தூரத்துப் பச்சையானதா மோடியின் தூய்மை இந்தியா திட்டம்

சுத்தம் நாட்டை காக்கும் சுகாதாரம் வீட்டைக் காக்கும் என்ற வாசகத்தை ஏட்டளவில் மட்டுமே வைத்திருக்கும் நாம் நமது
தூரத்துப் பச்சையானதா மோடியின் தூய்மை இந்தியா திட்டம்

சுத்தம் நாட்டை காக்கும் சுகாதாரம் வீட்டைக் காக்கும் என்ற வாசகத்தை ஏட்டளவில் மட்டுமே வைத்திருக்கும் நாம் நமது சுற்றுப்புற தூய்மை பற்றி சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்ளாமல்தான் நாளையும் பொழுதையும் கழித்துக் கொண்டிருக்கிறோம்.

நம் வீட்டுக் குப்பையை எதிர்வீட்டு வாசலில் தூக்கி எறிந்து சந்தோசம் அடையும் மனோபாவம்தான் இன்றைய சூழலில் பெரும்பாலும் காணமுடிகிறது. இந்தியா சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், நம் நாட்டையும் நகரங்களையும் குறைந்தபட்ச சுத்தம் மற்றும் சுகாதாரத்துடன் வைக்க நம்மால் முடியவில்லை. சுத்தம் பற்றி யாராவது பேசினால் சிங்கப்பூரை பாருங்கள் ஜப்பானை பாருங்கள். என்று நேரில் சென்று கூட பார்க்காத நாட்டைப் பற்றி பெருமை பேசுகிறோம்.

ஆனால் பேருந்து பயணத்தின் போது எவரையும் பற்றி கவலைப்படாமல் சன்னல் ஓர இருக்கையில் இருந்து கொண்டு எச்சில் துப்புவதையும் சாலை ஓரங்களில் சிறுநீர் கழிப்பதையும் தனி உரிமை என்றும் வாதிடுகிறோம். தூய்மையான இந்தியா என்பது நம் தேசத் தந்தை காந்தியின் கனவாகும். ஆங்கில அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய போது  அவரது தாரக மந்திரமாக இருந்த வாக்கியம்-" சுதந்திரத்தைவிடவும் மிக முக்கியமானது சுத்தம்" என்பதான்.  

இதனை மனதில்கொண்டே  பிரதமர் நரேந்திர மோடி, காந்தியின் 145-வது பிறந்த நாளான 2014, அக்டோபர் 2-ல் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கிவைத்தார். காந்தியின் 150-ஆவது பிறந்தநாளான 2019, அக்டோபர் 2-க்குள் இத்திட்டத்தின் குறிக்கோள் எட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு வாரணாசியில் அவரே தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையும் மேற்கொண்டார். வாரணாசியில் உள்ள அசிகாட் என்னுமிடத்தில் அவரே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை தூய்மையாக்கினார். 

தூய்மை இந்தியா திட்டத்திற்கான தூதர்கள்

எல்லா மாநிலங்களிலும் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்கள் பலரை தூதர்களாக நியமித்தனர். மேலும் இத்திடம் குறித்து பல்வேறு ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டது. சமுதாயத்தின் பல பிரிவினரும் தூய்மை இந்தியா இயக்கத்திற்கு பல்வேறு வகையில் ஆதரவு அளித்தனர்.  

தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ‘தூய்மைப்படுத்தும் எனது இந்தியா’ என்ற இயக்கமும் தொடங்கப்பட்டது. தொடக்கம் எல்லாம் அமோகமாக இருந்தது. பிரதமர் மோடிக்கு கிடைத்த வரவேற்பை போல் அவரது திட்டமும் பலதரப்பினரால் போற்றி பாராட்டப்பட்டது. இன்றும் அதற்கான விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

ஆனால் இந்த திட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்ட நிலையில் எந்த அளவிற்கான இலக்கை எட்டியுள்ளது. நாடு முழுவதும் இந்த திட்டம் ஒரே சீராக பின்பற்றப்பட்டு இலக்கை நோக்கி பயணிக்கிறதா என்ற கேள்வி எழுகின்றபோதுதான் தூய்மையான நகரங்களின் புள்ளிவிவரப் பட்டியல் சொல்வதை நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது. 

