யாத்திரை என்றால், பயணம் என்பது பொருள். உலக இன்பங்களை விட்டு, சிவபுரத்துக்குச் செல்லும் மோட்சப் பயணத்தைப் பற்றிய பாடல்கள் இவை.
தில்லையில் அருளப்பட்டவை. பத்து பாடல்களின் தொகுப்பு.
247
பாடலின்பம்
தாமே தமக்குச் சுற்றமும், தாமே தமக்கு விதிவகையும்,
யாம்ஆர், எமதுஆர், பாசம்ஆர், என்ன மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரொடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு
போம்ஆறு அமைமின், பொய்நீக்கி, புயங்கன், ஆள்வான் பொன்அடிக்கே.
*
அடியார்ஆனீர் எல்லீரும், அகலவிடுமின் விளையாட்டை,
கடிசேர்அடியே வந்துஅடைந்து கடைக்கொண்டுஇருமின், திருக்குறிப்பைச்
செடிசேர்உடலைச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன் பூஆர் கழற்கே புகவிடுமே.
பொருளின்பம்
தனக்குத்தானே சுற்றமானவன், தனக்குத்தானே விதிவகைகளை அமைத்துக்கொண்டவன் சிவபெருமான்,
அவனை வணங்குகிற நாம் யார்? நம்முடையது என்று இந்த உலகில் ஏதேனும் உண்டா? நாம் பிறர் மீதும் பொருள்கள் மீதும் வைத்திருக்கிற பாசம் எப்படிப்பட்டது? இந்த உலகவாழ்க்கை எப்படிப்பட்ட மாயம்?… இதையெல்லாம் உணர்வோம், இவற்றைத் துறப்போம்,
பெரும்தலைவனான சிவபெருமானின் பழைய அடியவர்களோடு சேர்வோம், அவனுடைய குறிப்பை உணர்ந்து, அதையே நமது லட்சியமாக்கிக்கொண்டு செல்வோம், பொய்யான விருப்பங்களை நீக்குவோம், பாம்பை அணிந்தவன், நம்மை ஆள்கிறவன், அவனுடைய பொன் திருவடிகளைச் சேர்வோம்.
*
அடியவர்களான நீங்கள் எல்லாரும், இந்த உலக விளையாட்டை, விருப்பங்களை விடுங்கள்,
சிவபெருமானின் மணம் நிறைந்த மலர்த் திருவடிகளைச் சேருங்கள், அவனது திருவுள்ளக் குறிப்பை அறிய வேண்டும் என்கிற உறுதியான நோக்கத்துடன் காத்திருங்கள்,
அவ்வாறு நாம் காத்திருந்தால், திருமேனியில் திருநீறு அணிந்த, பாம்பை அணிந்த சிவபெருமான் அருள்செய்வான், குற்றம் நிறைந்த இந்த உடலை நீக்கி நம்மைச் சிவலோகத்தில் வைப்பான், மலர்கள் நிறைந்த தன் திருவடிகளில் நாம் புகுமாறு (இன்னொரு பிறவி இல்லாமல்) அருள்செய்வான்.
சொல்லின்பம்
சுற்றம்: உறவினர்
யாம் ஆர்: நான் யார்
பாசம்: பற்று
கோமான்: பெரும் தலைவன்
பண்டைத் தொண்டர்: பழைய அடியவர் / நெடுங்காலமாக அவனை வணங்கிவருகிறவர்கள்
குறிப்பு: உள்ளக்குறிப்பு / மனத்தில் உள்ள எண்ணம்
குறி: லட்சியம்
போம்ஆறு அமைமின்: செல்லுகின்ற வழியை அமைத்துக்கொள்ளுங்கள்
புயங்கன்: பாம்பை அணிந்தவன்
ஆள்வான்: நம்மை ஆள்கிறவன்
எல்லீரும்: எல்லாரும்
அகலவிடுமின்: நீங்கிச்செல்லவிடுங்கள்
கடி: நறுமணம்
கடைக்கொண்டு இருமின்: உறுதியாக எண்ணி இருங்கள்
செடி: குற்றம்
செல: செல்ல
நமை: நம்மை
பொடிசேர் மேனி: திருநீறு பூசிய திருமேனி
பூஆர் கழல்: பூக்கள் நிறைந்த, கழல் என்கிற ஆண்கள் அணியும் வீர ஆபரணத்தை அணிந்த சிவபெருமானின் திருவடிகள்
புகவிடுமே: புகச்செய்வான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.