

மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி என்றும், முக்கோடி ஏகாதசி என்றும் கூறப்படுகிறது. இந்நாளில் விரதம் கடைப்பிடித்து பெருமாளை தரிசித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைணவத் திருத்தலங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் கோவிலில் “பகல்பத்து, இராப்பத்து’ என்னும் விழா சிறப்பாகக் கொண்டாடப்படும். பகல்பத்து நாட்கள் முடிந்ததும், இராப்பத்து ஆரம்ப நாளான சுக்லபட்ச ஏகாதசி அன்று விடியற்காலை வேளையில் சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். மூலஸ்தானத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு வந்து, பரமபத வாசல் சன்னதியில எழுந்தருளி பக்தர்களுக்கு அருளுவார்.
கலியுகத்தில், நம்மாழ்வாருக்கு முன்பு வைகுண்டத்திற்குச் செல்வோர் யாரும் இல்லாததால், வைகுண்ட வாசல் மூடப்பட்டு இருந்ததாம். நம்மாழ்வார் முக்தியடைந்த நாளில்தான் அது திறக்கப்பட்டதாகச் சொல்கிறது புராணம்! இதனை அறிந்த நம்மாழ்வார், “எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது; என்னைத் தொடர்ந்து தங்கள் மீது பக்தி செலுத்தும் அடியவர்களுக்காகவும் வைகுண்ட வாசல் திறக்க வேண்டும்’’ என்று பெருமாளிடம் வேண்டினார். நம்மாழ்வாரின் வேண்டுகோளை ஏற்று, மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசியில் சொர்க்கவாசல் திறக்க வழி செய்தார் மகாவிஷ்ணு. அந்த நாள்தான் வைகுண்ட ஏகாதசியாக - சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியாகப் போற்றப்படுகிறது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!
ஆண்டு முழுவதும் வரும் ஏகாதசிகளுக்கு ஒவ்வொரு பெயர்களும், அந்தந்த ஏகாதசி தினங்களில் இருக்கும் விரதங்களால் பக்தர்களுக்கு கிடைக்கப்பெறும் பலன்களும் பலவாறு வகுத்துக் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலனை வழங்கினாலும், வைகுண்ட பதவிக்கும் வழிவகுக்கும் என்பதே சிறப்பு வாய்ந்ததாகும்.
பரமபத விளையாட்டு
வைகுண்ட ஏகாதசியன்று இரவு கண்விழித்து பரமபதம் விளையாடுவது ஒரு முக்கியமான சம்பிரதாயமாகக் கருதப்படுகிறது. விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம். சறுக்கி பாம்பின் வாயில் விழுந்தால் மறுபடியும் அடிப்பகுதிக்கே வர நேரிடும். ஏணி என்பது புண்ணியம். பாம்பு என்பது பாவம். வைகுண்ட ஏகாதசியன்று இரவு ழுமுவதும் கண் விழித்திருக்கும் பொருட்டு இவ்விளையாட்டை பெரும்பான்மையான பக்தர்கள் விடியும் வரை விளையாடுவர். பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்தால் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாக அடையலாம் என்பதையும் வலியுறுத்தும் ஆன்மிக விளையாட்டு இது.
வைகுண்ட ஏகாதசியன்று உபவாசம் இருப்பது ஏன்?
ஏகாதசியன்று விரதமிருந்தால் முதல் பத்து நாள்கள் உணவு உட்கொண்டு, அதனால் உள்ளே சேர்ந்துள்ள கழிவுப்பொருள்கள் கரைந்து வெளியேறுகின்றன.
வைகுண்ட ஏகாதசியன்று விரதமிருப்பதால் ஜீரணக் கருவிகளுக்கும் ஓய்வு கிடைக்கிறது. பின் நமக்கு வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. முக்கியமாக வைட்டமின் ஏ-யும் சி-யும் தேவைப்படும். ஆகவேதான் துவாதசியன்று வைட்டமின் ஏ சத்து நிறைந்த அகத்திக் கீரையையும், வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயையும் உணவுடன் சேர்த்துக் கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் நாம் செய்ய வேண்டிய சூரிய நமஸ்காரமும், இருமுறை ஏகாதசியோடு தொடர்ந்து வருகிற துவாதசி உணவும், நம்முடைய கண்ணொளியை பாதுகாக்கின்றது.
பலன்கள்
புதனின் அதிதேவதையான மஹா விஷ்ணுவின் மோகினி அவதார தரிசனம் திருமணத் தடையை நீக்குவதோடு, ஆண்களுக்கு ஏற்படும் மலட்டுத்தன்மையைப் போக்கும். மேலும், பரமபத விளையாட்டினால் சர்ப்ப தோஷங்கள் நீங்குவதோடு வாழ்வில் ஏற்றம் தரும் என்பது நம்பிக்கை.
இன்றைய சூழ்நிலையில், குழந்தைகள் ராகு-கேதுக்களின் ஆதிக்கத்திற்குட்பட்ட பல நவீன தீமை தரும் விளையாட்டுகளில் ஈடுபட்டுவரும் நேரத்தில், பரமபதம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகளில் குழந்தைகளை ஈடுபட செய்வது மூளை மற்றும் அறிவு வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இப்படி நவகிரஹங்களும் யோகங்களை தரும் இந்த மார்கழி மாத சுக்லபட்ச ஏகாதசி தினத்தில், சாஸ்திர சம்பிரதாயப்படி விரதம் கடைப்பிடித்து பெருமாளை வழிபடும் பக்தர்களுக்கு நிச்சயம் வைகுண்டத்தில் இடம் இருக்கும் என்பது ஐதீகம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.