
குடியாத்தம் திருமுறை நன்னெறிச் சங்கம் சார்பில், கோயில்கள், ஆன்மிகப் பற்றாளர்கள் விரும்பும் வீடுகளில் சொற்பொழிவுகள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 180-க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நடத்தி, பல ஆயிரம் பேருக்கு நல்லதொரு கருத்துகளை இந்தச் சங்கத்தினர் செய்துவருகின்றனர். சங்கத் தலைவர் எம்.டி.சதானந்தம், செயலாளர் வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்துவருகின்றனர்.
* குடியாத்தம் ஞானாலயா வள்ளலார் கோட்டம் சார்பில், நாள்தோறும் வேன்களில் உணவு ஏற்றிக் கொண்டு நகரின் முக்கியச் சாலைகள், தெருக்களில் காலை 11 மணி முதல் பிற்பகல் வரை சென்று, நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவற்றோருக்குத் தேடித் தேடி உணவு அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் இந்தச் சேவையில் பல ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
* புலவர் வே.பதுமனார் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர், மாசுபடா அம்மன் கோயில்களின் வரலாற்று நூல்கள் உள்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தலைசிறந்த ஆன்மிகச் சொற்பொறிவாளர் மட்டுமின்றி, உலகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தமிழ்ப்பணியை ஆற்றிவருபவர்.
* குடியாத்தம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் என்ற அருள்மிகு சிவகாம சுந்தரி உடனுறை பாலசார்தூலீஸ்வர் கோயில் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த சிவத் தலம். இந்தக் கோயிலில் நாள்தோறும் பூஜைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் என எப்போதும் விழாக்கோலம் பூண்டிருக்கும் வகையில், சிவ பக்தர்கள் தொண்டாற்றி வருகின்றனர். முறைப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம், தேர்த் திருவிழா, திருப்பணிகள் என கோயிலை நல்லமுறையில் புனரமைத்து வருகின்றனர்.
இதற்காக, நெல்லூர்பேட்டை பகுதிவாழ் மக்கள், நகர மக்கள், சுமார் 60 ஆன்மிக கமிட்டிகள் இந்து சமய அறநிலையத் துறையோடு இணைந்து, விழாக்களை நடத்தி வருகின்றனர்.
நகர்மன்றத் தலைவர் எஸ்.சௌந்தரராஜன், குடியாத்தம் முத்தமிழ்ச் சுவைச்சுற்ற நிறுவனர் புலவர் வே.பதுமனார், ஆருத்ரா, அப்பர் விழா கமிட்டிகளின் தலைவர் எம்.எஸ்.திருநாவுக்கரசு, ஆன்மிகப் பற்றாளர் எம்.கே.பொன்னம்பலம், திருத்தேர் கமிட்டி தலைவர் எம்.எஸ்.அமர்நாத், மாணிக்கவாசகர் குரு பூஜை கமிட்டி தலைவர் கே.சதீஷ், திருவாதிரை கமிட்டி, சிவவிடை கைங்கர்ய சங்க நிர்வாகி மோகன்ராம், பவித்ர உற்சவ கமிட்டி நிர்வாகிகள் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.பூபதி, ஜே.கே.என்.பழனி, நித்ய பூஜை கமிட்டி தலைவர் எஸ்.எஸ்.சந்தானம், வில்வாத்ரி அறக்கட்டளைத் தலைவர் எம்.என்.ஜோதிகுமார், சிவராத்திரி கமிட்டி தலைவர் கிருபானந்தம் உள்பட பலர் கோயில் விழாக்களை நடத்திவரும் முக்கியப் பிரமுகர்கள்.
* நெல்லூர்பேட்டை பாவோடும் தோப்பில் உள்ள வராகி செல்லியம்மன் கோயிலில் பிரதி அமாவாசைதோறும் திதி தர்ப்பண பூஜையை ஒன்றரை ஆண்டாக, திதி தர்ப்பணம் பூஜை குழுவினர் இலவசமாக நடத்தி வருகின்றனர். முன்னோர்களை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்த பூஜையில் பங்கேற்க வருகை தரும் பக்தர்கள் பஞ்ச பாத்திரம் கொண்டுவந்தால் போதும்- கட்டணம் எதுவும் இல்லை.
* குடியாத்தம் யுவராஜ் பெட்ரோல் பங்க் உரிமையாளரான எஸ்.அருணோதயம் தினமும் மதிய நேரத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்குவதை பல ஆண்டுகளாக வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் வெளியூர் செல்லும் நேரத்திலும், பிற்பகலில் உணவுப் பொட்டலங்களை அவரது நிறுவன ஊழியர்கள் வழங்குவது உண்டு.
