பகுதி 51 – அச்சோப் பதிகம் - 2

நெருப்பிலே வெந்துவிழப்போகும் இந்த உடலையும் பிறவியையும் உண்மையென்று நம்பினேன், தீவினைகளைப் பெருக்கிக்கொண்டேன், கொத்தான மலர்களைக் கூந்தலில் சூடிய, திரண்ட வளையல்களைக்கொண்ட பெண்களுடைய குவிந்த மார்பகங்களின் மீது வீழ்ந்து கிடந்தேன்,
Published on
Updated on
1 min read

‘அச்சோ’ என்பது வியப்பு அல்லது இரக்கத்தைக் குறிக்கும் சொல். சிவபெருமான் தனக்குச் செய்த அருளை எண்ணி வியந்து / நெகிழ்ந்து போற்றும்வகையில் அமைந்த பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. பன்னிரண்டு பாடல்களின் தொகுப்பு. சிலர் ஒன்பது பாடல்கள் என்றும் சொல்வார்கள்.

269

பாடலின்பம்

வெந்துவிழும் உடல்பிறவி மெய்என்று வினைபெருக்கிக்

கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்

பந்தம்அறுத்து எனைஆண்டு பரிசுஅற என் துரிசும்அறுத்(து)

அந்தம்எனக்கு அருளியவாறு ஆர் பெறுவார் அச்சோவே.

*

தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்

பையவே கொடுபோந்து பாசம்எனும் தாழ்உருவி

உய்யுநெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை

ஐயன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே.

பொருளின்பம்

நெருப்பிலே வெந்துவிழப்போகும் இந்த உடலையும் பிறவியையும் உண்மையென்று நம்பினேன், தீவினைகளைப் பெருக்கிக்கொண்டேன், கொத்தான மலர்களைக் கூந்தலில் சூடிய, திரண்ட வளையல்களைக்கொண்ட பெண்களுடைய குவிந்த மார்பகங்களின் மீது வீழ்ந்து கிடந்தேன்,

அப்படிப்பட்ட என்னுடைய பந்தங்களை அறுத்து, என்னை ஆட்கொண்டு, என் இயல்புத்தன்மையைக் கெடச்செய்து, என் குற்றங்களை அறுத்து, நிறைவான சிவபதத்தை எனக்கு அருளினான் சிவபெருமான்,

அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

*

பெண்கள்மேல் ஏற்பட்ட மயக்கத்திலே தாழ்ந்து விழுந்துகிடந்தேன்,

எம்பெருமான், என் தலைவன், சிவபெருமான் என்னை மெதுவாக அழைத்துச்சென்று, பாசம் என்கிற தாழ்ப்பாளை அவிழ்த்தான், பிழைக்கும் வழியைக் காட்டினான், ஓங்காரத்தின் உட்பொருளை எனக்கு அருளினான்,

அடடா! அந்தப் பெருமானின் அருளை நான் பெற்றதுபோல் வேறு யார் பெறுவார்கள்!

சொல்லின்பம்

மெய்: உண்மை

கொந்துகுழல் கோல்வளையார்: கொத்தான மலர்களைக்கொண்ட கூந்தல், திரண்ட வளையல்களை அணிந்த பெண்கள்

பரிசு: தன்மை

துரிசு: குற்றம்

அந்தம்: நிறைவான சிவபதம் என்கிற நிலை

அருளியவாறு: அருளியதன்மை

ஆர்: யார்

அச்சோ: அடடா (இரக்கக்குறிப்பு)

தையலார் மையலிலே: பெண்கள்மேல் கொண்ட மயக்கத்திலே

விழக்கடவேனை: விழவேண்டியவனை / விழுந்து கிடந்தவனை

பையவே கொடுபோந்து: மெதுவாகக் கொண்டுசென்று

தாழ்: தாழ்ப்பாள்

உய்யுநெறி: பிழைக்கும் வழி

ஐயன்: தலைவன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com