தில்லை பெருங்கோயில்! பகுதி 1

சைவ சமயத்தில் பிறந்தோர்க்கு  ‘கோயில்’ என்றாலே அது தில்லை எனப்படும் சிதம்பரம்
தில்லை பெருங்கோயில்! பகுதி 1

தில்லை பெருங்கோயில் - கிழக்கு கோபுரம்

சைவ சமயத்தில் பிறந்தோர்க்கு  ‘கோயில்’ என்றாலே அது தில்லை எனப்படும் சிதம்பரம் கோயில் தான். பெரும்பற்றப்புலியூர் வியாகிரபுரம், புண்டரீகபுரம், பூலோக கயிலாயம், தில்லை வனம் எனும் பெயர்களும் உண்டு. உலகியல் இன்பங்கள் எனும் பெரும்பற்றினை அறுக்கும் பெரும்பற்றறுக்கும் புலியூர் - பெரும்பற்றப்புலியூர் வியாகிரபாதர் வழிபட்டதால் வியாக்கிரபுரம், 

தில்லை மரங்கள் அடர்ந்த காடாக இருந்தமையால் தில்லை வனம், சித்+அம்பரம் சித்-அறிவு, அம்பரம்-வெளி – சிதம்பரம். 

பிறந்தாலும் ,இறந்தாலும், தரிசித்தாலும், நினைத்தாலும் முக்தி தரும் தலம். அர்த்த யாமத்தில் எல்லா தலங்களிலும் உள்ள மூர்த்திகளின் கலைகள் வந்து ஒடுங்கப் பெரும் தலமாகும். இக்கோயிலுக்கு எண்ணற்றோரால், எண்ணற்ற புராணங்களும் பதிகங்களும், பாடப்பெற்ற சிறப்புடைய தலமாகும். யுகங்கள் கடந்த பழமைவாய்ந்தது, எப்படி சிவனின் அடியும் முடியும் கண்டவரில்லையோ அவ்வாறே, தில்லையின் ஆதியை கண்டவரில்லை, கேட்டவரில்லை. அதனால் இத்தலத்தின் பெருமைகளின் சிறு பகுதியை நம் அறிவுக்கு எட்டியவரை காண்போம் வாருங்கள். 

திருக்கோயில் அமைப்பு சிதம்பரம் என்று தற்காலத்தில் அழைக்கப்படும் இவ்வூர் மையத்தில் உள்ளது இந்த ஆலயம் 43 ஏக்கர் பரப்புடையது., அகன்ற நான்கு பெரும் தேர்வீதிகளுடன் நான்கு திக்கிலும் நெடிதுயர்ந்த கோபுரங்கள் உள்ளன. நான்கு புறமும் சன்னதி தெருக்கள் இந்த கோபுர வாயிலுக்கு நம்மை அழைத்து செல்கின்றன. கோபுரங்களுக்கு முன் பெரிய காவல் மண்டபங்களுடன் நாற்புறமும் இணைக்கும் பெரிய மதில் சுவர் உள்ளது இதற்க்கு வீரப்பநாயக்கன் மதில் என பெயர். அடுத்து நான்கு பெரும் கோபுரங்களை இணைக்கும் இரண்டடுக்கு சுற்றாலை மண்டபத்துடன் கூடிய நீள் மண்டபம் இதற்க்கு ராஜாக்கள் தம்பிரான் மாளிகை என பெயர் இதனை முதலாம் குலோத்துங்கன் கட்டினான். இந்த காவல் மண்டபத்திற்கும் கோபுரத்திற்கும் இடையில் நூறடி அகலத்தில் பெரும் பிரகாரம் உள்ளது, இதில் இறை சன்னதிகள் இல்லை, தென்னை மரங்கள் அதிகம் உள்ளன. 

முதலில் நாம் நான்கு கோபுரங்களின் சிறப்பினை பார்ப்போம்.

கிழக்கில் உள்ள கோபுரம் - விக்கிரமசோழன் கோபுரம் இது இரண்டாம் குலோத்துங்கனால் அடித்தளமிடப்பட்டு, இரண்டாம் கோப்பெருஞ்ச்சிங்கனால் கிபி 1262 ல் நிறைவு செய்யப்பட்டது. இவனது தந்தை தான் தென் கோபுரத்தினை கட்டியவன். இவனுக்கு பரதமல்லன், சாஹித்தியரத்னாரன் என்றும் தன்னை ஆற்றூர் கல்வெட்டில் குறிப்பிடுகிறான். 

இந்த கோபுரமே பிரதான வாயிலாக பயன்படுத்த படுகிறது நடராஜர் தேருக்கு வருவது இந்த கிழக்கில் உள்ள கோபுரத்தின் வடபுறத்தில் உள்ள வாயில் வழியாகவே. இதுஏழு நிலை மாடம் கொண்டது கல்காரத்தின் உயரம் 35 அடி இதற்க்கு யாளம் என பெயர். அதற்க்கு மேல் கோபுரத்தின் உயரம் 115 அடி கோபுரத்தின் மொத்த உயரம் 152 அடியாகும். 7.5 அடி உயரமுள்ள 13 செப்பு கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோபுரத்தில் சுதை வேலைகள் இல்லை. 