* லயன்ஸ் சங்கத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் எம்.கே.பொன்னம்பலம் ஆன்மிகம், சமூக சேவையில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். குடியாத்தம் பேருந்து நிலையம், நெல்லூர்பேட்டை கணபதி கூட்டுறவு சங்க வளாகம் அருகே, சித்தூர் கேட் உள்ளிட்ட சில பகுதிகளில் "இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்களுக்கே..' என்ற திட்டத்தின்படி வைத்துள்ள பெட்டியில் ஆதரவற்றோருக்கு உணவு, உடைகள் நாள்தோறும் வைக்கப்படுகின்றன. கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்படும் இந்தத் திட்டத்தில் பல ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
* திருமுறை நன்னெறிச் சங்க பொருளாளரும், வில்வாத்ரி அறக்கட்டளைத் தலைவருமான எம்.என்.ஜோதிகுமார் கோயில்களில் வில்வ மரங்கள் நடுவது தொடர்பான சேவையைப் புரிந்து வருகிறார்.
* அபிராமி கல்லூரி நிர்வாக அலுவலரான க.முருகவேல், அம்மணாங்குப்பத்தில் உள்ள குடியாத்தம் மன வளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவராக இருக்கிறார். கல்வி நிலையங்களில் "யோகமும், வல்லமையும்' என்ற தலைப்பில் 6 மாத இலவசப் பயிற்சி முகாம்களை நடத்தி வருகிறார்.
இதையும் படிக்க | கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: குடியாத்தத்தின் பெருமை.!
சாதனையாளர்கள்....
வேலூர் மாவட்டம் ஆன்மிக பூமியாக, எண்ணற்ற கோயில்களைக் கொண்டுள்ளது. சித்தர்கள், தேசப் பற்றாளர்கள் என பெருமைமிக்கோர் வாழ்ந்த மண். இவற்றில் சிறப்புமிக்கது குடியாத்தம். இந்த நகரம், அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பிறந்த பலர் இன்று முக்கிய பிரமுகர்களாய், சாதனையாளர்களாய் ஜொலித்துவருகின்றனர். இவர்களில் சிலரைப் பற்றி அறிவோமா?
* கொத்தகுப்பம் கிராமத்தில் பிறந்த ஜி.விசுவநாதன் மக்களவை உறுப்பினராக, மாநில அமைச்சராகப் பதவி வகித்தவர். இன்று வேலூரில் வி.ஐ.டி. என்ற உலகப் புகழ்பெற்ற நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தராக, பல லட்சம் மாணவர்களுக்கு உயர்கல்வியை அளித்துவருகிறார்.
* சித்தாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளராக இருந்துவருகிறார். நாடறிந்த அரசியல் தலைவர். மாநிலங்களவை உறுப்பினராக இரு முறை பதவி வகித்தவர்.
* செட்டிகுப்பம் கிராமத்தில் பிறந்த செ.கு.தமிழரசன் நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவர். இந்திய குடியரசுக் கட்சியின் மாநிலத் தலைவராக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்துவரும் முக்கிய அரசியல் தலைவர்.
* செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த பிரேமலதா, தேமுதிக பொருளாளராக இருந்து வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி.
* இடைத்தேர்தலில் எம்எல்ஏவாக்கி, முதல்வராகப் பதவியேற்ற காமராஜரை நீடிக்கச் செய்த குடியாத்தம் தொகுதியில், கல்விச் சேவையை ஆற்ற வேண்டும் என்ற சிறுநீரகவியல் நிபுணர் பி.சௌந்தரராஜனின் முயற்சியால் காக்காதோப்பு கிராமத்தில் உருவானதுதான் அத்தி கல்விக் குழுமம். அத்தி நர்ஸிங் கல்லூரி, அத்தி இயற்கை, யோகா மருத்துவக் கல்லூரி, குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி.. என்று பல்வேறு கல்வி நிறுவனங்களின் வாயிலாக, அவர் சிறந்த கல்விச் சேவையை அளித்துவருகிறார்.
* சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அமலு விஜயன் 2006-இல் ஒன்றியக் குழு உறுப்பினராகப் பொறுப்பேற்று, சிறந்த மக்கள் பணியாற்றினார். திமுகவில் தொடர் கட்சிப் பணி, மக்கள் பணியால் 2021-இல் குடியாத்தம் எம்எல்ஏவாகி, திறம்பட பணியாற்றிவருகிறார்.
* குடியாத்தத்தில் நெசவுக் குடும்பத்தில் பிறந்த எஸ்.சௌந்தரராஜன், அரசு திருமகள் ஆலைக் கல்லூரியில் 1980-களின் இறுதியில் மாணவர் பேரவைத் தலைவரானார். அப்போது, அமைச்சர்களை அழைத்து கல்லூரி விழாக்களை நடத்தி, கல்லூரி வளர்ச்சிக்கு வித்திட்டார். பின்னர், 1996-இல் தனது 25-ஆம் வயதிலேயே நகர்மன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார். 10 ஆண்டுகள் நகர்மன்ற உறுப்பினராகவும் (அதில் 5 ஆண்டுகள் நகர்மன்ற துணைத் தலைவர்) இருந்தவர். நகர்மன்றத் தலைவராகச் சிறந்த சேவையை ஆற்றிவருகிறார். பதவியேற்ற ஒன்றரை ஆண்டுகளுக்குள் கௌண்டன்ய மகாநதியில் வெள்ளத் தடுப்புச் சுவர் அமைக்கும் திட்டம், நகரில் 4 இடங்களில் பூங்காக்கள், மக்கள் நலன் காக்கும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் என்று பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.
