எந்த பட தயாரிப்பாளருக்கும் கால்ஷீட் கொடுத்திட்டு போகாம இருந்தது கிடையாது

மோகனுடன் ஒருநாள்
எந்த பட தயாரிப்பாளருக்கும் கால்ஷீட் கொடுத்திட்டு போகாம இருந்தது கிடையாது

ஒருவியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு பாம்க்ரோவ் ஓட்டலுக்குள் நுழைகிறேன்.

அறை எண் 205-க்குச் சென்று, 'பெல்லை' அழுத்தினேன். ஒரு பரிச்சயமான புன்னகை மலர வரவேற்று, 'குளிச்சிட்டு வந்துடறேன்; கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க' என்றபடியே பாத்ரூமுக்கு சென்றார் மோகன்.

குளித்து விட்டு ஈரத்துண்டுடன் வெளியே வந்த அவரிடம் இன்று ஒரு நாள் முழுவதும் உங்களுடனிருந்து, உங்கள் நடவடிக்கைகளை கவனிக்கப்போகிறேன் என்றேன்.   

"சரி புறப்படுவோம் வாருங்கள்" என்றார். 'கோபுரங்கள் சாய்வதில்லை" படப்பிடிப்புக்காக எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி கார் புறப்பட்டது.    

ஹோட்டல்ல ஏன் இன்னும் தங்கிகிட்டு இருக்கீங்க? வீடு பாத்துட்டு போகலையா என்றேன்.

நீங்க ரொம்ப சுலபமா வீடு பாத்து போகலையானு கேட்டுட்டீங்க. இந்தப் பகுதியில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை நண்பர்கள் மூலமா பாத்துட்டேன். சினிமாக்காரங்களுக்கு வீடு தர மாட்டோம்னு அத்தனை பேரும் ஒரே குரலில் சொல்லிட்டாங்க.சினிமாக்காரங்கண்ணா அவங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்புன்னு தெரியல. இத்தனைக்கும் நான் புகை பிடிக்க மாட்டேன்.மது அருந்த மாட்டேன். இதை அவங்க கிட்ட சொன்னா நம்ப மாட்டேங்குறாங்க என்று அப்பாவித்தனமாக கூறினார்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் படப்பிடிப்பின் நடுவே சிறிது ஓய்வு கிடைத்த பொழுது கேள்வி தொடர்ந்தது.

முதல்ல ஒரு சம்பிரதாதாயமான கேள்வி. நீங்க இந்த துறைக்கு எப்படி வந்தீங்க?

பெங்களூர்ல நான் படிச்சுக்கிட்டு இருந்தப்ப பி.வி. காரத்தின் நாடகங்களில் லைட்டிங் முதல் பாடுற வரை எல்லாத்தையும் கத்துக்கிட்டேன். பம்பாய் சென்று கொஞ்ச நாள் கன்னட நாடகங்களிளில் நடிச்சுகிட்டு இருந்தேன். அப்பத்தான் டைரக்டர் பாலசந்தர் சார்கிட்ட இருந்து 'மரோ சரித்ரா' படத்தை தமிழில் நடிக்க கூப்பிட்டாங்க. அப்புறம் என்னவோ அந்த படத்தை தமிழில் எடுக்கற திட்டத்தை கை விட்டுட்டாங்க. பிறகுதான் டைரக்டர் மகேந்திரனின் "நெஞ்சத்தைக் கிள்ளாதே" படத்தில் நடிச்சேன். 

நீங்க நடிச்சு இதுவரை வெளிவந்துள்ள படங்கள் எல்லாம் ஒரே மாதிரி டைப்பாக 'காப்பி புக்' ஸ்டைலிலில் இருப்பதாக கூறப்படுவது பற்றி?

அப்ஸலூட்லி ராங்.நான் நடிச்சு வந்துள்ள படங்களில் நீங்க அனலைஸ் பண்ணி பாத்தீங்கன்னா இது எவ்வளவு உணமைன்னு புரியும்.   இதுவரை நான் நடிச்ச படங்களில் ஒவ்வொண்ணும் ஒவ்வொரு ரகம். அப்படி இருக்கும் போது, எல்லா படங்களும் ஒரே மாதிரி இருக்குன்னு சொல்றது எப்படின்னு எனக்கு புரியல என்றார்.

நீங்க கால்ஷீட் ப்ராபளத்தை உண்டாக்குவதாக செய்திகள் வந்துள்ளதே என்று மோகனிடம் கேட்டேன்.

இது பற்றி சில பத்திரிக்கைங்களில் கூட போட்டிருந்தாங்க. பட் இட் ஈஸ் நாட் ட்ரூத்.  இது வரை நான் எந்த பட தயாரிப்பாளருக்கும் கால்ஷீட் கொடுத்திட்டு போகாம இருந்தது கிடையாது. நீங்களே போய் நான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளர்களையோ அல்லது இயக்குநர்களையோ கேளுங்கள். அவங்களுக்கு கால்ஷீட் ப்ராப்ளம்   ஏதாவது நான் கொடுக்கிறேனான்னு?.

இதைச் சொல்லும்போது அவர் சற்று உணர்ச்சிவசப்பட்டவராக காணப்பட்டார்.

சந்திப்பு: சிங்காரவேலு

படங்கள்: சங்கர் - கணேஷ் 

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.11.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com