வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலில் பாடைக்காவடி திருவிழா

வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக்காவடித்திரு விழா ஞாயிற்றுக்கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது.
பாடைக்காவடி எடுத்த பக்தர்கள்.
பாடைக்காவடி எடுத்த பக்தர்கள்.

நீடாமங்கலம்: வலங்கைமான் வரதராஜம்பேட்டை தெருவில் எழுந்தருளியுள்ளது மகாமாரியம்மன் கோயில்.

இக்கோயில் அம்மனை சீதளாதேவி எனவும் அழைப்பர். இக்கோயிலில் வருடம் தோறும் பங்குனித்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது.

வலங்கைமான் மகாமாரியம்மன்.
வலங்கைமான் மகாமாரியம்மன்.

இவ்வாண்டும் பங்குனித்திருவிழாவையொட்டி கடந்த 8 ம் தேதி வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழாவும், 10 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் காப்புக் கட்டுதல், 17 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் காப்புக்கட்டுதல் மற்றும் திருவிழா தொடக்கமும் நடந்தது.

நாள்தோறும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளும், அம்மன் வீதியுலாவும் நடந்து வருகிறது.

பாடைக்காவடி திருவிழா:

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை பாடைக்காவடிதிருவிழா நடைபெற்றது.

கடும் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அந்நோயிலிருந்து விடுபட்டால் பாடைக்காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதாக மகாமாரியம்மனிடம் வேண்டுதல் செய்து கொள்வார்கள். அதன்படி நோயிலிருந்து விடுபட்டவர்கள் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவார்கள்.

உண்மையிலேயே இறந்தவர்களுக்கு செய்யும் இறுதிசடங்கு போல் நோயிலிருந்து விடுபட்டவர்கள் புனித நீராடி பச்சை பாடையில் படுக்கவைக்கப்பட்டு, அவரவர்கள் குல வழக்கப்படி கிராமிய வாத்தியங்கள் முழங்க ஆற்றங்கரை பகுதியிலிருந்து நான்கு பேர் சுமந்து வர காவடியின் முன்பு உறவினர் ஒருவர் தீச்சட்டி ஏந்திட பாடைக்காவடி நகர முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்து கோயிலை மூன்று முறை வலம் வந்து கொடிமரத்தின் முன்பு பாடைக்காவடி இறக்கி வைக்கப்பட்டது. கோயில் பூசாரிகள் நெற்றியில் திரு நீரு பூசி பாடைக்காவடி எடுத்தவரை எழச்செய்தனர்.

பின்னர் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இந்த காட்சி காண்போரை மெய்சிலிர்க்கச் வைத்தது.

பால்குடம், பால்காவடி, செடில்காவடி, பறவை காவடி, அலகு காவடி என பல்வேறு காவடிகளை எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்தினர். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்து வரப்பட்டனர்.

மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

சிறப்பு அபிஷேக , ஆராதனைகளை செய்து வைத்து பக்தர்களுக்கு பிரசாதங்களை செல்வம் பூசாரியார், சங்கரன் பூசாரியார், ஸ்ரீராமமணிகண்டன் பூசாரியார் வழங்கினர்.

விழாவில் அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயிலுக்கு வந்திருந்து அம்மனை நீண்ட வரிசையில் நின்று வழிபட்டு சென்றனர்.

பக்தர்களின் நலனைக்கருத்தில் கொண்டு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவின்பேரில் அரசின் பல்வேறு துறையினரும் சிறப்பு வசதிகளை செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் வலங்கைமான் போலீசார் செய்திருந்தனர்.

பக்தர்களின் நலனைக்கருதி தீயணைப்புத்துறையினரும் முழுநேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோயில் விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையர் குமரேசன் உத்தரவின் பேரில், துணை ஆணையர் ராமு மேற்பார்வையில், கோயில் தக்கார் மும்மூர்த்தி, செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

செடில்சுற்றுதல் நிகழ்ச்சியும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்தில் வீதியுலா காட்சியும் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது. வலங்கைமான் நகரம் விழாக்கோலம் பூண்டு காட்சியளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com