தில்லையில் எழுதப்பட்ட பாடல் 146 அடிகளைக் கொண்டது. மாணிக்கவாசகர் தன்னைத் தலைவியாகவும் சிவபெருமானைத் தலைவனாகவும் எண்ணி, அவனுடைய பெருமைகளைத் தன் தோழியிடம் சொல்வதாகப் பாடியது.
ஆசிரியப்பா என்ற வகையில் அமைந்த பாடல் இது.
பாடலின்பம்
தில்லை முது ஊர் ஆடிய திருவடி
பல்லுயிர் எல்லாம் பயின்றனன் ஆகி
எண் இல் பல் குணம் எழில் பெற விளங்கி
மண்ணும் விண்ணும் வானோர் உலகும்
துன்னிய கல்வி தோற்றியும் அழித்தும்
என்னுடை இருளை ஏறத் துரந்தும்
அடியார் உள்ளத்து அன்பு மீதூரக்
குடியாக் கொண்ட கொள்கையும் சிறப்பும்...
பொருளின்பம்
பழமையான தில்லை என்கிற ஊரில் ஆடிய திருப்பாதங்களை உடையவன், உலக உயிர்கள் அனைத்தினுள்ளும் நிறைந்திருக்கிறான்,
எண்ணிச் சொல்ல இயலாத பலவகைக் குணங்களைக் கொண்டு அழகுடன் திகழ்கிறவன் அவன்,
இந்தப் பூமியில், வானத்தில், தேவர் உலகத்தில் உள்ள கல்விகள்/ கலைகள் அனைத்தையும் படைப்பவன் அவனே, அழிப்பவனும் அவனே,
என்னுடைய உள்ளத்தில் இருந்த இருளை முழுவதுமாகத் துடைத்தவன் அவன்,
அன்பர்களின் உள்ளத்தில் அன்பு பொங்குமாறு செய்து, அதையே தன் குடியிருப்பாகக் கொண்ட சிறப்புடையவன் அவன்.
சொல்லின்பம்
முது ஊர்: பழையான ஊர்
பயிலுதல்: நிறைதல்
துன்னிய: பொருந்திய
தோற்றி: தோற்றுவித்து/ உண்டாக்கி
ஏற: முழுமையாக
துரந்து: நீக்கி/ வென்று
மீதூர: பெருக/ அதிகமாக
குடியா: குடியாக/ இருப்பிடமாக
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.