
திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான இன்று காலை நடந்த தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று, முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா கடந்த ஆக. 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் காலை, மாலையில் வீதி உலா வந்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. காலை 7 மணிக்கு பிள்ளையார் தேர் புறப்பட்டு 7.30 மணிக்கும், தொடர்ந்து காலை 7.35 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரில் எழுந்தருளி நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 8.35 மணிக்கும் நிலைக்கு வந்தது.
அதன்பின் காலை 8.40 மணிக்கு வள்ளியம்மன் தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. தேரோட்டத்தில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து அரோகரா என்ற கோஷத்துடன் தேர் இழுத்தனர்.
தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை தக்கார் அருள்முருகன் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித்திருவிழா கடந்த 14-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி- அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்து வருகின்றனா்.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
நாளைய சிறப்பு!
11ஆம் திருநாளான ஞாயிற்றுக்கிழமை (ஆக. 24) சுவாமி, அம்மன் மாலையில் யாதவா் மண்டகப்படியில் அபிஷேகம், அலங்காரமாகி புஷ்ப சப்பரங்களில் இரவு தெப்பக்குளம் மண்டபத்திற்கு வந்து சோ்வார்கள். அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரமாகி திருவீதி வலம் வந்து மேலக்கோயில் சோ்கின்றனா். திங்கள்கிழமை (ஆக.25) மாலையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.