

மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
மாதங்களில் நான் மார்கழியாய் இருக்கிறேன் என பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதால் மார்கழி மாதம் போற்றுதலுக்குரிய மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் கோயில்களில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
பொதுவாக இந்த மாதத்தில் திருமணம் போன்ற நல்ல காரியங்களை ஒதுக்கிவைத்துவிட்டு, மாதம் முழுவதும் இறை சிந்தனைக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.
மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு பெண்கள் பலர் வீட்டு வாசலில் வண்ண வண்ணக் கோலமிட்டு மகிழ்ந்தனர். கோயில்களுக்குச் சென்று வழிபாடும் செய்தனர்.
அந்தவகையில், திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் இன்று காலை முதல் பக்தர்கள் அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் பலர் வீதிகளில் பஜனை பாடல்களையும் பாடி மகிழ்ந்தனர். குறிப்பாகத் திருப்பாவை, திருவெம்பாவை பாடி வழிபாடு செய்தனர்.
மார்கழி முன்பனிக்காலம் என்பதால் இன்று குளிர் சற்று அதிகமாகவே காணப்பட்டது. ஆனால் குளிரையும் பொருட்படுத்தாமல் பஜனை பாடல்களைப் பாடி மகிழ்ந்தனர். கோயில்களிலும் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டது.
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு கருவறையில் உள்ள 7 அடி உயர முருகப்பெருமானுக்கு தங்கமுலாம் கவசமும் சிறப்பு மலர் அலங்காரமும் செய்யப்பட்டன. வல்லக்கோட்டை முருகன் கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டதோடு, திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
இதையும் படிக்க: ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.