பகுதி 51 – அச்சோப் பதிகம் - 1

முக்திநெறியை அறியாத மூடர்களுடன் நான் பழகிவந்தேன், அவர்களைப்போலவே நானும் பிற சுகங்களைப் பெற முயன்றுவந்தேன்,
Published on
Updated on
1 min read

‘அச்சோ’ என்பது வியப்பு அல்லது இரக்கத்தைக் குறிக்கும் சொல். சிவபெருமான் தனக்குச் செய்த அருளை எண்ணி வியந்து / நெகிழ்ந்து போற்றும்வகையில் அமைந்த பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. பன்னிரண்டு பாடல்களின் தொகுப்பு. சிலர் ஒன்பது பாடல்கள் என்றும் சொல்வார்கள்.

267

பாடலின்பம்

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை,

பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்

சித்தமலம் அறுவித்துச் சிவம்ஆக்கி எனைஆண்ட

அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

*

நெறிஇல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனை,

சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்

குறிஒன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தைஎனக்(கு)

அறியும்வண்ணம் அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

*

பொய்எல்லாம் மென்என்று புணர்முலையார் போகத்தே

மையல்உறக்கடவேனை மாளாமே காத்தருளி,

தையல்இடம்கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்

ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

பொருளின்பம்

முக்திநெறியை அறியாத மூடர்களுடன் நான் பழகிவந்தேன், அவர்களைப்போலவே நானும் பிற சுகங்களைப் பெற முயன்றுவந்தேன்,

அப்படிப்பட்ட எனக்குப் பக்தியாகிய நெறியை அறியவைத்தான், என்னுடைய பழைய வினைகளை அழித்தான், என் சிந்தனையில் இருந்த குற்றங்களைப் போக்கினான், என்னைச் சிவமயமாக்கி ஆண்டுகொண்டான் நம் தந்தை, சிவபெருமான்.

அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

*

முறையற்ற வழிகளையே என்னுடைய பாதையாக நினைத்துக்கொண்டிருந்தேன், நான் இனிமேலும் அத்தகைய சிறு நெறிகளின் பக்கம் சேராதபடி எம்பெருமான் தடுத்தாட்கொண்டான், அவனுடைய திருவருளை நான் பெறச்செய்தான்,

அத்தகைய சிவபெருமான், தனக்கென்று அடையாளம் இல்லாதபடி எங்கும் நிறைந்திருக்கிறவன், கூத்தன், அவனது கூத்தை நான் அறியும்படி எனக்கு அருளினான்.

அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

*

பொய்யையெல்லாம் மெய்யென்று நம்பினேன், நெருங்கிய மார்பகங்களைக்கொண்ட பெண்களின் சுகத்தில் மயங்கிக் கிடந்தேன், நான் அவ்வாறே அழிந்துவிடாமல் எம்பெருமான் காத்தான்,

என்னுடைய தலைவன், உமையம்மையைத் தன் உடலின் இடபாகமாகக் கொண்ட பிரான், தன்னுடைய திருவடிகளை நான் சேரும்வண்ணம் அருளினான்,

அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

சொல்லின்பம்

முத்திநெறி: மோட்ச வழி

மூர்க்கர்: மூடர்

பத்திநெறி: பக்தி வழி

பழவினைகள் பாறும்வண்ணம்: பழைய வினைகள் கெடும்படி

சித்த மலம் அறுவித்து: சிந்தனையில் உள்ள குற்றங்களை நீக்கி

அத்தன்: தந்தை

அருளியவாறு: அருளியதன்மை

ஆர்: யார்

அச்சோ: அடடா (இரக்கக் குறிப்பு)

நெறி: வழி

நினைவேனை: நினைப்பவனை

புணர்முலையார் போகத்தே: நெருங்கிய மார்பகங்களைக்கொண்ட பெண்களின் சுகத்தில்

மையல்: மயக்கம்

மாளாமே: அழியாமல்

தையல் இடம்கொண்ட பிரான்: பெண்ணை / உமையம்மையைத் தன் உடலின் இடப்பக்கம் கொண்ட பிரான் / சிவபெருமான்

ஐயன்: தலைவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com