நவக்கிரக தலங்களுக்கு சிறப்புப் பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்

ஒரே நாளில் நவக்கிரக தலங்களுக்கு செல்லும் வகையில் சிறப்புப் பேருந்து சேவையை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
நவக்கிரக தலங்களுக்கு சிறப்புப் பேருந்து சேவை: அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்
Published on
Updated on
2 min read

ஒரே நாளில் நவகிரக தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளும் வகையில் புதிய சிறப்பு பேருந்து சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு ஒரே நாளில் 9 நவக்கிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு பேருந்துகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பயணக் கட்டணமாக ஒருவருக்கு ரூ. 750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான தொடக்க விழா பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.

இந்த சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கோயில்களுக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக பேருந்தில் சார்ஜர் சாக்கேட், பயணிகள் குடிநீர் பாட்டில் வைப்பதற்கு அனைத்து இருக்கையிலும் அதற்குரிய வசதிகள், வழிகாட்டி மூலம் பயணிகளுக்கு கோயில்களின் தல வரலாறுகளை அறியும் வகையில் மைக் உடன் கூறிய ஸ்பீக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாணசுந்தரம், அரசு தலைமை கொறடா கோவி செழியன், மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மகேந்திர குமார், கோட்டாட்சியர் பூர்ணிமா, தொழில்நுட்பம் பொது மேலாளர் முகமது நாசர், முதன்மை தணிக்கை அலுவலர் சிவக்குமார், தொழில்நுட்ப துணை மேலாளர் சதீஷ்குமார், துணை மேயர் தமிழழகன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, நவகிரக கோவில்களுக்கு ஒரு மாத காலத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு இதே போல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வரும் காலங்களில் நவக்கிரக கோவில்களுக்கு முன்பதிவு செய்பவர்களின் அடிப்படையில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்படும்.

சோதனை முறையில் தற்போது இந்த நவக்கிரக கோவில்களுக்கு தொடங்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்து படிப்படியாக அறுபடை வீடுகளுக்கும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனா காலகட்டத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாமல் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்த்துக் கொள்ளலாம் என முதல்வர் அறிவித்த நிலையில், அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 35 சதவீதம் அரசு கல்லூரிகளில் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் தொடர்ந்து ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி பள்ளி கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேருந்து தொடர்பாக இருந்த பிரச்சனை இப்போதில்லை. இந்த ஆண்டு தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம். போக்குவரத்து துறை ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில் அவர்களின் ஒரு கோரிக்கை நிறைவேற்றப்படும். ஆம்னி பேருந்துகள் தீபாவளி பொங்கல் நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டு பயணிகளுக்கு பணம் திருப்பி வழங்கப்பட்டது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com