தூய்மையான நகரங்களின் புள்ளிவிவரம்

தமிழக நகரங்களைப் பொருத்த வரை மதுரை 57-வது இடத்தையும், தாம்பரம்-62, திருப்பூர்-68, ஓசூர்-82, வேளாங்கண்ணி-84, திண்டுக்கல்- 106, வேலூர்-108, காரைக்குடி-110, புதுக்கோட்டை-113, ராஜபாளை யம்-125, காஞ்சிபுரம்-127, சேலம்-135, பல்லாவரம்-155, ஆவடி-169, நாகர் கோவில்-174, நாகப்பட்டினம்-185, திருநெல்வேலி-193, தஞ்சாவூர்-198, தூத்துக்குடி-223, சென்னை-235, திருவண்ணாமலை-238, கடலூர்-250, ஆம்பூர்-267, ராமேஸ்வரம் 268-வது இடத்தையும் பிடித்துள்ளதாக புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது. 

இதில் இன்னும் நாம் துல்லியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் சிங்காரச் சென்னை என்று அழைக்கப்படும் தமிழக தலைநகரம் 235-வது இடத்தில் இருப்பதுதான். இந்த பின்னடைவுக்கு வழக்கம் போல் நாம் அரசியல்வாதிகளை மட்டும் குறை சொல்லிவிட முடியாது. சென்னையில் வசிக்கும் பொதுமக்கள்தான் முழு பொறுப்பு. தன் வீடு தன் வாசல் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எப்படி எண்னுகிறோமோ அதேபோல் தான் வசிக்கும் நகரமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும். 

அதே சமயம் ஒருத்திட்டத்தை ஏற்படுத்திய அரசு அதன் இலக்கை நிர்ணயம் செய்து பயணிக்கும் போது அந்த இலக்கை எட்டுவதற்குரிய சரியான பாதையில் செல்கிறதா என்பதை ஆராய்ந்து இலக்கு நோக்கிய பயணத்தை தீவிரப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதை அரசு அதிகாரிகளும்  உணர வேண்டும். தூய்மை இந்தியா திட்டத்தில் பீகாரைப் பொறுத்த வரையில் 27 நகரங்களில், 17 நகரங்கள் 300-வது இடத்துக்கும் கீழ் உள்ளன. ஒட்டுமொத்தமாக எல்லா நகரங்களும் 100-வது எண்ணுக்கு கீழ்தான் உள்ளன.  உத்தரபிரதேசத்தில் 62 நகரங்களில் சேகரித்த புள்ளிவிவரத்தில் 50 நகரங்கள், 305 மற்றும் அதற்கு கீழ்தான் இடம்பிடித்துள்ளன. 

இதில் பிரதமர் நரேந்திர மோடியின் வாரணாசி நகரம் மட்டும்தான் 32-வது இடத்தைப் பிடித்துள்ளது. மற்ற நகரங்கள் எல்லாம் 100-வது இடத்துக்குக் கீழ்தான் உள்ளன. கடந்த 2015-ம் ஆண்டு தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடம் பிடித்த கர்நாடகாவின் மைசூரு, இந்த ஆண்டு 5-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தின் திருச்சி நகரம் 6-வது இடத்தைப் பிடித்துள்ளது. தில்லி 7-வது இடத்தில் உள்ளது. இதுபோன்று தொடர்ந்தால் 2019ம் ஆண்டு மத்திய அரசு அதற்கான இலக்கை எட்ட முடியுமா என்பது சந்தேகம்தான். 

தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்ட பின்பும் கூட பல மாநகராட்சிகளிலும் நகரங்களிலும் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்களில் சாலை ஓரங்களில் உள்ள தேனீர் கடைகள் சுகாதாரமற்ற நிலையில் சாக்கடைகளின் அருகில் இருப்பதை பார்க்க முடிகிறது. ரயில் நிலையங்களின் தூய்மை கேள்விக் குறியாக இருக்கிறது. அதற்காக ஒரு ஒழுங்கு நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன். தூய்மை இந்தியா திட்டம் எந்த ஒழுங்குமுறையில் பின்பற்றப்படுகிறது..? இதற்கென நியமிக்கப்பட்ட தூதர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் முன் வைக்கின்றனர்.  

நாடுமுழுவதும் மேற்கொள்ள வேண்டிய ஒரு நல்ல திட்டத்தை மாநிலம் முழுவதும் உள்ள தலைநகரங்களில் முதலில் நிறைவேற்றுவது. பின்னர் படிப்படியாக மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என்று கொண்டு சென்றிருந்தாலே கடந்த 3 ஆண்டுகளில் பாதி இலக்கை எட்டி இருக்க முடியும். ஆனால் இன்றைய நிலை போகாத ஊருக்கு பயணம் மேற்கொண்டது போல் ஆகிவிட்டது. நாட்டில் சில இடங்களில் கழிப்பறைகளை அமைக்க மட்டும் தொடங்கப்பட்ட திட்டம் போல் ஆகிவிட்டது. மோடி அரசு நினைத்திருந்தால் இந்த திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் போன்ற பெரு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன்  ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே வெற்றிகரமாக செய்து முடித்திருக்க முடியும். 

