கமல் மாதிரியோ ரஜினி மாதிரியோ நான் ஒரு ஸ்டார் கிடையாது! 

பாக்யராஜ் பேட்டி
கமல் மாதிரியோ ரஜினி மாதிரியோ நான் ஒரு ஸ்டார் கிடையாது! 

மாலை 06.15க்கு பாக்யராஜ் வீட்டு வரவேற்பறையில் காத்திருந்தேன்.06.25க்கு பாக்கியராஜ் கார் உள்ளே நுழைந்த விபரம் அத்தனை பேரும் எழுந்து நின்றதில் இருந்து தெரிந்தது.  பட்டு வேட்டி  சட்டையில் நெற்றியில் விபூதி கீற்றுடன் பாக்யராஜ் உள்ளே நுழைய, ஆகாச நீல நிறத்தில் சல்வார் கமீஸில் பூர்ணிமா ஜெயராம் பின் தொடர..எல்லோரையும் ஒரு முறை பார்த்து சிரித்தார் பாக்யராஜ்."எல்லோரும் கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க...சார்கிட்ட முதல்ல பேசிட்டு கூப்பிடுறேன்" என்ற பாக்யராஜ் என்னை உள்ளே அழைத்தார்.

பாரதிராஜாவோட '16 வயதினிலே' படம் வெளியான நேரம் தமிழ் சினிமாவோட மறுமலர்ச்சியான காலகட்டம்னு வச்சுக்கிட்டா, அதுல இருந்து நேற்று வரை இண்டஸ்ட்ரீயோட பரிணாம வளர்ச்சி பத்தி சுருக்கமா சொல்ல முடியுமா?

நட்சத்திரங்கள் டாமினேட் பண்ற காலம் போய் டெக்னீஷியன்களுக்கு அதிகமான மரியாதையும் அங்கீகாரமும் கிடைச்ச காலம் அது.ஸ்ரீதராலயும் பாலசந்தராலயும் அந்த அங்கீகாரம் கிடைச்சிருந்தாலும் '16 வயதினிலே'க்கு அப்புறம், எந்தப் படம் வந்தாலும் இந்தப்படத்துல கேமரா யாரு, ஸ்க்ரீன் ப்ளே யாருன்னு கேட்டுத் தெரிஞ்சுக்கற  அளவுக்கு டெக்னீஷியன்ஸ் அட்வான்ஸ் ஆகியிருக்காங்க..!

உங்க தயாரிப்பான 'தாவணிக் கனவுகள்' படம் அதிக விலைக்கு போனதாக வந்த தகவல்களும் செய்திகளும் உள்ளுக்குள்ள உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வை உண்டாக்குது?

இது ஒரு சிறப்பான சந்தோசமான விஷயமா எனக்கு தெரியல. அப்படி உணர முடியல. இது ஒரு நல்ல நிலைமையும் இல்ல. என்னோட ஆரம்பக் காலத்துல இருந்து நான் ஒர்க் பண்ண விதம் எப்படின்னா என்னோட ப்ரொட்யூசர்ஸ், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் கையைச் சுட்டுக்காத அளவுக்கு ஒரு ஐம்பது நாள் அல்லது எழுபத்தஞ்சு நாள் ஓடுற அளவுக்கு படம் பண்ணினா போதுமங்கிற எண்ணத்தோடதான் எல்லாப் படத்தையும் அணுகறேன்.

நீங்க உள்ளுக்குள்ள எப்படிப்பட்ட ஆள்? நடிகரா? கதாசிரியரா? டைரக்டரா? திரைக்கதை வசனகர்த்தாவா?

