
தமிழ்ப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1- ஆம் பாதம்)
கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் ராகு, சுக்ரன்(வ), புதன் - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
கிரகமாற்றங்கள்:
26-04-2025 அன்று ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
26-04-2025 அன்று கேது பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.
02-07-2025 அன்று சனி பகவான் வக்ர நிலை ஆரம்பம்.
17-11-2025 அன்று சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.
06-03-2026 அன்று சனி பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
11-05-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
08-10-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
18-11-2025 அன்று குரு பகவான் வக்ரம் ஆரம்பம்
21-12-2025 அன்று வக்ர நிலையில் இருக்கும் குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-03-2026 அன்று குரு பகவான் வக்ர நிவர்த்தி
பலன்
தன் மனதிற்கு சரியெனப்பட்டதை செயல்வடிவமாக்கி தனி வழியே நடைபோடும் சிம்மராசி அன்பர்களே!
இந்த வருடம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேத வாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மிக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு, மனை, வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும்.
புத்திரர்களால் வருமான வரவுகள் உண்டாகி செலவுகளுக்கு கை கொடுக்கும். கடன்கள் அடைபடும். வழக்கு தொடர்பானவைகள் அனுகூலமாகும். கணவன் மனைவி இருவருக்கும் வரக்கூடிய மனக்கிலேசங்களை புத்திரர்கள் உறவு பாலமாக செயல்பட்டு சரிப்படுத்துவார்கள். ஆயுள் அபிவிருத்தி ஏற்படும்.
தந்தையின் உடல நலத்தில் பாதிப்புகளும் அவர் சேர்த்து வைத்த கடன்களை அடைக்கும் சூழ்நிலைகளும் உங்கள் பொறுப்பாய் வரும். தொழில் மூலம் கிடைத்த வருமான லாபத்தை தகுந்த முறையில் பாதுகாப்புடன் முதலீடு செய்வதால் மட்டுமே பொருளாதார இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும். வெளிநாட்டு பிரயாணங்கள் சென்று திரும்பும் மார்க்கம் உண்டு.
உத்தியோகஸ்தர்கள்
அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு கடந்த வருடத்தில் சென்று வந்திருப்பீர்கள். இதனால் ஒரு பலனும் இல்லையே என்று ஏங்கிய உங்களுக்கு குருபகவான் நிறைந்த அனுகூலத்தை தருகிறார். மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன்கள் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலைகள் உண்டாகும்.
உடலில் இருந்த ஆரோக்கிய குறைவான நிலைகள் மாறி உத்வேகத்துடன் அன்றாட செயல்கள் நிகழும். மன அழுத்தம் தந்த கடன் சுமைகள் தீரும்.
எதிரிகள் பலத்த அவமானப்பட்டு உங்கள் முன் வருவதற்கே அச்சப்பட்டு ஒதுங்கி போவார்கள். மனைவியின் உடல் நலத்தில் தகுந்த கவனம் செலுத்துவதால் அறுவை சிகிச்சை அளவில் செல்லாமல் தகுந்த ஆரோக்கியம் பெறலாம். உத்தியோகத்தில் உயர்வும் அனுகூலமும் நிச்சயம் உண்டு.
தொழிலதிபர்கள்
கம்ப்யூட்டர் சாதனங்களை உற்பத்தி செய்பவர்கள் தங்கள் பொருட்களை அதிக அளவில் சந்தைபடுத்த புதிய உக்திகளை செயல்படுத்துவார்கள். வெள்ளியினால் செய்யப்பட்ட அணிகலன்கள் மற்றும் பாத்திர வகைகள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் புதிய டிசைன்கள் உருவாக்கி தகுந்த பொருளாதார லாபம் பெறுவார்கள். பால்பொருட்கள், ஐஸ்கிரீம், சாக்லெட் போன்றவைகளை மிகுதியான அளவில் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் தங்கள் பொருட்கள் அடித்தட்டு மக்களையும் சென்று அடையும் வண்ணம் சிறந்த தரத்துடனும் சலுகைவிலையுடனும் சந்தைப்படுத்துவார்கள். சினிமா, டிவி, தொடர், விளம்பரப்படங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து தொழில் நடத்துபவர்கள் நல்லபெயரும் புகழும் உயர்வருமானமும் பெறுவார்கள்.
