

கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலய சுவாமி கோயில் தேரோட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள, பிரசித்திபெற்ற சிவாலயங்களுள், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில், பிரமன், திருமால், சிவன் என மும்மூர்த்திகளும் அருள்புரிவதால், கோயிலில் ஆண்டு முழுவதும், பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்வார்கள். தாணுமாலய சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழிப் பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு இத்திருவிழா, கடந்த டிச.25ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாள்களில் தினமும், காலை, மாலை வேளைகளில், சுவாமியும், அம்பாளும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர்.
விழாவின், முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம், வெள்ளிக்கிழமை (ஜன.2) காலை நடைபெற்றது. இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு தேர்வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தார். நிகழ்ச்சியில், பால்வளத்துறை அமைச்சர் த.மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ரா.அழகு மீனா, வ.விஜய் வசந்த் எம்.பி., தமிழ்நாடு மாநில உணவு ஆணைய தலைவர் என்.சுரேஷ்ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தேர்த்திருவிழாவில், கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஜன.2) கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.