சமயக்குரவர்களில் ஒருவரான மணிவாசகபெருமான் இவ்வழியே வந்து நடராச பெருமானை வழிபட்டதாக வரலாறு. வாயிலின் உட்புறம் பதினான்கு தூண்களில் 108கரண சிற்ப்பங்கள் உள்ளன. இந்த கோபுரத்தினை கட்டிய சிற்பிகளின் உருவங்களும் அவர்கள் பயன் படுத்திய அளவு கோலும் ஒரு சிறிய சதுரத்தில் செதுக்கப்பட்டுள்ளன. இக்கோபுரத்தினை கட்டிய இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனின் திருவுருவம் இங்கு செதுக்கப்பட்டுள்ளது.

கோபுர வாயிலின் தென் புறம் விநாயகரும் வடக்கில் முருகனின் சன்னதியும் உள்ளன. இக்கோபுரத்தின் கல்காரம் வடக்கில் நீட்டப்பட்டுள்ளது இதில் 22 மாடங்கள் உள்ளன அதில் கஜசம்ஹாரர், அரியர்த்தர், சோமாஸ்கந்தர், கல்யாண சுந்தரர், அர்த்தநாரி, திரிபுராந்தகர், கங்காளர், ரிஷபாந்திகர், நடராஜர் ஊர்துவதாண்டவர், போன்ற மாகேஸ்வர வடிவங்கள் உள்ளன. நான்கு கோபுரங்களிலும் இரு துவாரபாலகர்களும் இரு பைரவர்களும் உள்ளனர். இது மட்டுமல்லாது திக்பாலக பிரம்மன், சிவசூரியன், த்வனி சண்டர், திக்பாலக விஷ்ணு, அஷ்டபுஜ பைரவர்.அஸ்வினி தேவர்கள், மன்மதன் ஆகியோரும் அரியதொரு சிற்பவடிவமாக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் 18ம் நூற்றாண்டில் இக்கோபுரம் மிகவும் சிதிலமடைந்து இருந்தது அது மட்டுமல்லாது பல வருடங்களாக ஆனி உத்திர பெருவிழா நின்று போயிருந்தது இதனை வள்ளல் பச்சையப்பா முதலியார் மார்கழி பெருவிழாவுக்கு இணையாக பெரும் செலவில் 20.6.1791 திங்கள் கிழமை அன்று தொடங்கி செய்த பெருமைக்குரியவர். தேர்கள் தேர் மண்டபங்கள் ஆகியவற்றினையும் செப்பனிட்டார். இக்கட்டளையை தொடர்ந்து நிறைவேற்ற ஏதுவாக தீட்சதர் நிர்வாக கமிட்டியினர் இக்கட்டளைக்கு தனி அறை கொடுத்துள்ளனர்.

வள்ளல் பச்சையப்பா முதலியார் கிழக்கு கோபுரத்தினை திருப்பணி செய்து கொண்டிருந்தபோது இறைவனடி சேர்ந்தார், இருப்பினும் தனது உயிலில் பெருந்தொகை இப்பணியினை முடிக்க ஏதுவாக ஒதுக்கி வைத்தார், அதனை கொண்டு அவரது மனைவி அய்யாளுஅம்மா, மற்றும் அவரது அக்கா சுப்பம்மாவினால் திருப்பணி செய்து வைக்கப்பட்டது பச்சையப்பர்,மற்றும் அவரது மனைவி திருவுருவமும் அவரது அக்கா சுப்பம்மாள் ஆகியோரின் திருஉருவமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. 

தில்லை பெருங்கோயில்- தெற்கு நெடுமாடம்

பொன்னம்பலத்தான் தெற்குநோக்கி ஆடிக்கொண்டிருப்பதால் இந்த தென் புற கோபுரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிற கோபுரங்களுக்கு இலாத தனித்துவம் என்னவென்றால் இதில் தான் இடபக்கொடிகள் இரண்டு பறந்துகொண்டிருக்கும்.

தென்புற காவல் மண்டபத்தினை தாண்டி உள்ளே நுழைந்தால் பிரமிப்பூட்டும் உயர்ந்த இந்த தென்மலை காணப்படும். இதனை காடவர் என அழைக்கப்படும் பல்லவர் குலத்தினை சேர்ந்த வாள் வல்ல பெருமாள், அவனியாள பிறந்தவன், சொக்கசீயன், சாடும்பெருமாள், சகல லோக சக்ரவர்த்தி, காடவர்கோன் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. இவன் முதலாம் குலோத்துங்கனின் படை தலைவனாக இருந்து அவனது மகளை மணந்தவன் அதனால் இவனை மணவாள பெருமாள் எனவும் அழைப்பர்.

