாமல் இருந்தால் இந்த யோகம் ஏற்படுகின்றது. இந்த யோகத்தை உடையவருக்குப் பல குழந்தைகள் அமையும். ராகு எப்பொழுதும் சனியுடைய பலத்தைத்தான் கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...