வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

கோலங்களை அலங்கரிக்க பூசணிப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன் என்பது பற்றி...
பூசணிப் பூ
பூசணிப் பூ
Updated on
2 min read

சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேல் மார்கழி மாதங்களில் பனி விழும் காலை வேளைகளில், வீட்டு வாயில்களை சுத்தம் செய்து, அழகிய கோலங்களை இடும் பெண்கள், அதன் நடுவில் பசுஞ்சாணி உருண்டைகளை வைத்து மலராத பூசணி மொட்டுகளை வைப்பர்.

சரியாக சூரிய உதயமாகி, பனியால் நனைந்த கோலங்களுக்கு நடுவில் அரும்பாக வைத்திருந்த அந்த பூசணிப்பூ மலர்ந்து, அவ்வழியாகப் போவோரின் முகங்களில் லேசான புன்னகைக்கும், மனதில் ஒரு மகிழ்ச்சிக்கும் காரணமாக மாறியிருக்கும்.

தமிழர்கள் பெரும்பாலும் பூக்கள் மீது தீராத அன்புடனே தங்களது கலாசாரத்தை பின்பற்றி வருகிறார்கள். இங்கே, பூக்கள் என்பது வெறும் பொருளாக மட்டுமல்லாமல் அவ்வப்போது பல விவரங்களை விளக்கும் சமிக்ஞைகளாகவும் மாறியிருக்கின்றன. நாள்தோறும் நம்முடன் பயணிக்கும் நண்பர்களைப் போல, தலைமுடியில் சூடி, கோயில்களில் கொடுத்தால் காதுகளுக்குப் பின்னால் பொருத்தி, மாலைகளில் கட்டப்பட்டு கடவுள் முதல், தலைவர்கள், திருமணம், இறுதிச் சடங்கு வரை, மனிதர்கள் ஏதோ ஒரு வகையில் மலர்களை அன்புடன் சுமந்துகொண்டே இருக்கிறார்கள்.

அவற்றின் நிறங்கள் பல வேளைகளில் நமது மனநிலையை அறிவிக்கின்றன, மாற்றுகின்றன. கிட்டத்தட்ட ஆள்கின்றன. அவற்றின் வாசனைகள் அவை வாடிய பிறகு நீண்ட காலம் நீடிப்பது, பூக்களைப் போல வேறு எந்த அலங்காரமும் செய்து ஈடு செய்ய முடியாது என்று நிகரற்று நிற்பது என அனைத்தும் மலர்களுக்கே உரிய பெருமை.

பூக்களின் மீது தமிழர்கள் கொண்டிருக்கும் தீரா காதல், அலங்காரத்தையும் தாண்டி ஆழமாக இயங்குகிறது என்றே சொல்ல வேண்டும். தமிழ் சமூகத்தில் பூக்கள் நீண்ட காலமாக வர்க்கம், சாதி மற்றும் புனிதத்தன்மையின் அர்த்தங்களைக் கொண்டுள்ளன. சில பூக்கள் உயர்ந்தவை, கடவுள்களுக்கு மட்டுமே தகுதியானவை என்று கருதப்படுகின்றன. அதனாலேயே சில மலர்களை பெரும்பாலும் பெண்களும் தலையில் சூடுவதில்லை. அதற்கு நேர் மாறாக சில மலர்கள், மிகவும் சாதாரணமானவை அல்லது அணிய முடியாத அளவுக்கு தூய்மையற்றவை என்றும் அதே மனிதர்களால் ஒதுக்கவும்படுகின்றன. அதில்தான் மாலையில் சேர்க்கப்படாத வழிபாட்டுக்கு பயன்படுத்தப்படாத பூக்களும் அடக்கம்.

வெற்றுத் தரையில் அதுவும் குறிப்பாக மார்கழியில் அதிகம் மலரும் பூசணிப்பூவுக்கு மட்டும் இதில் ஒரு விதிவிலக்கு. பெரும்பாலும் கடவுள்களுக்கு சூட்டப்படாத ஆனால், மார்கழி மாதத்தில் வீடுகளை அலங்கரிக்கும் இந்த பூசணிப்பூ ஒரு பெரிய, கூம்பு வடிவ மஞ்சள் நிறத்தைக் கொண்டது.

இது பற்றி, வரலாற்றாசிரியர் மீனாட்சி தேவராஜ், மார்கழியில் மற்றும் தை மாதத்தில் கோலங்களில் பூசணி பூக்களைப் பயன்படுத்துவது ஒரு பண்டைய நடைமுறை அல்ல என்று கூறுகிறார். "இது முன்-நவீன காலத்தில் வந்த ஒரு உள்ளூர் நடைமுறை மட்டுமே. தமிழ்நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில், பெண்கள் இந்த பூக்களைப் பறித்து, தங்கள் வீடுகளுக்கு வெளியே தங்கள் கோலங்களை மாட்டு சாண உருண்டைகளுடன் அலங்கரிக்கின்றனர்" என்கிறார்.

சரி... எத்தனையோ பூக்கள் இருக்கும்போது, பூசணிப் பூவை தேர்வு செய்தது ஏன் என்பது பற்றியும் மீனாட்சி தேவராஜ் விளக்கியிருக்கிறார், அதாவது, கோலங்களை அலங்கரிக்க அந்த நாள்களில் ஏராளமான மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் முதலிடம் பூசணிப் பூவுக்குத்தான் அதற்கு பூவின் அளவும் காரணம். பெரியதாக இருப்பதும் கண்களைப் பறிப்பதாக இருப்பதுமே. பிறகு அதன் நிறம். மஞ்சள் என்பது மங்களத்தைக் குறிக்கும். வளத்தின் அடையாளமாகவே மஞ்சள் பார்க்கப்படுகிறது. அது கடவுள் லஷ்மியை வரவேற்கும் என்பதால் மஞ்சள் நிறத்தில் அதுவும் குறிப்பாக மார்கழியில் அதிகம் மலரும் பூசணிப் பூ தேர்வாகியிருக்கலாம். அது மட்டுமல்ல, வீட்டு வாயில்களுக்கு அருகே, தரையில் பூத்திருப்பதால் மிக எளிதாக அதனை பெண்கள் பறித்து கோலங்களில் அலங்கரித்திருக்கலாம் என்கிறார்.

இன்றளவும், பூசணிப் பூ கிடைக்கும் பகுதிகளில், பெண்கள் தங்கள் கோலங்களை அந்த மலராலேயே அலங்கரிக்கிறார்கள்.

கட்டுரையாளர் : நிதர்ஷனா ராஜு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com