நவராத்திரியின் தத்துவங்கள்!

ருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாகக் கருதப்படும் நவராத்திரி விழா, பெண்களைப் போற்றும் மகத்தான திருவிழாவாகும்.
நவராத்திரியின் தத்துவங்கள்!
Published on
Updated on
2 min read

தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தின் அடிப்படையில் தோன்றிய எல்லா பூஜைகளும், திருவிழாக்களும் ஏதாவது ஒரு தத்துவத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கும். அத்தகைய திருவிழாக்களில் மிக முக்கியமான திருவிழாவாகக் கருதப்படும் நவராத்திரி விழா, பெண்களைப் போற்றும் மகத்தான திருவிழாவாகும்.

 நான்கு நவராத்திரிகள்: அம்பாளுக்கு நான்கு மாதங்களில் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அவை: *ஆவணி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் - ஆஷாட நவராத்திரி. *புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் சாரதா நவராத்திரி. *தை மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் மகா நவராத்திரி. *பங்குனி மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு வரும் 9 நாள்கள் வசந்த நவராத்திரி. இந்த நான்கு நவராத்திரிகளில் புரட்டாசி மாதம் வரும் சாரதா நவராத்தியையே தமிழ்நாடு, கேரளா மற்றும் வடமாநிலங்களில் மிக விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் சரஸ்வதி பூஜையாகவும், வடநாட்டில் துர்க்கா பூஜையாகவும் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

 துர்க்கையின் அவதாரம்: தேவர்கள், முனிவர்கள் மட்டுமல்லாமல் மக்களுக்கும் எண்ணிலடங்கா தொல்லைகளைக் கொடுத்துவந்த மகிஷாசுரன் எனும் அரக்கனை வதம் செய்ய பார்வதி தேவி ஊசி முனையில் நின்று 9 நாள்கள் தவம் செய்து பலம் பெறுகிறாள். நவசத்தியாகவும், நவதுர்க்காவாகவும் அவதாரமெடுக்கிறாள். அந்த நவதுர்க்கையின் அவதாரங்கள்,

 *சயில புத்ரி, *பிரம்மசாரிணி, *சித்ரகண்டா, *கூஷ்மாண்டா, *ஸ்கந்தமாதா, *காத்யாயினி, *காளராத்தி, *மஹாகெளரி, *சித்திதாத்ரி. பார்வதிதேவி தவம் செய்த இந்த 9 நாள்களும் நவராத்திரி என்றழைக்கப்படுகிறது.

 நவராத்திரியின் 9 நாள்களும் பெண்கள் தூய்மையான ஆடையுடுத்தி, கொலுவுக்கு வரும் சுமங்கலிகளையும், கன்னிப் பெண்களையும் அம்பாளே தன் வீட்டுக்கு வந்ததாக எண்ணி வரவேற்று, கெளரவித்து அகம் மகிழ்வர். கொலுவில் பெண்கள் தங்களது கைத்திறனையும், கலைத்திறனையும் காட்டி கொலுவை அலங்கரித்து மகிழ்வர். கொலுவுக்கு வந்து அதைப் பாராட்டும் பலருக்கும் தான் கற்ற கலைத்திறனைக் கற்றும் கொடுப்பர்.

 பல நாள்கள் பேசாமல் இருந்த அக்கம் பக்கத்து வீட்டாரைக்கூட தங்களின் பகையை மறந்து தம் வீட்டு கொலுவுக்கு அழைப்பர். கொலுவுக்கு வரும் நண்பர்கள், உறவினர்களின் நட்பு அதிகரிக்கும்.

 நவராத்தியின் 9 நாள்களும் சுமங்கலிப் பெண்கள் துர்க்கா, லஷ்மி, சரஸ்வதியை பூஜை செய்து அஷ்டோத்தரம், லலிதா சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி, செளந்தர்யலஹரி முதலிய சக்தி நூல்களைப் படித்துத் பிரார்த்தித்து வழிபடுவர். அதேபோன்று, கன்னிப் பெண்கள் துர்க்கா தேவியை வழிபட, அவர்கள் மனதுக்கேற்ற கணவனைப் பெற்று மங்கள வாழ்வு வாழ்வர்.

 குழந்தைகள் இந்த 9 நாள்களும் கொலுவுக்குச் சென்று பாடவும், ஆடவும் செய்வதனால், இவர்களுக்கு பக்தி வளரும். தீய எண்ணங்கள் அண்டாது. அம்பாளின் அருட்கடாட்சத்தால் கல்வியில் மேன்மை அடைவர். முப்பெருந்தேவியரின் அருளுக்குப் பாத்திரமாவர். ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், வேலைக்குச் செல்லும் பெண்கள், வீட்டிலிருக்கும் பெண்கள் என்கிற வேறுபாடு இல்லாமல் தன் வீட்டு கொலுவுக்கு வரும் அனைவரையும் அம்பாளின் வடிவமாகவே நினைத்து வரவேற்று மகிழ்விக்கும் திருவிழா இந்த நவராத்திரி விழா!

 - ஸ்ரீரங்கம் கே.சண்முகம்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com