
ஒடிசாவில் உலகப் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதா் கோயில் ரத யாத்திரை, கூட்ட நெரிசல் காரணமாக நிறுத்தப்பட்ட நிலையில், சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு மீண்டும் தொடங்கியது.
புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை வெள்ளிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.
வெள்ளிக்கிழமை யாத்திரை தொடங்கிய நிலையில், சுட்டெரித்த வெயில், கூட்ட நெரிசல் காரணமாக ரத யாத்திரையில் கலந்துகொண்ட சுமாா் 625 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கூட்ட நெரிசல் காரணமாக பலருக்கு லேசான காயம், வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவா்களில் பெரும்பாலானோருக்கு மருத்துவமனைகளில் முதல்நிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில், நேற்று ரத யாத்திரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இன்று காலை வழக்கம் போல ரத யாத்திரை பலத்த பாதுகாப்புடன் தொடங்கியிருக்கிறது.
புகழ்பெற்ற ரத யாத்திரை!
ஒடிசா மாநிலம், புரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை மிகவும் புகழ்பெற்றதாகும். நிகழாண்டு ரத யாத்திரை வெள்ளிக்கிழமை மிக விமா்சையாகத் தொடங்கியது.
மிகுந்த கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட மூன்று பிரம்மாண்ட ரதங்களில், ஜெகந்நாதா், அவரது அண்ணன் பலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் மரச்சிற்பங்கள், கோயிலில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டு, அமர்த்தப்பட்டன.
முதலாவதாக பலபத்திரா் ரதமும், அடுத்ததாக தேவி சுபத்திரையின் ரதமும், இறுதியாக ஜெகந்நாதரின் ரதமும் பக்தா்களால் இழுக்கப்பட்டு, புறப்பாடாகின. இந்த நிகழ்வில், இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு ரதத்தை இழுத்தனர்.
ஒன்பது நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவைக்காண ஸ்ரீகுந்திச்சா கோயிலில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர். ஜெகந்நாதர் உள்பட மூன்று ரதங்களும் பிரதான கோயிலில் இருந்து புறப்பட்டு, 3 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீகுந்திச்சா கோயில் வரை இழுக்கப்படும். 9 நாள்களுக்குப் பின்னர் ரதங்கள் மீண்டும் கோயிலுக்கு இழுத்துவரப்படும்.
எனினும், வெள்ளிக்கிழமை நேரிட்ட கூட்ட நெரிசலால் ரத யாத்திரை நேற்று நிறுத்தப்பட்டு, இன்று காலை மீண்டும் தொடங்கியிருக்கிறது.
The world-famous Puri Jagannath Temple Rath Yatra in Odisha, which was halted due to overcrowding, resumed at 11 am on Saturday.
இதையும் படிக்க.. எளிய முறையில் பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.