சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ஓம் சக்தி மகா சக்தி எனப் பக்தி கோஷத்தோடு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்.
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி வந்த தேர்.
Published on
Updated on
1 min read

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட திருவிழாவில் ஓம் சக்தி மகா சக்தி எனப் பக்தி கோஷத்தோடு பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டுக்கான சித்திரை தேரோட்டத் திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் உற்சவ அம்மன் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தேரோடும் வீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தார். நேற்று இரவு அம்மன் வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி காலை 10.31 மணிக்கு அம்மன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க அதிர்வேட்டுகள் ஒலிக்கத் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி 11.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஓம் சக்தி.. பராசக்தி என விண்ணதிரும் பக்தி கோஷங்கள் முழங்கத் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

தேரோட்டத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சமயபுரத்திற்கு வாகனத்திலும் பாத யாத்திரையாகவும் வருகை தந்து அக்னிச்சட்டி ஏந்தியும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்தும், பறவை காவடி எடுத்தும், கோயிலுக்கு வந்து மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். தேரோட்ட விழாவுக்கான ஏற்பாடுகளைக் கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அலுவலர்கள், கிராம மக்கள் செய்து வருகின்றனர். சமயபுரம் வரும் பக்தர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள், குடிநீர், தற்காலிக கழிப்பறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வ நாக ரத்தினம் அவர்களின் உத்தரவின் பெயரில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும், வாகனப் போக்குவரத்தைச் சீர்படுத்தவும் 2000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தி, கூட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர். மேலும் காவல் உதவி மையங்களும் அதிக அளவில் அமைக்கபட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com