நகர்மன்றத் துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, பட்டதாரிகள் த.புவியரசி, டி.பி.என்.கோவிந்தராஜ், எம்.எஸ்.குகன், ம.மனோஜ், அ.சிட்டிபாபு, தீபிகா, அர்ச்சனா நவீன் ஆகியோரும், மக்கள் சேவகர்களான ஜி.எஸ்.அரசு, கே.வி.கோபாலகிருஷ்ணன், பி.மேகநாதன், கற்பகம் மூர்த்தி, ராணி பாஸ்கர், கவிதா பாபு, லாவண்யா குமரன் உள்ளிட்ட அனைத்து நகர்மன்ற உறுப்பினர்களும் நகர மக்களின் வளர்ச்சிக்காகப் பெரும் பங்காற்றிவருகின்றனர்.
ஹைதராபாத்தில் ஐ.டி. இயக்குநராகப் பணியாற்றி கரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு வந்த சிட்டிபாபுவின் கரோனா சேவை, ஆற்றில் வெள்ள நிவாரணப் பணிகளாலேயே நகர்மன்ற உறுப்பினராக அரசியல் களத்தில் இழுத்துவிட்டது. கரோனா நிவாரணமாக, பல ஆயிரம் பேருக்கு உதவிய ம.மனோஜின் சிறப்பான சேவையை மக்கள் இன்றும் பாராட்டுகின்றனர்.
* விவசாயக் குடும்பத்தில் பிறந்த என்.இ.சத்யானந்தத்தின் திமுக தீவிரப் பணியால், ஒன்றியக் குழுத் தலைவராகப் பதவியேற்றுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் சிறந்த மக்கள் பணிகளை ஆற்றி, கிராமங்களில் குடிநீர் பிரச்னை, சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகளை பெருமளவு நிறைவேற்றியுள்ளார்.
இதையும் படிக்க | கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்..!
* குடியாத்தம் கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரனின் தந்தை மறைந்த கே.எம்.கோவிந்தராசன் நகர்மன்றத் தலைவராக இருந்தவர். ராஜேந்திரனின் மனைவி திலகவதியும் 1996-2001 வரை நகர்மன்றத் தலைவராக இருந்தவர். நகர வளர்ச்சிக்கு இவரது குடும்பத்தாரின் பங்கு முக்கியமானது. திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, கே.எம்.ஜி. கலை}அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்டற்றில் 60 ஆண்டுகளாகக் கல்விச் சேவை தொடருகிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு நல்லதொரு கல்வியை அளித்து, அவர்களை வாழ்க்கையில் உயர்த்தியதில் இந்தக் கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய பங்குண்டு.
* நெசவுத் தொழிலாளியாக இருந்த ஜே.கே.என்.பழனி அதிமுகவில் இணைந்து அரசியல் பணியாற்றினார். படிப்படியாக உயர்ந்து நகரச் செயலாளரானார். நகரின் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்ததில், முக்கியப் பங்கு இவருக்கு உண்டு. ரோட்டரி மாவட்ட ஆளுநராக இருந்து, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் சேவைப் பணியை ஆற்றி வருகிறார். குடியாத்தம் கம்பன் கழக நிறுவனராக இருந்து, தமிழ்ப் பணிகளையும் ஆற்றி வருகிறார்.
* குடியாத்தம் கம்பன் கழகச் செயலாளர் கே.எம்.பூபதி, தனது இளம் வயதிலேயே பிரபல வழக்குரைஞரானார். தமிழ்ப் பணி, ஆன்மிகப் பணி, ரோட்டரி சங்கம், தொண்டு நிறுவனங்களின் வாயிலாகச் சமூக சேவை என்று பல்வேறு பரிமாணங்களில் மக்கள் பணிகளை ஆற்றிவருகிறார்.
* பி.இ.பட்டதாரியான வி.ராமு, தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய ஊராட்சியான கொண்டசமுத்திரம் ஊராட்சி மன்றத் தலைவராக தொடர்ந்து 3 முறை தேர்வு செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் பதவி வகித்தவர். இவரது பதவிக் காலத்தில் ஊராட்சி நல்லதொரு வளர்ச்சியைப் பெற்றது.
* வழக்குரைஞர் கே.மோகன்ராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக இருந்து திறம்பட மக்கள் பணியாற்றியவர். ஆன்மிகம், சமூக சேவைகளில் தொடர்ந்து தன்னை முன்னிறுத்திக் கொண்டு செயல்பட்டு வருபவர்.
தொகுப்பு: தி.நந்தகுமார், கே.நடராஜன்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...