பீரோவில் பணம் சேர வேண்டுமா? இதோ சூட்சுமங்கள்!

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம்.
பீரோவில் பணம் சேர வேண்டுமா? இதோ சூட்சுமங்கள்!
Published on
Updated on
3 min read

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும் பல்வேறு காரணங்களுக்காக பணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறோம். எவ்வளவு தான் நாம் உழைத்தாலும்  பணத்தைச் சேர்க்க முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. 

பணத்தைச் சேமிப்பது என்பது ஒரே இடத்தில் தக்க வைக்காமல் அது ரெட்டிப்பாக சரியான வங்கிகளில் நிலையான வைப்புத் தொகை, மியூச்சுவல் பண்டு சேமிப்பு, தங்கச் சேமிப்பு, வளர்ந்து வரும் இடங்களில் வீடு மனை போன்றவற்றிக்கு முதலீடு செய்து ரெட்டிப்பாக மாற்ற முயற்சிக்க வேண்டும். அதற்கு அவரவர் ஜாதக அமைப்பு மற்றும் கோச்சாரதில் உள்ள கிரகங்களும் அவற்றோடு தசை புத்திகள் பொறுத்து புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டும். அசுப தசா புத்தி காலகட்டத்தில் ஒருசிலர் தனியார் சீட்டு கம்பெனியில் மாட்டிக்கொண்டு ஏமாந்துவிடுவார்கள். எடுத்துக்காட்டாக சேமிப்பு என்பது நான்காம் பாவம். கோச்சார ராகு அல்லது லக்கின பாவிகள் 4ம் பாவத்தில் தொடர்பு பெரும்பொழுது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தகாலகட்டத்தில் புதிய சொத்துகள் வாங்குவது வில்லங்கத்தை ஏற்படுத்தும். முக்கியமாக அந்த நேரத்தில் ஜாதகரின் பேரில் புதிய தொழில் துவங்க நகை மற்றும் சொத்துக்களை அடகு வைப்பது, பூர்வீகம் சொத்துகளை பெற முயற்சிப்பது, ஜாமின் கையெழுத்து போடுவது என்பது செய்யக்கூடாது. இதற்கு அந்த ஜாதகரின் கோச்சாரத்துடன் தசா புத்தியும் நல்ல நிலையிலிருந்தால் மட்டுமே  அனைத்து புதிய முதலீட்டுகளையும் செய்யலாம்.  

முக்கியமாக சுக்கிரன், ராகு, சந்திரன் நிலை பொறுத்து ஆடம்பர சிந்தனை ஏற்படும். எடுத்துக்காட்டாக துலாத்தில் சுக்கிரன் ஆட்சி, அங்கு சனியின் உச்ச வீடுடாகும். அதிலும் சனி ஒரு உழைப்பாளி மற்றும் கஞ்சன் குணம் கொண்டவர். அவன் எதையும் நில்-கவனி-மெதுவாகச் செல் என்ற வழியில் சிந்திக்க வைப்பார். துலா ராசிக்காரர்கள் மற்றும் துலாத்துடன் லக்கின திரிகோண தொடர்பு கொண்டவர்கள் மிகவும் யோசித்து முதலீடு செய்வார்கள். நம் நாட்டில் நிறைய பெற்றோர்கள் தன்னுடைய வருமானத்தின் ஒரு பகுதியைச்  சேமிப்புக்கு ஒதுக்கிவிட்டு, பின்பு இருக்கும் தொகையை வீட்டிற்குத் தேவையானவற்றை செலவு செய்வார்கள். அவர்கள் தன்னை வருத்தி சேமித்த தொகையைப் பிற்காலத்தில் குழந்தைகளின் படிப்பு, திருமணம், சொத்து சேர்த்தல், அவ்வப்பொழுது ஏற்படும் மருத்துவச் செலவு மற்றும்  அவர்களுடைய கடைசி இறப்பு செலவு வரை அந்த சேமிப்புதான் பயன்படுத்துவார்கள். பணத்தைத் தெரிந்து சேர்த்தால் திருஷ்டிப்படும் என்று மற்றவர்களுக்குத் தெரியாமல் சேர்ப்பது என்பது இவர்களின் அதிபுத்திசாலித்தனம். 

