போயஸ் கார்டன் முதல் கொடநாடு வரை... தொடரும் தோட்ட மர்மம் 

காலச் சூழலுக்கு ஏற்ப எல்லா நிலைகளிலும் மாற்றங்களை காண்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று.
போயஸ் கார்டன் முதல் கொடநாடு வரை... தொடரும் தோட்ட மர்மம் 

காலச் சூழலுக்கு ஏற்ப எல்லா நிலைகளிலும் மாற்றங்களை காண்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் இப்போது தமிழக அரசியல் களத்தில் பெரிய மாற்றங்களை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம் என்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்ற ஆவல் அனைத்து தரப்பினரையும் மிகுந்த பரபரப்புக்கு உள்ளாக்கி வைத்திருக்கிறது. 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்து 5 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் தமிழக அரசியல் சூழல் இன்றும் நிச்சயமற்ற நிலையிலேயே இருக்கிறது. இதற்கிடையில் சசிகலா அணி, ஓ. பன்னீர் செல்வம் அணி என இரண்டாக பிளவுப்பட்ட அதிமுகவில் சசிகலா தரப்பினருக்கு ஏற்பட்ட நெருக்கடியால் தற்போது எடப்பாடி அணி ஓ.பிஎஸ் அணி என்றானது. என்றாலும் சசிகலா தினகரன் ஆதரவாளர்கள் தனி அணியாக செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. எனினும் அதிமுகவை ஒரே அணியாக மீண்டும் இணைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அணியினர் ஜெயலலிதா மரணம் பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கும், கட்சியில் இருந்து சசிகலா குடும்பத்தினரை முற்றிலும் நீக்க வேண்டும் என்று வலியுறுத்துவதாலும், ஆட்சியில் பதவி உள்பட பல்வேறு ரகசிய நிபந்தனைகள் விதித்துள்ளதாலும் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டு உள்ளது. 

கொடநாடு பங்களாவில் கொள்ளை முயற்சி

இது ஒருபக்கம் இருக்க  கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் தொடங்கி இன்று கொடநாடு வரையில் நடக்கும் பல்வேறு சம்பவங்கள் அவிழ்க்கப்பட முடியாத மர்ம முடிச்சுக்களாகவே இருக்கின்றன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த சந்தேகங்களே தீர்க்கப்படாத நிலையில் சமீபத்தில் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் காவலில் இருந்த காவலாளி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொடநாடு பங்களாவில் சொத்து ஆவணங்கள், நகைகளை கொள்ளையடிக்க முயற்சி செய்த போது காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையடுத்து கொடநாடு கொலை மற்றும் கொள்ளையில் தேடப்பட்டு வந்த கனகராஜ் என்பவர் சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடிக்கு தப்பி சென்றுள்ளார். ஆனால் போலீசார் தம்மை நெருங்கியதை உணர்ந்த கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீசாரிடம் சரண் அடைய முடிவு செய்து மோட்டார் பைக்கில்  சென்றுள்ளார். அப்போது  அந்த வழியாக வந்த சொகுசுகார் அவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். 

சாமானியனின் யூகங்களும் அரசின் பொறுப்பும்

இது விபத்தா அல்லது மீண்டும் ஒரு கொலையா.. என்ற சந்தேகம் செய்தியைப் படிக்கும் அனைவருக்குமே எழுகிறது. அதுமட்டுமல்லாமல் சிறுதாவூர் பங்களாவிற்கு பின் புறப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்தும் மக்கள் மனதில் சந்தேகம் எழுந்துள்ளது.

கொடநாடு காவலாளி கொலை, சிறுதாவூர் பங்களா தீவிபத்து போன்றவற்றுக்கான பின்னணி என்னவாக இருக்கும் என்பது குறித்து சாமானியன் யூகங்களுக்கும் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு எடப்பாடி பழனிசாமி அரசுக்கு இருக்கிறது.

விசாரணை என்ற பெயரில் எத்தனையோ வழக்குகள் இழுத்தடிக்கப்படுவதும் முடிவுகள் எட்டப்படாமலேயே முடித்து வைக்கப்பட்ட சில வழக்குகள் போலும் இதுவும் விடை தெரியாமல் போகுமோ என்ற அச்சம் எழுகிறது. 

அதுமட்டும் அல்லாமல் ஜெயலலிதா மரணம் குறித்து ஓ. பன்னீர் செல்வம் அணியினர் கேட்கும் சி.பி.ஐ விசாரணை  எந்த அளவுக்கு அவசியமானது என்பதையும் அடுத்தடுத்து நிகழும் சில சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன.

ஆனால் ஓ. பன்னீர் செல்வம் அணியினர் இதுகுறித்த அழுத்தத்தை மேலும் அதிகப்படுத்தாமல் இருப்பதும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்தோ உயில் குறித்தோ ரத்த சொந்தங்களான தீபக், தீபா உட்பட  யாரும் இதுவரை வெளிப்படையாக பேசாமல் இருப்பதும், மர்மங்களை நீட்டித்துக் கொண்டே போவதாகவே தெரிகிறது. 