அடிப்படையில நான் வெகுஜன சைக்காலஜிக்கு பக்கத்துல நிக்கிறதா உணர்றேன். நடிகன், கதாசிரியன் இயக்குனர் இதெல்லாம் வெறும் தோற்றம். இந்த தோற்றங்களோட வெற்றிக்கு இந்த சைக்லாஜிதான் காரணம்னு நினைக்கிறேன்.  நடிகனா என்னோட வெற்றியை நான் அலசறேன். கமல் மாதிரியோ ரஜினி மாதிரியோ ஒரு ஸ்டாரா நான் என்னிக்குமே இருந்ததில்லை. என்னால் அப்படியிருக்கவும் முடியாது. ஜனங்க அவங்கள்ல ஒருத்தர என்னை சுலபமா நினைக்க முடியுது.

உங்களுடைய முந்தைய வெற்றிப் படங்களை இப்போது மறுபடியும் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டால், அவற்றின் அப்போதைய வெற்றி பற்றி இப்போது என்ன விதமாய் உணர்கிறீர்கள்?

என்னோட பழைய மூணு படங்களை ரீசன்ட்டா மறுபடியும் விரும்பி பார்த்தேன்.முதலில் மவுன கீதங்கள்.எந்த இடத்திலேயுமே 'லாக்' ஆகாத படம். ஒரு ஹ்யூமன் பிரச்சினையை அழகா சொல்லியிருந்தது. படம் ரிலீஸ் ஆகி நூறு நாளைக்கு அப்புறம் ஒரு பத்து ஜோடிங்க என்னைத் தேடி வந்தாங்க. இந்தப்படம் வந்ததுக்கு அப்புறம் எங்க தப்பை நாங்க புரிஞ்சுக்கிட்டோம். இப்ப சேர்ந்துட்டோம்னு சொன்னாங்க. ஆடியன்ஸுக்கு மெஸேஜ் சொல்ற ஆளா என்ன என்னைக்குமே நான் நினைச்சதில்லே..!  பத்து ஜோடிங்க என்னைத் தேடி வந்து சொன்னதை தவிர என்ன பிரமாதமான பலனை எதிர்பார்க்க முடியும்? இதுக்கு மேல் எதுதான் தேவை? 

முதல்வர் எம்.ஜி.ஆர் உங்கள சினிமா வாரிசா அறிவிச்சதும், அவர் தலைமையில் உங்க திருமணம் நடக்கயிருக்கறதும்,நீங்க அதிமுக பக்கம் லேசா சாயுறதா ஒரு பொதுவான கருத்து பரவலா இருக்கு.இதைத் தெளிவு படுத்துற மாதிரி ஒரு பதில் உங்களால சொல்ல முடியுமா? 

முதல்வரைப் பொறுத்தவரை அவர் நல்ல விஷயங்களை த ன் படங்களில் சொல்லிக்கிட்டு வந்தார். சொல்ற விஷயங்கள் ஒண்ணா இருந்தாலும் அவர் பாணி வேற .என் பாணி வேற.என்னோட எந்தப்படத்துலயும் அவர் படத்தையோ, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளையோ வலுக்கட்டாயமா திணிச்சது இல்ல.என் பாணியையும் நான் சொல்ற விஷயங்களையும் அதன் எளிமையையும் வெச்சு அதுல இம்ப்ரெஸ் ஆகி அவர் தன்னோட சினிமா வாரிசா என்னை அறிவிச்சிருக்கலாம். இனிமேதான் நான் இன்னும் அதிகம் பொறுப்போடவும் கவனத்தோடவும் இருந்தாகணும்  

இந்த மாதிரி ஒரு நிலைமையில நான் அந்த கட்சி பக்கம் சாயுறதா நினைக்கிறதுக்கு யாருக்கு வேணா அபிப்ராய சுதநதிரமிருக்கு. ஆனா அதுல உணமையில்லங்கறத தீர்மானமா மறுக்கறதுக்கு எனக்கும் உரிமை இருக்கு. எப்படி பார் த்தாலும் ஒவ்வொரு தனிமனிதரையும் திருப்திப்படுத்துறது அப்டிங்குறது முடியாத காரியம்    

பேட்டி: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.02.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com