மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்!

பல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்ற கோலாகல திருக்கல்யாணம்..
மீனாட்சி திருக்கல்யாணம்
மீனாட்சி திருக்கல்யாணம்
Published on
Updated on
1 min read

மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான அருள்மிகு மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முதன்மையான சித்திரைத் திருவிழா கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சித்திர திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான மீனாட்சி சுந்தரேசுனரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

முன்னதாக கோயில் வடக்கு ஆடி வீதி மேற்கு ஆடி வீதி சந்திப்பில் 10 டன் வண்ணமிகு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த பிரம்மாண்ட திருக்கல்யாண மேடையில் திருப்பரங்குன்றத்திலிருந்து முருகன் பெருமான் தெய்வானையுடனும், பவளக்கனிவாய் பெருமாளும் எழுந்தருளியதைத் தொடர்ந்து அருள்மிகு மீனாட்சியும் சொக்கநாதரும் மணமக்களுக்குரிய அலங்காரத்தில் திருக்கல்யாண மேடையில் எழுந்தருளினர்.

தொடர்ந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்கிடத் திருமண சடங்குகள் நடத்தப்பட்டு மீனாட்சி அம்மன் மற்றும் சுவாமிக்கு பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டதைத் தொடர்ந்து சுந்தரேஸ்வரரிடம் இருந்து பெற்ற மங்கலநாணைச் சிவாச்சாரியார் மீனாட்சி அம்மனுக்கு அணிவிக்கத் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது

இதனையடுத்து விழாவில் பங்கேற்ற பல்லாயிரக்கணக்கான பெண்கள் தங்களது திருமாங்கல்ய கயிறை புதிதாக மாற்றிக்கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் மணக்கோலத்தில் கோவில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பகல் முழுதும் பக்தர்களுக்குக் காட்சியளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருக்கல்யாணத்தையொட்டி பக்தர்கள் வசதிக்காக வடக்கு மேற்கு ஆடி வீதிகளில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு 300 டன் அளவில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. கோயில் உள்புறத்திலும், சித்திரை வீதிகளிலும் பெரிய அளவிலான எல்.இ.டி. திரைகள் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டு இருந்ததுடன் கோயில் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

மேலும், திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோயில் நிர்வாகம் சார்பில் ஆடி வீதிகள் சித்திரை மொய் காணிக்கை செலுத்தச் சிறப்புக் கவுண்டர்கள் திறக்கப்பட்டு இருந்ததுடன் ஒரு லட்சம் பக்தர்களுக்குத் தண்ணீர் பாட்டில் மற்றும் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்த சபை சார்பில் பிரம்மாண்டமான திருமண விருந்து மதுரை சேதுபதி பள்ளியில் நடைபெற்றது.

திருக்கல்யாண வைபவம் இன்று நடைபெற்று முடிந்த நிலையில் நாளை காலை மாசி வீதிகளில் அம்மனும் சுவாமியும் வலம் வரும் திருத்தேரோட்டமும், சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 12- தேதியும் நடைபெறுகிறது. சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் மதுரை மாநகரம் முழுவதும் விழாக் கோலமாகக் காட்சி அளிக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com