அதிமுகவில் அடுத்த பூகம்பம்

ஜெயலலிதா என்ற ஆளுமை மிக்க ஒரு தலைவர் இல்லாமல் தமிழ்நாடு முழுமையும் கலை இழந்து இருக்கிறது என்றாலும் குறிப்பாக அவர் வாழ்ந்த போயஸ்கார்டன் இல்லம், அந்த வீதி முற்றிலும் பொலிவிழந்து இருப்பதையே பார்க்க முடிகிறது. அவரின் மரணத்திற்கு பின்பு அவர் வாழ்ந்த அந்த இல்லத்தில் சில துர்பாக்கிய நிகழ்வுகள் நடந்ததாக பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடங்களில் வெளிவந்தது. அதில் எத்தனை உண்மை என்பது வேறு கதை.

ஆனால் இதில் ஏதும் உண்மை இருக்குமோ என்று மக்களின் அச்சத்தை தீர்க்கும் பொறுப்பை, தான் எடுத்துள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் கூறினாலும் சி.பி.ஐ விசாரணை என்பதையும் தாண்டி அவர் செய்ய வேண்டிய சிற்சில முன்னோட்ட வேலைகளை உணராமல் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக அதிமுகவின் சசிகலா அணியினர் மீது ஒட்டு மொத்த குற்றச்சாட்டை வைத்து ஊடகங்கள் முன் பேட்டியளிக்கும் அவர், ஜெயலலிதாவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்த பணியாளர்கள், மெய்காப்பாளர்கள், போன்ற யாரையும் ஊடகங்களுக்கு அடையாளம் காட்டாமல் இருப்பது ஏன்.

போயஸ்கார்டன் முதல் கொடநாடு வரை அவரோடு இருந்து அவரது நலனில் முழு அக்கறை செலுத்தியவர்களில் ஒரு சிலரையாவது ஊடகங்களுக்கு அடையாளம் காட்டி உண்மையை பேச வைத்திருக்கலாமே என்றும் மக்கள் சில கேள்விகளை முன் வைக்கின்றனர். 

இந்நிலையில்தான் கொடநாடு காவலாளி கொலை தொடர்பாக பிடிபட்டிருக்கும் 6 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றவாளிகளாக கருதப்படும் கனகராஜூக்கும், சயானுக்கும் இடையே,  அதிமுக முக்கியப் புள்ளி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அடுத்தடுத்து பூகம்பம் வெடிப்பது போல் அதிர்ச்சி நிகழ்வுகளை பார்த்து வருகிறோம். சசிகலா கைது, தினகரன் கைது, விஜயாபாஸ்கர் விசாரணை என தொடர்ச்சியாக அதிர்வலைளை சந்தித்துவரும் அக்கட்சியில் இன்னொரு பூகம்பமாக மையம் கொண்டிருப்பதுதான் கொடநாடு காவலாளி கொலை வழக்கு.

இதற்கு பின்னணியில் இருக்கும் முக்கிய புள்ளிகள் யார் என்பது விரைவில் தெரியவரும் என்று நம்பபடுகிறது. அப்படி உண்மை வெளிவரும் பட்சத்தில் மீண்டும் சக்தி வாய்ந்த ஒரு பூகம்பத்தை அதிமுக சந்திக்கும் என்பது நிதர்சனம். 

அலைபாயும் ஆன்மா

முன்னோர்களை வணங்க வேண்டும் என்பதும் நம்மை வாழவைத்தவர்களை என்றும் போற்றி பணிதல் வேண்டும் என்பதும் நமது பண்புகளில் தலையாய பண்பாகும். அந்த வகையில் அதிமுகவால் வாழ்ந்தவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், குறிப்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்ற ஆளுமையால் வாழ்வில் நினைத்துப் பார்க்க முடியாத உயரத்தை எட்டியவர்கள் கொஞ்சம் மனசாட்சியோடு அவரது ஆன்மா சாந்தி பெற வேண்டி நியாய, வைதீக வேத தர்மங்களோடு நடக்க வேண்டும் என்பதே சாமானிய வாக்காளனின் கோரிக்கை.

அத்தகைய மனசாட்சியோடு தியான நிமிடதில் வெறும் 10 சதவீத உண்மைகளை மட்டுமே சொல்லி இருக்கிறேன் என்று சொன்ன ஓ.பி.எஸ். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக 100 சதவீதம் நீங்கள் நம்புவீர்கள் ஆனால், அதை வெறும் அரசியல் பகடையாக  எண்ணாமல் மத்திய அரசிடம் தேவையான தகவலை எடுத்துச் சொல்லி  சி.பி.ஐ விசாரணைக்கு உரிய அழுத்தத்தை கொடுப்பதே தற்போதைய முதன்மை தேவையாக இருக்கிறது.
                                                                                     -  திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com