முக்கியமாக ஜாதக அமைப்பில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தசையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பண வரவு கட்டாயம் இருக்கும். அவரவர் ஜாதகத்திற்கு ஏற்ப அது கோடியாகவோ அல்லது ஆயிரமாகவோ இருக்கலாம். அந்த தொகையை வங்கி சேமிப்பு தவிர இருக்கும் தொகையை தங்க நகை மற்றும் பணக்கட்டுகளாக ஒரு பீரோவில் வைப்போம். ஜாதகரின் தசை புத்தி நல்ல செல்வ செழிப்புடன் கூடிய சேர்க்கும் நிலையில் இருந்தாலும், பணத்தை சிறிது நாள்களிலே பீரோவிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து செலவு செய்ய நேரிடும். காரணம் ஏன் என்று பார்த்தால் பீரோவில் தரித்திரத்தை ஏற்படுத்தும் நிலைப்பாடுகள் இருக்கும். அந்த ஜாதகருக்கு அதற்கு அடுத்த தசை நன்றாக இல்லை என்றால்  சொல்லவே வேண்டாம். அவர்கள் இருக்கும் பணத்தையும் இழந்து, கழுத்தை நெருக்கும் அளவுக்கு கடன் சூழல் மேலோங்கி நிற்கும். பணம் சேர்ப்பதை இருவகையாகப் பிரித்து கொள்வோம். ஒன்று நமக்கு தேவையான அளவு பணம் சேர்த்துக்கொள்வது மற்றொன்று அவரவர் பரம்பரைக்காக பணம் சேர்த்துக்கொள்வது. இதற்கு  2,11 பாவத்தின் யோக தன்மை பொறுத்து சேர்க்கும் நிலை அமையும்.

நமக்கு வரும் பணத்தை நம்மிடம் தக்க வைத்துக்கொள்ள பல்வேறு வழிகள் சொல்லப்படுகிறது. அவற்றில் ஒன்று பீரோவில் பணம் மற்றும் நகை  வைக்கும் முறை என்ன என்று பார்ப்போம்.

வீட்டில் மற்றவர் கண்படாத அளவு பணத்தைப் பத்திரப்படுத்த வேண்டும். எப்போதும் ஒரு பூட்டிய பலமான மரப்பெட்டியில் தான் பணத்தை வைத்துக்கொள்ள வேண்டும். தேவ குரு என்பவர் மரம், பாவியான சனி என்பவர் இரும்பு. பீரோவை மற்றும் பண பெட்டகத்தைப் பலமான தேக்கு மரத்தில் செய்வது நன்று. குரு என்பவர் சேமிக்கும் தனக்காரகன். பணப்பெட்டியின் உறுதியான நிலைத்தன்மை நம்மிடம் பணத்தை நிரந்தரமாக தங்க வைக்கும்.

முதலில் நிறைய பேருக்கு பீரோவின் மேல் தேவையற்ற பொருள்களைப் போட்டுவைக்கும் பழக்கம் இருக்கும். எடுத்துக்காட்டாக தேவையில்லாத பாய் மற்றும் நியூஸ் பேப்பர் கூட பீரோவின் மேல் அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட தேவையற்ற பொருள்களை முதலில் பீரோவின் மேல் வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள். வீட்டில் உள்ள பீரோவில் புதிய பிளாஸ்டிக், அலுமினியம் தகரமான பாத்திரம், உடைந்த பொருள், மருந்து பொருள், அழுக்கு துணி, இறந்தவர்கள் பொருள் வைக்கக்கூடாது. அது தோஷமாகும். தங்கம் வெள்ளி என்பது குரு மற்றும் சுக்கிரன் ஆவார். அதற்கு தோஷம் கிடையாது. அதனால் பரம்பரை தங்க அபாரணங்களை வைத்துக் கொள்ளலாம்.

