சுடச்சுட

  

  ஆலங்குடியும் அஷ்ட திக்கு கோயில்களும் - மினி தொடர்

  By கடம்பூர் விஜயன்  |   Published on : 04th January 2019 02:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Alangudi__2_

  கும்பகோணம்- மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அடுத்து 18 வது கிமி ல் உள்ளது ஆலங்குடி திருத்தலம். இத்தலம் ஆறாம் நூற்றாண்டில் சம்பந்தரால் பாடப்பெற்றது என்பதால் இது 1500 ஆண்டுகட்குமேல் பழமையானது என அறியலாம்.

  தேவர்களைக் காக்க ஆலகால விஷத்தை இறைவன் குடித்ததால் ஆலங்குடி என்று பெயர் வந்தது. இவ்வூரில் விஷத்தால் எவர்க்கும் எவ்விதத் தீங்கும் உண்டாவதில்லை என்று சொல்லப்படுகிறது. கருநிறமுள்ள பூளைச் செடியைத் தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் திருஇரும்பூளை என்றும், அழைக்கப்படுகிறது.

  காளமேகப் புலவர் பாடல் ஆலங்குடி தலத்தைப் பற்றி அற்புதமாக பாடியுள்ளார். “ஆலங்குடியானை ஆலாலம் உண்டானை ஆலங் குடியான் என்று ஆர் சொன்னார் – ஆலம் குடியானேயாகில் குவலயத்தோரெல்லாம் மடியாரோ மண் மீதினில்”.  என்று பாடி இந்த ஆலயத்தின் பெருமையை உலகரியசெய்கிறார்.

  இந்த தலத்தில் இறைவன் ஆபத்சகாயேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.. இறைவியின் பெயர் ஏலவார்குழலி

  தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைய வாசுகி என்ற பாம்பை கயிறாகவும், மந்தார மலையை மத்தாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது அந்தப் பாம்பு வலி பொறுக்காமல் கக்கிய ஆலகால விஷத்தை , சிவபெருமான் உலகத்தை காக்கும் பொருட்டு உட்கொண்டார். விஷத்தை அருந்தி உலகைக் ஆபத்தில் இருந்து காத்ததால் இறைவன்  ஆபத்சகாயேஸ்வரர் அழைக்கப் படுகிறார்.

  முசுகந்தன் என்ற சோழ மன்னன், கோவில் கட்டுவதற்காக தனது மந்திரி அமுதோகரிடம் பணம் கொடுத்தான். ஆனால் மந்திரியோ மன்னன் கொடுத்த பணத்தை பயன்படுத்தாமல் தனது பணத்தை பயன்படுத்தி கோவில் கட்டினான். பின்னர் மன்னன் வந்து கோவில் கட்டிய புண்ணியத்தில் பங்கு கேட்க, மந்திரி மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த மன்னன் மந்திரியின் தலைய வெட்ட வாளை எடுத்து ஓங்க இறைவன் தோன்றி அமுதோகரை தன்னுடன் சேர்த்துக்கொண்டதே இக்கோவில் வரலாறாகும்.

   

  ஒரு முறை திருவாரூரை ஆட்சி புரிந்த சோழ மன்னன் இங்கிருந்த சுந்தரர் சிலையின் அழகை கண்டு அதனை திருவாரூருக்கு எடுத்துச் செல்ல முயற்சித்தான். இதனை அறிந்த கோவில் அர்ச்சகர் அச்சிலையை குழந்தையாக பாவித்து அதற்கு அம்மை நோய் தாக்கி இருப்பதாக கூறி மறைத்து வைத்து சிலையை காப்பாற்றினார். இப்பொழுதும் அந்த சிலையில் அம்மைத் தழும்புகள் இருப்பதைக் காணலாம். 

  விசுவாமித்திரர்,  முசுகுந்தர், வீரபத்திரர் போன்ற பலர் வழிபட்ட சிறப்புடையது இக்கோவில். 

