ஜெயில் கைதிகளுடன் சேர்ந்து நாடகத்தில் நடித்தேன்

நடிப்பிற்கு சிவாஜி ஒரு தனி இலக்கணம் வகுத்தது போல, மெல்லிசையில் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு இசையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
ஜெயில் கைதிகளுடன் சேர்ந்து நாடகத்தில் நடித்தேன்
Published on
Updated on
2 min read

நடிப்பிற்கு சிவாஜி ஒரு தனி இலக்கணம் வகுத்தது போல, மெல்லிசையில் தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு இசையில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியவர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.

அவரைச்சந்திக்க ச் சென்ற பொழுது வாஹினி பாடல் கம்போசிங் அறைக்கு வரச் சொன்னார். முகமெல்லாம் சந்தோசத்துடன் வரவேற்றார். ராஜேஷ் ஆர்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கும் "உறவு சொல்ல வா" படத்திற்கான முதல் பாடல் அங்கு தயாராகிக்கொண்டிருந்தது. டைரக்டர்களான திரு சந்தரும் சுந்தரும் எம்.எஸ்,விக்கு பாடலுக்கான சூழ்நிலையை விளக்கி கொண்டிருந்தனர்.பாடலை கங்கை அமரன் எழுத, எம்.எஸ்.வி பல வகை டியூன்களை போட்டு பார்க்கிறார். கடைசியில்பாடலும் இசையும் ஒத்துப் போகின்றன.

பிறகு அவர் பேசத் தொடங்குகிறார்.

பொதுவாக ஒரு பாடல் கம்போசிங் செய்யப் போகிறோம் என்றால், ஸ்டூடியோ கம்போசிங் அறைக்கு வந்துதான் அதைப் பற்றி சிந்திப்பது வழக்கம். ஸ்டூடியோவை விட்டு வெளியே போனால் எல்லாவற்றையும் மறந்து விடுவேன்.

சில பாடல்களை  மிகவும் குறைந்த நேரத்தில் கம்போஸ் செய்துள்ளேன். உதாரணத்திற்கு 'வறுமையின் நிறம் சிவப்பு' படத்தில் இடம் பெறும் "சிப்பி இருக்குது முத்து இருக்குது" பாடல். அதே நேரம்  "நெஞ்சம் மறப்பதில்லை" படத்தின் தலைப்பு பாடலுக்கு  கம்போஸ் செய்து இசையமைக்க ஐந்து மாதங்கள் ஆயிற்று.

எனது இசைவாழ்க்கையில் கவிஞர் கண்ணதாசனை போல ஒரு அரிய கவிஞரை நான் பார்த்ததில்லை என்றே சொல்லலாம். அவரது பாடல்களினால் எனது இசையும் பாப்புலராகியது என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை. கவிஞர் என் உயிரில் பாதியாக இருந்தார். அவர் மறைந்த பிறகு எனக்கு பாதி உயிர்தான் இருக்கிறது.

மக்களுக்கு திரை இசை மேல் இருக்கும் ரசனை முன்பை விட இப்போது மாறுபட்டிருக்கிறது. இளைஞர் முதல் வயோதிகர் வரை பல தரப்பட்ட மக்கள் திரைப்படம் பார்ப்பதால் ரசனை மாறுபடுகிறது. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இசையமைப்பதால் எல்லா வயதினரையும் ஓரளவு என்னால் கவர முடிகிறது.

"இந்த அளவுக்கு முன்னேறியும் ஆரம்ப நாட்களை நான் மறந்ததில்லை" என்கிறார் அவர். "நான் மிகவும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். மலபாரில் உள்ள எனது சொந்த ஊரான கண்ணனூரில், இசை ஆசிரியருக்கு கொடுக்க என்னிடம் பணம் இல்லை. அவருக்கு வீட்டு வேலைகள் செய்து அவரது அன்புக்கு பாத்திரமானேன்.  அந்த எனது குரு திரு.நீலகண்ட பாகவதர்தான். அங்குள்ள ஜெயில் கைதிகளுடன் சேர்ந்து லோகிதாசன் நாடகத்தில் நடித்தேன். அன்று என் நடிப்பை பார்த்து ஜுபிடர் பிக்சர்ஸ்  திரு.சோமு அவர்கள் தனது பால கோகிலன் படத்தில் நடிக்க வைத்தார். கதாநாயகி டி.என். ரத்னம் என்னைவிட உயரமாக இருந்ததால் ஒப்பந்தம் செய்யவில்லை. அங்கிருந்துஇசையமைப்பாளர் திரு எஸ்.வி.வெங்கட்ராமனிடம் சேர்ந்தேன். அவர் இசையின் நுணுக்கங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தார்.  இதுதான் என் திரை இசை வாழ்வின் ஆரம்ப நிலை.

திரை இசை அமைப்பது தவிர நான் சில படங்ககள் தயாரித்தேன். பதிபக்தி மற்றும் கலைக்கோயில் ஆகிய இரு படங்கள்.  பத்திரிக்கைகள்  பெரிதும்  பாராட்டின. ஆனால் படங்கள் சரியாக ஓடவில்லை. எனக்கு போட்ட பணம் கூட வரவில்லை.

பேட்டி:சிக்கி

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.06.82 இதழ்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com