பகுதி 49 – திருப்படையாட்சி -1
இறைவனை அறிவதற்கான ஆத்மசாதனங்களைத் ‘திருப்படை’ என்கிறார்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு திருப்படை விவரிக்கப்பட்டுள்ளதாக விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர்.
இப்பாடல்கள் தில்லையில் அருளப்பட்டவை. எட்டு பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
260
பாடலின்பம்
கண்கள்இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே,
காரிகையார்கள்தம் வாழ்வில் என்வாழ்வு கடைப்படும் ஆகாதே,
மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே,
மால்அறியா மலர்ப்பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே,
பண்களி கூர்தரு பாடலொடு ஆடல் பயின்றிடும் ஆகாதே,
பாண்டிநல்நாடுஉடையான் படைஆட்சிகள் பாடுதும் ஆகாதே,
விண்களி கூர்வது ஓர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே,
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடிலே.
*
ஒன்றினொடு ஒன்றும் ஓர் ஐந்தினொடு ஐந்தும் உயிர்ப்பதும் ஆகாதே,
உன்அடியார்அடியார்அடியோம்என உய்ந்தன ஆகாதே,
கன்றைநினைந்துஎழு தாய்என வந்த கணக்குஅதும் ஆகாதே,
காரணம்ஆகும் அனாதிகுணங்கள் கருத்துறும் ஆகாதே,
நன்றுஇது தீதுஇதுஎன வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே,
நாமும் மேலாம் அடியாருடனே செல நண்ணுதும் ஆகாதே,
என்றும்என் அன்புநிறைந்த பராஅமுது எய்துவது ஆகாதே,
ஏறுஉடையான், எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே.
பொருளின்பம்
மீனவனாக வந்து வலைவீசிய வேடன், சிவபெருமான் நம்முன்னே வந்து தோன்றினால்…
நம் ஊனக்கண்கள் அவனுடைய திருவடிகளைக் கண்டு மகிழாது (ஞானவுணர்வால் நாம் அவனைக் காண்போம், அந்த உணர்வு வந்த பிறகு, கண் போன்றவற்றால் பலன் என்ன?)
சாதாரணப் பெண்களைப்போல (ஜீவாத்மாக்களைப்போல) நம்முடைய வாழ்க்கை இழிவானதாக இருக்காது, (உயர்ந்தநிலையில் அமையும்),
அஞ்ஞானத்தில் சிக்கி மறுபடி மண்ணில் பிறக்கும் நிலை ஏற்படாது,
திருமாலும் அறியாத மலர்த் திருவடிகளை வணங்கும் நிலை ஏற்படாது, (வணங்குபவர் நாம், வணங்கப்படுபவன் அவன் என்கிற மாறுதல் இன்றி அவனுடன் கலந்துவிடுவோம்),
இசைப்பாடலோடு ஆடல் நிகழாது, (இதுபோன்ற சடங்குகளில் கவனம் செலுத்தாமல் உணர்வால் இறைவனை நெருங்கிவிடுவோம்!)
பாண்டி நன்னாட்டின் தலைவனான சிவபெருமானின் வீரச் செயல்களைப் பாடமாட்டோம், (இறைவனின் உண்மைத்தன்மையை உணர்வோம்)
விண்ணுலகத்தில் உள்ளவர்கள் தங்களை உயர்வாக நினைக்கமாட்டார்கள், கீழான செயலை மேலானதாக மாற்றுகிற அற்புதச் செயல்கள் தனியே நிகழாது, (பக்தியே பெரிய அற்புதமாக, அனுபவமாகத் திகழும்.)
*
காளையைத் தனது வாகனமாகக் கொண்டவன், என்னை அடிமையாகக் கொண்டவன், சிவபெருமான் நம்முள் புகுந்தால்...
உயிரோடு உடல், ஐம்பொறிகளோடு ஐம்புலன்கள் பொருந்தாது, (சிவமயமாகிவிட்டதால் இதுபோன்ற வேறுபாடுகள் மறைந்துவிடுகின்றன),
'சிவனடியார்களின் அடியவர்களுக்கு நாங்கள் அடியவர்கள்’ என்று சொல்லி, அதனால் பிழைக்கிற தன்மை நிகழாது, (அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் இனிமையைவிட, சிவமயமான நிலை உயர்ந்ததாகும்),
கன்றுக்குத் தாய்ப்பசு இரங்குவதுபோல் பக்தர்களுக்குச் சிவன் அருள் செய்யும் நிலை இருக்காது, (அதைவிட உயர்ந்ததோர் அதீதநிலையை எட்டிவிடுவதால்),
இறைவனின் திருநாமங்களை, குணங்களை எண்ணிச் சிந்தித்து, அதற்காகவே பல பிறவிகள் எடுக்கும் நிலை ஏற்படாது, (சிவமயமாகும் நிலையில் இறைவனுடைய இந்த அடையாளங்களைக் கடந்த ஓர் ஒன்றுதல் ஏற்படுகிறது),
இது நல்லது, இது தீயது என்கிற நடுக்கங்கள் மறைந்துவிடும், (பாவம், புண்ணியம் இல்லாத நிலை இது,)
அடியவர்களுடன் சேர்ந்து இறைவன் புகழைப் பாடும் எண்ணம் ஏற்படாது, (இறைவனை உணர்ந்தபின் இவற்றில் கவனம் செல்லாது),
என்றும் நம் அன்புக்கு உரியவனான, உயர்ந்த அமுதமான சிவனில் தோய்ந்திருப்பது நிகழாது, (பரமானந்தத்தில் திளைக்கும் நிலையைவிட சிவமயமானநிலை உயர்ந்தது).
சொல்லின்பம்
கழல்: ஆண்கள் அணியும் வீர ஆபரணம் / இங்கே சிவபெருமானின் திருவடிகளைக் குறிக்கிறது
களிப்பன: மகிழ்வன
காரிகையார்கள்: பெண்கள் / ஜீவாத்மாக்கள்
கடைப்படும்: இழிவான நிலையை அடையும்
பண்: இசைப்பாடல்
களி கூர்தரு: மகிழ்ச்சி தரும்
பயின்றிடும்: பாடுதல் / ஆடுதல்
படை ஆட்சிகள்: வீரச்செயல்கள்
வேதகம்: கீழானதை மேலானதாக மாற்றும் அற்புதச் செயல்
கானவன்: வேடன்
வெளிப்படுமாயிடிலே: தோன்றினால்
உயிர்ப்பது: பொருந்துவது / இணைந்து செயல்படுவது
உய்ந்தன: பிழைக்கும் நிலை
நண்ணுதும்: பொருந்துவோம் / செய்வோம்
பரா அமுது எய்துவது: உயர்ந்த அமுதத்தைப் பெறுவது
ஏறு உடையான்: காளையை வாகனமாகக் கொண்டவன்
ஆளுடை நாயகன்: அடிமையாகக் கொண்ட தலைவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.