

108 வைணவ தலங்களில் ஒன்றான நாச்சியார்கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் மார்கழி தெப்போற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாச்சியார் கோயிலில் சீனிவாச பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு மார்கழி மாத தெப்ப உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்குச் சிறப்புப் பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, தினமும் காலை மாலையில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலாவும், விழாவின் முக்கிய நிகழ்வாக, நான்காம் நாளான 26 ஆம் தேதி கல்கருட சேவையும், ஸ்ரீ பெருமாள் கருட வாகனத்திலும் தாயார் அன்னபட்சி வாகனத்திலும் ஓலைச் சப்பரம் திருவீதி உலா நடைபெறுகிறது.
தொடர்ந்து 8ம் நாளான 30 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியும், 9ம் நாளான 31 ஆம் தேதி புதன்கிழமை தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.
இதையும் படிக்க: வங்கதேச தூதரகத்துக்கு வெளியே ஹிந்து அமைப்பினர் போராட்டம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.