
மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழா இன்று காப்புக்கட்டுதலுடன் கோலாகலமாக துவங்கியது. விழாவில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்து காப்புகட்டி தங்கள் விரதத்தை தொடங்கியுள்ளனர்.
ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாகவும், முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்டு மணக்கோலத்தில் காட்சி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு பெற்றதாகும். அந்தவகையில் இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா இன்று தொடங்கி வரும் 28-ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
திருவிழாவின் முதல் நாளான இன்று காலை கோயிலுக்குள் உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் எழுந்தருளிய சுப்பிரமணியசாமிக்கும், சண்முகர் சன்னதியில் எழுந்தருளிய தெய்வானை மற்றும் வள்ளி சமேத சண்முகப்பெருமானுக்கும் காப்புக்கட்டுதல் அரோகரா கோஷத்தடன் இன்று நடைபெற்றது. இதனையடுத்து விரதம் இருக்கும் ஏராளமான பக்தர்களுக்கும் காப்பு கட்டப்பட்டது. பக்தர்கள் தங்களது நேர்த்தியான ஒரு வேளைக்கு பால், மிளகு, துளசி ஆகியவை மட்டும் உண்டு கடும் விரதம் கடைபிடிக்க உள்ளனர்.
கடும் விரதமிருக்கும் பக்தர்கள் 6 நாள்கள் கோயிலிலேயே தங்கி இருந்து காலையிலும், மாலையிலுமாக இருவேளை சரவண பொய்கையில் நீராடி கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். விழாவையொட்டி கோயிலுக்குள் தினமும் காலை, மாலை என இரு வேளையும் சண்முகார்ச்சனையும், தினமும் இரவு உற்சவர் சன்னதியில் இருந்து தெய்வானையுடன் முருகப்பெருமான் புறப்பட்டு திருவாட்சி மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வரும் 26-ம் தேதி மாலை கோயிலுக்குள் ஆலய பணியாளர் திருக்கண்ணில் "வேல் வாங்குதல்" நிகழ்ச்சியும், மறுநாள் 27-ம்தேதி மாலை சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில் முன்பு "சூரசம்கார லீலையும்" 28ம் தேதி காலை சட்டத் தேர் கிரிவலம் வரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
மேலும் விழாவையொட்டி தினமும் மாலையில் பக்தி சொற்பொழிவும் நடைபெறுகிறது.விழா ஏற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்யபட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.