  இங்கு கோவிலைச் சுற்றி அகழி போன்ற அமைப்பு உள்ளது இதனை செயற்கைக்கோள் படத்தில் தெளிவாக காணலாம். இதுவே அமிர்தபுஷ்கரிணி தீர்த்தம் எனப்படுகிறது., கோவிலின் கிழக்கில் சக்ர தீர்த்தம் அமைந்துள்ளது.

  சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது வெட்டாற்று வெள்ளப் பெருக்கில் ஆபத்சகாயரே ஓடக்காரராக வந்து கரையேற்றிக் காட்சிதந்தார் என்பது தல வரலாறு. ஓடம் நிலைதடுமாறிப் பாறையில் மோதியபோது காத்தவிநாயகர் கலங்காமல் காத்த பிள்ளையார் என வழங்கப்படுகிறார்.

  இத்தலம் திருவிடைமருதூர் தலத்தின் தட்சணாமூர்த்தி இருப்பிடமாக கருதப்படுவதால் இங்கு தட்சணாமூர்த்தி சிறப்பு. பிற கோயில்களில் காண இயலாத தட்சணாமூர்த்தி உற்சவ விக்ரகம் உள்ளது இவர் தேரில் திருவீதி உலாவும் காண்கிறார்.

  கோயிலின் தென்புறம் ஐந்து நிலை ராஜ கோபுரமும், கிழக்கில் சற்று குறுகிய ஐந்து நிலை கோபுரம் உள்ளது. கிழக்கில் சப்தகன்னி சன்னதி ஒன்றும் உள்ளது. கோபுர வாயிலில் கலங்காமல் காத்த விநாயகர் சன்னதி உள்ளது. உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதர், விசாலாட்சி, நால்வர் சப்த லிங்கங்கள் உள்ளன.

  இங்கு அகத்தியரை வழிபட்ட பின்னரே முருகனை வழிபடவேண்டும். பேய் பிசாசு பயங்களையும் இம் முருகப்பெருமான் போக்கியருள்வார்.

  இப்படி பல சிறப்புக்கள் கொண்ட ஆலங்குடியினை சுற்றி எட்டு திக்கிலும் சிறப்பான கோயில்கள் உள்ளன, அவையே அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்டவை. இவர்கள்  இறைவனை வழிபட்டு தம் பெயரால் தீர்த்தமும், சிவலிங்கமும் நிறுவி பூஜித்து தங்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகள் நீங்கியும் பல நற்பேறுகளும்  பெற்றார்கள்.

  நாமும் இந்த அஷ்ட திக்கு பாலகர்கள் வழிபட்ட தலங்களின்  இறைவனை வணங்கி நாமும் வாழ்வில் எல்லா நலனும் பெறுவோம்.

  அஷ்ட திக்கு பாலகர்கள் யார்?

  இந்திரன்,அக்னி நிருதி, யமன், வருணன் வாயு குபேரன், ஈசானன் இவர்களே எட்டு திக்கிலும் பூமியை  தாங்கி ஆட்சி செய்கின்றனர்.

  கிழக்கு - இந்திரன்

  தென்கிழக்கு – அக்னி

  தெற்கு யமன்

  தென்மேற்கு நிருதி

  மேற்கு வருணன்

  வடமேற்கு வாயு

  வடக்கு குபேரன்

  வடகிழக்கு ஈசானன்

  இதுவே இவர்களின் திக்குகள் .  இப்படி இவர்கள் வழிபட்ட திக்கு இறைவர்களை அவர்களுக்குரிய காயத்ரி மந்திரத்தினை சொல்லி வழிபடும்போது அஷ்ட திக்கு புருஷர்களின் அருளும் நமக்கு கிடைத்து விடும் என்பதில் ஐயமில்லை. 

  அஷ்ட்ட திக்கு பாலகர்கள்  உருவாக்கி வழிபட்ட கோயில்கள் ஒவ்வொன்றாய் இனி பார்ப்போம். 

  கடம்பூர் விஜயன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai