
திருவாரூர் தியாகராஜ சுவாமிகள் கோயின் ஆழித் தேரோட்டம் இன்று காலை விமரிசையாகத் தொடங்கியது. தேரோட்டத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்து வருகின்றனர்.
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமைப் பீடமாகவும், சர்வ தோஷ பரிகார தலமாகவும் விளங்குகிறது. இத்தகைய சிறப்புமிக்க இந்த கோவில் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. எண்கோண வடிவில் அமைந்த இந்த ஆழித்தேர், 4 நிலைகளையும், 7 அடுக்குகளையும் கொண்டது.தேரை இழுத்துச் செல்வது போல அமைந்த 4 குதிரைகள், 32 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டவை. தேரை இழுக்க 4 வடங்கள் பொருத்தப்படும். இவை ஒவ்வொன்றும் 425 அடி நீளம் கொண்டவை. கயிற்றின் சுற்றளவு 21 அங்குலம் ஆகும்.‘திருவாரூர் தேரழகு’ என்பது சொல் வழக்கு.
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் இது. அலங்கரிக்கரிக்கப்பட்ட இந்த தேரின் உயரம் 96 அடியாகும். இதன் மொத்த எடை 360 டன். திருச்சி பெல் நிறுவனம் மூலம் 4 இரும்பு சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேர் திருவிழா இன்று காலை 8.50 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தேர்த் திருவிழாவில் ஆரூரா தியாகராஜா என்று கோஷமிட்டுப் பங்கேற்று வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் 2,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.