பகுதி 28 – வாழாப் பத்து - 4

கதிரவனில் திகழும் ஒளி போன்றவனே, செல்வம் மிகுந்த, அழகிய சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே,
Published on
Updated on
1 min read

இவ்வுலகில் வாழவிரும்பாமல், சிவபெருமானின் திருவடிகளில் சேரவிரும்பும் தன்மையைக் குறிப்பிடும் பாடல்கள் இவை.

திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.

172

பாடலின்பம்

பருதிவாழ் ஒளியாய் பாதமேஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

திருஉயர் கோலச் சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

கருணையே நோக்கிக் கசிந்துஉளம் உருகிக்

கலந்துநான் வாழும்ஆறுஅறியா

மருளனேன், உலகில் வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

*

பந்துஅணை விரலாள் பங்க, நீஅல்லால்

பற்றுநான் மற்றுஇலேன் கண்டாய்,

செந்தழல் போல்வாய், சிவபுரத்துஅரசே,

திருப்பெருந்துறைஉறை சிவனே,

அந்தம்இல் அமுதே, அரும்பெரும்பொருளே,

ஆரமுதே, அடியேனை

வந்துஉயஆண்டாய், வாழ்கிலேன் கண்டாய்,

வருகஎன்று அருள்புரியாயே.

பொருளின்பம்

கதிரவனில் திகழும் ஒளி போன்றவனே, செல்வம் மிகுந்த, அழகிய சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, உன்னுடைய திருவடிகளைத் தவிர வேறு பற்று எதுவும் எனக்கு இல்லை, அதை நீ அறிவாய்,

உன்னுடைய கருணையையே எதிர்நோக்கி, உள்ளம் கசிந்து, மனம் உருகி, உன்னுடன் கலந்து வாழும் வழி எனக்குத் தெரியவில்லை, ஆகவே, நான் மயங்கியிருக்கிறேன், சிவபெருமானே, இனி நான் இந்த உலகில் வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும்,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.

*

பந்தைப் பிடித்துக்கொண்டிருக்கும் அழகிய விரல்களைக் கொண்ட உமையம்மையை உடலில் ஒரு பாகமாகக் கொண்டவனே, சிவந்த நெருப்புபோல் திருமேனியுடன் திகழ்கிறவனே, சிவபுரத்தின் அரசே, திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவனே, முடிவில்லாத அமுதமே, பெறுவதற்கு அரிய பொருளே, தெவிட்டாத அமுதமே, உன்னைத் தவிர எனக்கு வேறு பற்று இல்லை, அதை நீ அறிவாய்,

சிவபெருமானே, நான் உய்வதற்காக அன்றைக்கு இங்கே வந்து என்னை ஆண்டாய், இனியும் நான் இங்கே வாழமாட்டேன், அது உனக்குத் தெரியும்,  ‘வருக’  என்று என்னை உன்னிடம் அழைத்து அருள்செய்.

சொல்லின்பம்

பருதி: சூரியன்

மற்றுஇலேன்: வேறு இல்லை

திரு: செல்வம்

கோல: அழகு

உறை: வசிக்கிற/ எழுந்தருளியிருக்கிற

வாழும்ஆறு: வாழும் வழி

மருளனேன்: மயங்கியவன்

பங்க: பங்காகக் கொண்டவனே

செந்தழல்: சிவந்த நெருப்பு

அந்தம்இல்: முடிவில்லாத

ஆரமுதே: திகட்டாத அமுதமே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com