கும்பகோணம் பாணபுரீஸ்வரர் திருக்கோயில்

கும்பகோணம் கிழக்கு பகுதியில் உள்ள பக்தபுரி தெருவில் அமைந்துள்ளது பாணபுரீஸ்வரர் திருக்கோயில்.
கும்பகோணம் பாணபுரீஸ்வரர் திருக்கோயில்

கும்பகோணம் கிழக்கு பகுதியில் உள்ள பக்தபுரி தெருவில் அமைந்துள்ளது பாணபுரீஸ்வரர் திருக்கோயில்.

இறைவன் - பாணபுரீஸ்வரர்  இறைவி - சோமகலாம்பிகை

ஊழிக்காலத்தில் பிரளய வெள்ளம் ஏற்பட்டபோது பிரம்மனால் விடப்பட்ட அமுதகுடம் மிதந்து வந்துகொண்டிருந்தது. அப்போது கயிலையில் இருந்து வேட வடிவத்தில் வந்த சிவபெருமான் ஒரு பாணத்தால் அந்தகுடத்தை உடைத்தார். சிவன் பாணம் தொடுத்த இடம் என்பதால் பாணாத்துறை எனப்பட்டது.

இங்குள்ள இறைவனுக்கு பாணபுரீஸ்வரர் என்ற பெயர் உருவானது. இதன்பிறகே குடத்திலிருந்த அமுதம் பெருகி மகாமக குளமாக வடிவெடுத்தது. எனவே இத்தலத்து இறைவனை வணங்குபவர்களுக்கு ஆயுள் அபிவிருத்தியும், அழியாத புகழும் கிட்டும் என்பது நம்பிக்கை.

வியாச முனிவர் ஒருமுறை நந்திதேவரிடம் சாபம் ஒன்றை பெற்றார். மகாவிஷ்ணவின் கட்டளைப்படி பாணபுரீஸ்வரரை வழிபட்டு சாபம் நீங்கியது. இத்தலத்தில் வியாசர் லிங்கம் ஒன்றை அமைத்து வழிபட்டார். இதற்கு வியாசலிங்கம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
வங்க தேசத்து அரசனான சூரசேன மன்னன் தன் மனைவி காந்திமதியின் தீராத நோயை போக்குவதற்காக சூதமகா முனிவரின் கட்டளைப்படி இத்தலத்திற்கு வந்து தங்கி திருப்பணி செய்து மகப்பேறும் பெற்றான். இங்கிருக்கும் சோமகலாம்பாளை வழிபட்டால் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். மேலும் முகப்பொலிவையும் இந்த அம்பிகை தருவாள் என்பது நம்பிக்கை.

மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ள சன்னதி தெரு தற்போது உயர்ந்து விட்டதால் கோயில் வளாகம் சற்று பள்ளமாக காணப்படுகின்றது. பழமையான சோழ கட்டுமானம் தெற்கு நோக்கிய படிக்கட்டுகள் மகா மண்டபத்தினை ஒட்டி உள்ளன. மகாமண்டபம், அர்த்த மண்டபம் கருவறை என உள்ளது. மண்டபத்தின் எதிரில் கொடிமரம் உள்ளது. தென்புறம் பழமையான வில்வமரம் உள்ளது. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், உமையொரு பாகன், நான்முகன், துர்க்கை உள்ளனர்.

மேற்கில் உள்ள திருமாளிகை பத்தியில் விநாயகர், முருகன், பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி உடன், எதிரில் அனுமனும் உள்ளார். வடமேற்கில் பெரியதொரு துர்க்கை தனி சன்னதியில் கிழக்கு நோக்கி காட்சியளிக்கின்றாள். மேலும், வடகிழக்கில் நவகிரக சன்னதியும், பைரவர் சன்னதியும் உள்ளன.
 
- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com