மகாலட்சுமி வாசம் செய்யும் இடத்தை சுற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அங்கு யாருடைய கண்ணீரும் அழுகையும் இருக்கக் கூடாது. முக்கியமாகப் பணத்தை எச்சில் தொட்டு எண்ணக்கூடாது. பணத்தைச் சுருட்டி வைக்காமல் பணத்தை நீள வாக்கில் அடுக்கி வைக்க வேண்டும். செவ்வாய், வெள்ளி நாள்களில் பீரோவில் இருக்கும் பணத்தையோ, நகையையோ யாருக்கும் முடிந்த அளவு கொடுக்கக்கூடாது. ஜாதகருக்கு 2ம் பாவம் சரியில்லை என்றால் மனைவி மக்களைக் கொண்டு பணத்தைப் பெட்டியில் வைக்கலாம். சொத்தும் அவர்கள் பேரில் சேர்ப்பது நன்று. அதற்கு அவர்களின் ஜாதகத்தைப் பார்த்து 2,11 பாவம் யோகமாக உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மஹாலட்சுமி பண பெட்டியில் வாசம் செய்வதாக ஐதீகம். வாசனை பொருள்களான பச்சை கற்பூரம், ஜவ்வாது, லவங்கம், பட்டை, ஏலக்காய், மல்லிகை பூ ஆகிய பொருள்கள் அனைத்திலும் பணத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்பது சூட்சுமம் விதி. பீரோவில் உள்ள லாக்கரில் மகாலக்ஷ்மியிடம் அபிஷேக பெற்ற மஞ்சள் அல்லது விரலி மஞ்சள், பச்சை கற்பூரம், கிராம்பு 3, ஏலக்காய் 3 மற்றும் ஒரு நாணயம் போன்றவற்றை ஒன்றாக ஒரு குபேர பச்சை துணியில்  மூட்டையாகக் கட்டி, அவற்றை பீரோவில் உள்ள பண பெட்டியின் ஓரமாக வைத்து விட வேண்டும். வீட்டில் பூஜை செய்யும் காலம் கற்பூர ஆர்த்தி காட்ட வேண்டும். வளர்பிறையில் வரும் நல்ல நாளில், வியாழன் மற்றும் வெள்ளி, கிழமையில், புதன் ஹோரையில் புதிய வங்கியில் முதலீடு செய்ய, தங்கம் வெள்ளி வாங்கச் செய்யலாம். அது செல்வ சேமிப்பை அதிகப்படுத்தும். 

வாஸ்துபடி பீரோ வடக்கு அல்லது கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். வடக்கு மத்திய பகுதியானது குபேரனுக்கு உரியது, வடக்கு பார்த்தவாறு பணத்தை எண்ண வேண்டும். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால், வீட்டின் உயரப் பகுதியான நிருதி அல்லது கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு திசையில் பீரோவை மேற்கு பகுதி ஒட்டி கிழக்கு பார்த்தும் அல்லது தெற்கு பகுதி ஒட்டி வடக்கு பார்த்தும் வைக்கவும். அதற்கு அடுத்த பகுதியான வாயு மூலை எனப்படும் வடமேற்கு மூலையில் மேற்கு பகுதியை ஒட்டி வடக்கு பார்த்து ஒரு பணப்பெட்டி அல்லது பீரோவை வைக்கலாம். இந்த பணப்பெட்டியில் அன்றாட செலவு செய்யும் பணத்தை வைக்கலாம். வடகிழக்கு தென்கிழக்கு மட்டும் பணப்பெட்டியை வைக்கக்கூடாது. அது இருக்கும் பணத்தையும் செல்வதையும் கரைக்கும் திசையாகும். இந்த பிரபஞ்சமே பஞ்சபூத தத்துவத்தில் தான் இயங்குகிறது. அந்த தத்துவத்தில் உள்ளடக்கி கட்டிய வீடு, முக்கியமாக வீட்டில் வைக்கும் பணப்பெட்டி நம் பணவரவை நிரந்தரமாக தங்க வைக்கும். 

ஒருவரின் கர்மாவின் அளவிற்கு ஏற்ப பிறப்பு ஜாதகம் மற்றும் கிரகங்களின் சுப அசுப தன்மைகள் வெளிப்படும். நம்முடைய புது முயற்சிகள் அனைத்திற்கும் ஜாதகரின் யோக கிரகங்கள் துணையாக நிற்கும். பணத்தை இன்னும் ரெட்டிப்பாக அல்லது நிலையாக இருக்க, நாம் சேமித்த பணத்தின் ஒரு பகுதியை தானதர்மம் செய்யவும் மற்றும் பழம்பெரும் கோவில்களின் கட்டுமான பணிக்கு உதவியாக இருந்தால் நம்முடைய பணவரவு பலமடங்கு பெருகும். அந்த செல்வம் அவரவர் தலைமுறைக்கு உதவியாக நிலைத்து நிற்கும் என்பது நிதர்சனமான உண்மை. அதுவே நம்முடைய கெட்ட கர்மாவின் செயலை குறைக்கும்.  

பணவரவிற்கும் பணக் கஷ்டம் நீங்க பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேரனையும், வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியையும், பஞ்சமி திதியில் மகா சக்தியான வராஹியை பூஜித்தால் உங்கள் பணப்பெட்டியில் சேமிப்பு அதிகரித்து நிலைத்து நிற்கும்.

Whatsapp:8939115647
vaideeshwra2013@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com