

உலகெங்கிலும் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் நூற்றாண்டு விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வரும் நவம்பர் 23-ம் தேதியான அவருடைய பிறந்த நாளோடு ஓராண்டு தொடர்ந்து நடந்த விழாக் கொண்டாட்டம் நிறைவு பெறுகிறது. அன்று லட்சக்கணக்கில் உலகெங்கிலும் இருந்து சாயிபாபா அன்பர்கள் புட்டப்புர்த்திக்கு வருகை தந்து அவரது பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறார்கள்.
இந்த நூற்றாண்டு விழாவையொட்டி ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகள் நடந்துகொண்டே வருகின்றன. புட்டப்பர்த்தியே ஒரு பூலோக வைகுண்டம் போலக்காட்சியளிக்கிறது. அதையொட்டி இந்த நவம்பர் 16ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை சாயி பக்தர்களால் ரதோஸ்வ நாளாகக் கொண்டாடப்பட்டது. அன்று ஆங்காங்கே சாயி சமித்திகள்தோறும் ரதங்கள் அலங்கரிக்கபட்டு, ஸ்வாமியின் திவ்ய திருவுருவம் அவற்றில் வீற்றிருக்க வீதிகள் வழியே அவை உலா வந்தன. இதேபோன்ற ஒரு ரதம் மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் இருந்தும் புறப்பட்டு, வீதிகள் வழியே உலா வந்து ஸ்வாமியின் சுந்தரம் மந்திரை வந்தடைந்தது. கார் ஒன்று தேர்போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னால் அதை இழுத்துச் செல்வதைப் போல 4 குதிரைகளின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.
பூந்தோட்டமென மலர்க்குவியல் மனம் வீச மணிமாலை சரங்கள் வைரமென ஜொலிக்க, தேர் நடுவே அருள் முகம் காட்டும் ஆதவனாக ஸ்வாமியின் திருவுருவம் வீற்றிருக்கத் தேர் அசைந்து அசைந்து வந்தது. ரதத்திற்கு முன்னால் மேளம் பேண்ட் வாத்தியங்கள் முழங்கிட நாதஸ்வரம் இசை பொழிந்தது. வேதகோஷம் விண்ணைப் பிளந்தது. பஜனைப் பாடல்கள் பரவசமூட்டின. பாவவிகாஸ் குழந்தைகளின் நிகழ்ச்சிகளும் அரங்கேறின.
மலாப்பூரிலிருந்து மாலை 4.15-க்குப் புறப்பட்ட அந்த ப்ரேம ரதம் ஸ்வாமியின் நூறாவது பிறந்தநாளை உலகறியச் செய்வதற்குக் கட்டியம் கூறுவதுபோல, பறையறைந்து அறிவிப்பதுபோல, முரசு கொட்டி முழங்குவதுபோல, ப்ரேம ஸ்வரூபனான பகவானின் அன்பை பிரகடனப்படுத்தும் தூதுவன்போல அன்னமாய் அசைந்து இரவு 7.10-க்கு சுந்தரம் மந்திரை வந்தடைந்தது. இருமருங்கும் வழிநெடுக தொண்டர் கூட்டம் தொழுது நின்று பக்தி கோஷம் எழுப்ப உலா வந்த ப்ரேம ரதத்தின் புனிதப் பயணமும் நிறைவடைந்தது.
இதையும் படிக்க: பிகார் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேஜஸ்வி தேர்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.