பழங்காலத்தே இறைவன் அருளிய நான்கு வேதங்களைக் குறித்துத் தொடங்கும் பாடல்கள் இவை. ஆகவே, ‘பண்டுஆய நான்மறை’ என்று பெயர் அமைந்தது.
அந்தாதியாக அமைந்த இந்தப் பாடல்கள் திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை. ஏழு பாடல்களின் தொகுப்பு.
பாடலின்பம்
பண்டுஆய நான்மறையும்பால் அணுகா, மால்,அயனும்
கண்டாரும்இல்லை, கடையேனைத் தொண்டாகக்
கொண்டுஅருளும் கோகழி எம்கோமாற்கு, நெஞ்சமே
உண்டாகுமோ கைம்மாறு? உரை.
*
உள்ள மலம்மூன்றும் மாய, உகு பெரும்தேன்
வெள்ளம்தரும் பரியின்மேல் வந்த வள்ளல்
மருவும் பெருந்துறையை வாழ்த்துமின்கள், வாழ்த்தக்
கருவும்கெடும் பிறவிக்காடு.
*
காட்டுஅகத்து வேடன், கடலில் வலைவாணன்,
நாட்டில் பரிப்பாகன், நம்வினையை வீட்டி
அருளும் பெருந்துறையான் அம்கமல பாதம்
மருளும்கெட நெஞ்சே, வாழ்த்து.
பொருளின்பம்
பழமையான நான்கு மறைகளும் சிவபெருமானால் அருளப்பட்டவைதான், ஆனாலும், அவற்றால் அவனை நெருங்க இயலாது. (இவன் இப்படிப்பட்டவன் என விவரிக்க இயலாது.)
அவ்வளவு ஏன், திருமால், பிரம்மனால்கூட அவனைக் காண இயலவில்லையே!
அப்படிப்பட்ட பெருமான், கடைசிநிலையில் இருக்கிற என்னைத் தொண்டனாக ஏற்றுக்கொண்டானே!
திருக்கோகழியில் எழுந்தருளியிருக்கும் நம் தலைவனுக்குக் கைம்மாறாக நான் என்ன செய்வேன்? என் நெஞ்சமே, அதைச் சொல்!
*
மக்கள் உள்ளத்தில் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களையும் அழித்து, பேரின்பமாகிய தேனை வெள்ளமாகப் பெருகச்செய்கிறவன், குதிரையின் மீது ஏறிவந்த வள்ளல், அந்தச் சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருப்பெருந்துறையை வாழ்த்துங்கள்,
அவ்வாறு வாழ்த்தினால், உங்களுடைய பிறவியாகிய காடு வேரோடு அழியும்.
*
காட்டிலே வேடனாக வந்தவன், கடலிலே வலைவீசும் மீனவனாக வந்தவன், நாட்டிலே குதிரை மீது ஏறிய வீரனாக வந்தவன், சிவபெருமான், நம்முடைய வினைகளை வீழ்த்தி அருள்செய்கிற திருப்பெருந்துறையான்,
நெஞ்சே, உன்னுடைய மயக்கம் கெட வேண்டுமென்றால், அவனது அழகிய, தாமரை போன்ற திருவடிகளை வாழ்த்து.
சொல்லின்பம்
பண்டுஆய நான்மறையும் பால் அணுகா: பழமையான நான்கு வேதங்களும் சிவபெருமானை நெருங்காது
அயன்: பிரம்மன்
கடையேனை: கடைசிநிலையில் உள்ள என்னை
கோமான்: தலைவன்
மலம்மூன்றும் மாய: ஆணவம், கன்மம், மாயை என்கிற மூன்று மலங்களும் அழிய
உகு: பொங்குகிற
பரி: குதிரை
மருவும்: எழுந்தருளியிருக்கும்
வாழ்த்துமின்கள்: வாழ்த்துங்கள்
கருவும்கெடும்: கருவோடு / வேரோடு அழியும்
அகத்து: உள்ளே
வலைவாணன்: வலைவீசும் மீனவன்
பரிப்பாகன்: குதிரைப்பாகன்
வீட்டி: வீழ்த்தி
அம்கமல பாதம்: அழகிய, தாமரை போன்ற திருவடிகள்
மருளும்: மயக்கமும்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.