ஜி.யோ திட்டம் மூலம் நாடுமுழுமைக்கும் இலவச டேட்டா வசதியை அனுமதித்த அரசுக்கு இன்னும் இலவச கழிப்பட வசதியை கொடுக்க முடியவில்லை. பேருந்து நிலையங்களில் குடிநீர் பாட்டில்களுக்கு 10 ரூபாய் கொடுக்கும் நாம் சிறுநீர் கழிக்க 5 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. தூய்மை இந்தியா பற்றி பேசும் மத்திய அரசும் சுகாதாரம் குறித்து குரல் கொடுக்கும் மாநில அரசும் இணைந்து செயல்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தூய்மைக்கான நிரந்தர ஏற்பாடுகளை செய்யாமல் இருப்பது ஏன்.

புதிய திட்டம் ஒன்றை தீட்டி அதற்கான நிதிவசூலாக மக்களிடம் வரிச் சுமையை கூட்டும் அரசு, அதற்கு பதிலாக  பெரு நிறுவனங்களிடம் அவர்கள் சார்ந்த நகரங்களின் தூய்மை பொறுப்பை ஒப்படைத்து அந்நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்திருந்தாலே இந்நேரம் பெரும்பாலான நகரங்கள் மிளிரத் தொடங்கி இருக்கும் என்றே சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.  

அதுமட்டுமல்லாமல் எம்.பி. மாதிரி கிராமத் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.  இத்திட்டத்தின் கீழ் நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் உள்ள 790 எம்.பி.க்களும் தலா 3 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும். இந்த கிராமங்களில் வரும் 2019-ம் ஆண்டுக்குள் உள்கட்டமைப்பு வசதிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். எம்.பி.க்கள் தாங்கள் விரும்பும் எந்தவொரு கிராமத்தையும் தத்தெடுத்துக் கொள்ளலாம். ஆனால், அது அவரின் சொந்த ஊராகவோ, நெருங்கிய உறவினர்களின் ஊராகவோ இருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. 

அவ்வாறு செய்வதன் மூலம் 2019-ம் ஆண்டு இறுதிக்குள்ள சுமார் 2,500 கிராமங்கள் வளர்ச்சி பெற்றவையாக இருக்கும். மாநில அளவிலும் எம்.எல்.ஏ.க்களை மையப்படுத்தி இதே போன்றதொரு திட்டத்தை செயல்படுத்தினால், 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் கிராமங்கள் வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளது. ஒரு வட்டாரத்தில் உள்ள ஒரு கிராமம் முன்னேற்றமடைந்தால், அதைப் பின்பற்றி அப்பகுதியில் உள்ள மற்ற கிராமங்களும் வளர்ச்சியின் பாதையில் அடியெடுத்துவைக்கும் என்று சொல்லப்பட்டது. சொன்னவை எல்லாம் சரிதான். ஆனால் நடப்பதுதான் முரண்பட்டதாக இருக்கிறது. 

இதுவரை எத்தனை எம்.பிக்கள் எந்தெந்த கிராமங்களை தத்தெடுத்தனர். என்ன மேம்பாட்டு பணிகளை செய்துள்ளனர் என்பது பற்றிய தகவல் ஏதும் இல்லை. கழிப்பறை இல்லாத கிராமப்புற வீடுகளில், பள்ளிகளில் கழிப்பறை வசதியை மட்டும் ஏற்படுத்தி விட்டால் போதுமா அதோடு தூய்மை இந்தியா முழுமை பெற்றுவிடுமா என்றும் சமூக ஆர்வலர்கள் கேட்கின்றனர்.

கிராமங்களில் விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் கேள்விக்குறியாக இருக்க, மத்திய அரசோ மாநில அரசோ அதுபற்றி சிறிதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. கேள்விகள் எப்போதும் கசப்பை ஏற்படுத்தலாம் ஆனால் அதனுள் இருக்கும் ஆதங்கத்தையும் நியாயத்தையும் உணர்ந்து செயல்பட்டு திட்ட இலக்கை அரசு நிறைவேற்றுமானால் மோடி அரசை இன்னும் 20 ஆண்டுகள் ஆனாலும் யாராலும் அசைக்க முடியாது என்பதே உண்மை.
                                                                     - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com