வியாபாரிகள்
இசைக்கருவிகள், வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் அணிகலன்கள் வளையல், கவரிங் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் கிடைக்கும். லாப விகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதனத்தை தொழிலில் போடுவார்கள். சொகுசான ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள். ரத்தினக்கற்கள் பதித்த நகைகளை விற்பனை செய்வோர் தொழில் முன்னேற்றம் காண்பர். பூஜைப் பொருட்களுக்கான கடை வைத்திருப்போர் நல்ல வியாபாரம் பெறுவார்கள்.
மாணவர்கள்
பரதநாட்டியம், கிராமிய நடனம், இசைக்கருவிகளை இயக்கும் பயிற்சி பெறும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பயின்று தேர்ச்சி பெறுவார்கள். வாகன, கட்டுமானப்பபணிகள், ஓவியம் வரைவதற்கான பயிற்சி மாணவர்கள் புதிய உக்திகளை அறிந்து நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மோட்டார் வாகனம், படகுகள், கப்பல் ஒட்டுவதற்கான பயிற்சி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.
கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும். நண்பர்களுடன் உரையாடுவதால் புதிய ஞானம் பிறக்கும். தெய்வ நம்பிக்கை பெருகுவதால் மனம் அமைதியாக இருக்கும. சுகமான பிரயாண அனுகூலம் உண்டாகும். கைச்செலவுக்கான பணத்தை கவனமுடன் வைத்துக்கொள்ளவும்.
பெண்கள்
அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான கலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதால் உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்காரமாக இருக்கும். தகுந்த புகழும் நேர்மையான சமயத்தில் ஓய்வும் கிடைக்கப் பெற்று மன நிம்மிதியுடன் வாழ்க்கை நடத்துவீர்கள்.
கலைத்துறையினர்
சினிமா நாடகம் சின்னத்திரை ஆகியவற்றில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடிக நடிகையர்கள் தனக்குள்ள திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு புதிய வாய்ப்புகளையும் நிறைந்த பொருளாதாரத்தையும் பெற்று மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். வேடிக்கை விநோத மாயாஜால நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்கள் மிகுந்த வரவேற்புடன் ரசிகர்களால் போற்றப்படுவார்கள். இசைக்கலைஞர்கள் பாராட்டு பெறுவார்கள். பரதநாட்டியக் கலைஞர்கள் நல்ல மரியாதையைப் பெற்று தங்கள் கலையை பிறருக்கும் செல்லித்தருவார்கள்.தொழில் வகை எதிரிகள் கூட உங்களுடன் ஏற்பட்ட பகைக்காக வருத்தம் கொள்வர்.
அரசியல்வாதிகள்
அரசு அதிகாரிகள் அனுகூல செயல்பாட்டை தேவையான நேதத்தில் தடையின்றிப் பெறுவார்கள். பிறருக்காக நடத்தித் தரவேண்டிய பணிகள் இந்த வருடம் நடக்கும். ஆன்மிக எண்ணங்கள் செயல்பாடுகளாக மனதில் ஊற்றெடுப்பதால் தெய்வகாரியங்களை விருப்பத்துடன் செய்வீர்கள். அடுத்தவர் செலவில் நீங்கள் உங்கள் தேவைகள் எதையும் பூர்த்தி செய்யமாட்டீர்கள். மேலிடம் எல்லா வகையிலும் உங்களுக்கு துணை நிற்பார்கள். எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
மகம்
இந்த ஆண்டு குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மன நிம்மதி உண்டாகும்.
பூரம்
இந்த ஆண்டு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப்பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளவேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபார போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.
உத்திரம் - 1
இந்த ஆண்டு உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.
பரிகாரம்
முடிந்த வரை வெள்ளிக்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
மலர் பரிகாரம்: வெள்ளிக்கிழமை தோறும் சிவனுக்கு வில்வ மாலை சாற்றி தீபம் ஏற்றவும்.
சொல்ல வேண்டிய மந்திரம் - “ஓம் நமசிவாய”.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி
அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு
அதிர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 6