பயமும் பொறுப்புணர்வும் எப்போதும் என்னிடம் இருக்கின்றன - இளையராஜா

ஆர்.டி.பர்மனும், லக்ஷ்மிகாந்த் பியாரிலாலும் அசந்து போனார்கள் - இளையராஜா
பயமும் பொறுப்புணர்வும் எப்போதும் என்னிடம் இருக்கின்றன - இளையராஜா

மிகக் குறுகிய காலத்திற்குள் இசைத்துறையில் இமாலய சாதனை புரிந்தவர் இளையராஜா என்றால் அது மிகையாகாது.  இளையராஜாவின் வெற்றிக்கு காரணம் என்ன? அவரது இசை ஞானமா? பயிற்சியா? திறமையா?  அவரே சொல்கிறார்.

நான் என் தொழிலை தெய்வமாக கருதி உழைக்கிறேன். கடுமையாக உழைக்கிறேன். தொழிலை மதிக்கிறேன்.காலை ஏழு மணிக்கு பாடல் பதிவு ஆரம்பம் என்றால் அதற்கு முன்பே வந்துவிட வேண்டும் என்ற பயமும் பொறுப்புணர்வும் எப்போதும் என்னிடம் இருக்கின்றன. பணம் சம்பாதிப்பது என்பது மனிதனுக்கு முக்கியமான விஷயம்தான். ஆனால் பணமே பிரதானம் என்று நான் நினைப்பதில்லை. பணம்தான் குறிக்கோள் என்றால் பல படங்களுக்கு நான் ரெக்கார்டிங்கே செய்திருக்க மாட்டேன்.  இசை ஒன்றுதான் என் வாழ்க்கையில் இப்போது லட்சியம் குறிக்கோள் எல்லாமே!

பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிப்பதை நீங்கள் தவிர்க்கிறீர்கள் என்பது உண்மையா?

இளையராஜா லேசாகப் புன்னகைத்தார். பிறகு சொன்னார்.

எனக்குப் பத்திரிகைகள்  அளித்த ஆதரவை நிச்சயமாக மறக்க முடியாது. என் வளர்ச்சிக்கு பத்திரிக்கைகளும் காரணம் என்பதை உணர்ந்தவன் நான். ஆனால் சிலநேரங்களில் சில பத்திரிக்கைகளில் எழுதப்படும்  கணிப்புகள் தவறாக இருந்த பொழுதிலும் எனக்கு பத்திரிக்கைகள் மீது வெறுப்பு கிடையாது.

பொதுவாக விமர்சனம் என்பது கலைஞர்களுக்கு உரமும் உற்சாகமும் ஊட்டக் கூடியதாக இருக்க வேண்டியது அவசியம்.அதற்காக குறையே கூறக் கூடாது; துதி பட வேண்டும் என்று அர்த்தமில்லை.விமர்சனத்தை படிப்பவர்கள் அதனைப் படித்து விட்டு அதனை ஒப்புக் கொள்ள வேண்டும்.  "பாட்டுக்கள்  சரி இல்லை" என்று எழுதப்பட்ட பிறகு, அந்த பாட்டுக்கள் மக்கள் மத்தியில் ஹிட் ஆகும் நிலை வந்தால் அந்த விமர்சனம் தவறான கணிப்புதானே?

சந்திப்பு: உத்தமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.11.82 இதழ் ) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com