இவர் ‘காடவராயன் கோப்பெருஞ்சிங்கன் ’ என்று அழைக்கப்படும் பிற்கால பல்லவன் ஆவார்.

இவரின் வாரிசுகள் இன்றும் உளுந்தூர் பேட்டை வட்டம்-சேந்தமங்கலம் பகுதியில் ‘கச்சிராயர்’ பட்டம் பூண்டு ராஜவம்சமாக வாழ்கின்றனர் . கச்சி என்பது காஞ்சியை குறிக்கும் . காஞ்சியை ஆண்ட பல்லவ வம்சத்தினர் என்பதை குறிக்கும் பொருட்டு இவர்கள் கச்சிராயர்கள் என்று அழைக்க படுகின்றனர்.

விருத்தாசலம் பகுதியில் உள்ள ‘பரூர் கச்சிராயர்கள் ’, இவர்களின் வாரிசாக கருதபடுகிறார்கள். 

கல்காரம் எனும் அடிப்பகுதி கருங்கல்லால் கட்டப்பட்டது கிழக்கு மேற்கில் 108x62 அடியும் உயரம் 35அடியாகும். கல்காரத்தில் இருந்து கோபுர கலசம் வரை 110அடி, மொத்த உயரம் 145அடி. இதில் கலசத்தின் உயரம் மட்டும் 7அடியாகும். இது கிபி 1237ஆரம்பிக்கப்பட்டு 1240ல் முடிக்கப்பட்டது. இதனை கட்டி முடித்து இதற்க்கு சொக்கசீயன் கோபுரம் என பெயரிட்டான். 

ஆடல்கலையில் வல்லவனான இவனுக்கு பரதம் வல்ல பெருமாள் என ஒரு பெயரும் உண்டு. இதனால் தனது கோபுரத்தில் நாட்டிய கரணங்களை வடித்து வைத்திருந்தான். இந்த கோபுரத்தினை அவ்வப்போது பழுது பார்க்க செங்கல்பட்டு அருகில் உள்ள ஆற்றுர் கிராமத்தினை தானமாக அளித்தான். 

தென் புறத்தில் கல்காரத்தில் தெற்கு நோக்கி ஆட்கொண்டார், உய்யக்கொண்டார் எனும் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். ஆட்கொண்டார் காலனை உதைத்து அடியவரை காத்தவர். இவருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்ற்ன. முதல் மாடி அளவுக்கு உயரமான பகுதியில் இருப்பதால் செல்வதற்கு படிக்கட்டுக்கள் உள்ளன. இவ்விருவர் எதிரிலும் நந்தி உள்ளதால் இவர்களின் சிறப்புக்களை கூறவும் வேண்டுமோ?

இந்த கோபுரத்தின் நேர் எதிரில் நடராஜ பெருமான் உள்ளதால் அதற்க்கு எத்ரில் பெரிய பலிபீடமும், பெரிய சுதை வடிவ காளையும் உள்ளது. திருஞான சம்பந்தர் இந்த தென்புறம் இருந்து வழிபட வந்ததை குறிக்கும் சுதை வடிவங்கள் உள்ளன. 

இந்த தென் கோபுரத்திற்கு பெரிய வரலாறும் உள்ளது. தில்லையில் அச்சுதராயன் என்பான் தில்லை திருச்சித்திரகூடம் அமைத்தான். அதனை இரண்டாம் குலோத்துங்கன் அகற்றினான். பின்னர் வந்த செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர் மீண்டும் அங்கே வைணவ சிலை நிறுவும் பணியினை மேற்கொள்ள தீட்சதர்கள் தடுத்தும் கேளாத அவன் பணிகளை துவக்குகிறான். அப்போது ஈஸ்வர தீட்சதர் என்பவர் தென் கோபுர இரண்டாம் மாடத்தில் இருந்து வீழ்ந்து பலிதானம் கொடுக்கிறார். தொடர்ந்து இருபது தீட்சதர்கள் தன்னுயிர் கொடுத்தனர். ஒரு அம்மையார் கழுத்து அறுத்து உயிர் நீத்ததாகவும், மேலும் கோபுரத்தில் ஏறியவர்களை சுடவும் ஆணையிட்டான். இதனை போர்த்துகீசிய பாதிரியார் பிமேண்டா குறிப்பேட்டில் உள்ளது. அப்போதும் அசைந்து கொடுக்காத கிருஷ்ணப்பன் வடக்கு நோக்கி கால் நீட்டியவாறு வைணவ கடவுளை திருச்சித்திரகூடத்தில் அமைத்தான். 

இப்படி எத்தனையோ வரலாற்று சுவடுகளை பார்த்து வந்துள்ளது இந்த தென் கோபுரம். 

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com