
கோபாலபுரம் கெங்கையம்மனை மனமுருக வேண்டினால் நினைப்பதை அருள்வார். இந்த வகையில் வேண்டிய வரத்தை அளித்த அம்மனுக்கு காணிக்கையாக தேங்காய்களை அளித்து, நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
தேங்காய் உடைத்தல்: ஊர் மக்கள் தாங்கள் விளைவித்த விளைபொருள்களை கடவுளுக்குப் படைப்பது வழக்கம். காரைக்காலில் மாங்கனித் திருவிழா, டெல்டா மாவட்டங்களில் நெல் திருவிழா என்று விளைபொருள்களை மையப்படுத்தியே திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதன்படியே, குடியாத்தம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தேங்காய் உற்பத்தி மிகவும் அதிகம் என்பதால், தாங்கள் வணங்கும் கெங்கையம்மனுக்கு தேங்காய்களை காணிக்கையாகச் சாற்றி வழிபடுகின்றனர்.
இந்த லட்சக்கணக்கான சிதறு தேங்காய்களை அமிர்தி மலையில் இருந்து வரும் நூற்றுக்கணக்கான மலைவாசிகள் சேகரித்து, ஆற்றங்கரையில் மூட்டைகளாக கட்டி, வேன்களில் எடுத்துச் செல்கின்றனர். இவற்றை காயவைத்து செக்கு ஆட்டி உணவுக்கும் உடலுக்கும் செக்கு எண்ணைய் பயன்படுத்துவதாக அவர்கள் கூறுகின்றனர். பல தலைமுறைகளாக இவர்கள் தேங்காய் சேகரிக்கின்றனர்.
இதையும் படிக்க | கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: காக்கும் கடவுள் கெங்கையம்மன்..!
கூழ்ஊற்றுதல்: அம்மனுக்கு காப்புக் கட்டியவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூழ் ஊற்றியும், மாவிளக்கு சாத்தியும் வழிபடுவதும் உண்டு.
அங்கப்பிரதட்சணம்: தங்களது வேண்டுதல் நிறைவேறியதற்காக கோயிலில் பெண்கள் அங்கப்பிரதட்ணம் செய்வர்.
அடிதண்டா: பக்தர்கள் தங்களது இரு கால்களையும் அடி மேல் அடி வைத்து வேண்டி கோயிலை வலம் வருவர்.
ஆடுகள், கோழிகள் பலியிடுதல்: ஆடுகள், கோழிகளை வெட்டி அம்மனை வழிபட்டு நேர்த்திக்கடனையும் செலுத்திவருகின்றனர்.
இதையும் படிக்க | கெங்கையம்மன் கோயில் சிரசு பெருவிழா: குடியாத்தத்தின் பெருமை.!
பெண் வேடம் தரித்தல்: ஆண் பக்தர்கள் பெண் வேடமணிந்து அம்மனை வழிபடுதல் போன்ற நூதன முறையில் நேர்த்திக் கடன் செலுத்துவதும் வழக்கமாக இருக்கிறது.
அம்மன் மாலையிடுதல்: கெங்கையம்மனுக்கு காப்பு கட்டியவுடன் ஆர்.ஜி.கார்த்திகேயன் தலைமையிலான நூற்றுக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் ஆடை அணிந்தும், கெங்கையம்மன் மாலை அணிந்தும் விரதம் இருந்து வழிபடுகின்றனர். இரு வாரங்கள் விரதமிருந்து அம்மனுக்காக நேர்த்திக் கடன் மேற்கொள்கின்றனர். சிரசு பெருவிழாவன்று, மாலையை அம்மனுக்கு சாற்றி வழிபாடு மேற்கொள்கின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...