

மார்கழி மாதத்தின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம், அதற்கு இந்த ஒரு மாதம் போதாது, ஒரு ஆண்டும் போதாது என்றே சொல்ல வேண்டும்.
அந்த அளவுக்கு பல்வேறு ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மார்கழி மாதத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர்கள் ஒருசேர காட்சியளிப்பதும் ஒரு சிறப்பு.
சிவனுக்கு உரிய நட்சத்திரம் திருவாதிரை. அதனால்தான் அவரை ஆதிரை நன்னாளான், ஆதிரைநாள் உகந்தார் எனப் போற்றுகின்றனர் அடியார்கள். திருவாதிரைத் திருநாளில் சிவ வழிபாடு செய்வதையும் சிவனடியார்களுக்கு அமுது அளித்தலையும் கடமையாகக் கொண்டிருந்தனர் எனப் பெரியபுராணப் பாடல் ஒன்றும் குறிப்பிடுகிறது.
திருவாதிரையின்போது ஆடவல்லான் ஆகிய நடராஜருக்கு சிறப்பான அபிசேக வழிபாடுகள் நடைபெறுகின்றன. நடராஜரைக் கொண்ட அனைத்துக் கோயில்களிலும் அன்று திருவிழாதான்.
அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிவபெருமான் நடனமாடும் ஐந்து சபைகளைக் குறிக்கும் வகையில் ஐந்து நடராஜ மூர்த்தங்கள் அமைந்துள்ளன. எனவே, மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நன்னாளில் இந்த ஐந்து நடராஜர்களும் ஒரு சேற புறப்பாடாக ஆலயத்தைச் சுற்றிலும் வலம் வருகிறார்கள்.
ஒரே நாளில் பக்தர்கள் அனைவரும் ஐந்து நடராஜர்களை பக்தி பரவசத்தோடு வழிபட்டு பெரும்பேற்றைப் பெறும் நாளாகவும் திருவாதிரை அமைந்துள்ளது.
நடராஜர் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் சிதம்பரம் பொற்சபையாக, மதுரை வெள்ளி சபையாக, திருவாலங்காடு ரத்தின சபையாக அமைந்துள்ளது. திருநெல்வேலி தாமிர சபையாகவும் குற்றாலம் சித்திர சபையாகவும் போற்றி வழிபடப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.