இறைவனை அறிவதற்கான ஆத்மசாதனங்களைத் ‘திருப்படை’ என்கிறார்கள். இந்தப் பாடல்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு திருப்படை விவரிக்கப்பட்டுள்ளதாக விளக்குகிறார் சுவாமி சித்பவானந்தர்.
இப்பாடல்கள் தில்லையில் அருளப்பட்டவை. எட்டு பாடல்களைக் கொண்ட தொகுப்பு இது.
பாடலின்பம்
பந்தவிகார குணங்கள் பறிந்து மறிந்திடும்ஆகாதே,
பாவனைஆய கருத்தினில் வந்த பராஅமுதுஆகாதே,
அந்தம்இலாத அகண்டமும் நம்முள் அகப்படும்ஆகாதே,
ஆதிமுதல் பரம்ஆய பரம்சுடர் அண்ணுவதுஆகாதே,
செந்துவர் வாய்மடவார் இடர்ஆனவை சிந்திடும்ஆகாதே,
சேல்அன கண்கள் அவன் திருமேனி திளைப்பனஆகாதே,
இந்திரஞால இடர்ப்பிறவித்துயர் ஏகுவதுஆகாதே,
என்னுடை நாயகன்ஆகிய ஈசன் எதிர்ப்படுமாயிடிலே.
*
என்அணிஆர்முலை ஆகம் அளைந்துஉடன் இன்புறும்ஆகாதே,
எல்லைஇல்லா மாகருணைக்கடல் இன்று இனிது ஆடுதும்ஆகாதே,
நல்மணி நாதம் முழங்கி என் உள்ஊற நண்ணுவதுஆகாதே,
நாதன் அணி திருநீற்றினை நித்தலும் நண்ணுவதுஆகாதே,
மன்னிய அன்பரில் என்பணி முந்துஉற வைகுவதுஆகாதே,
மாமறையும் அறியா மலர்ப்பாதம் வணங்குதும்ஆகாதே,
இன்இயல் செங்கழுநீர்மலர் என்தலை எய்துவதுஆகாதே,
என்னைஉடைப் பெருமான் அருள்ஈசன் எழுந்துஅருளப்பெறிலே.
பொருளின்பம்
என்னை அடிமையாகக் கொண்ட நாயகன், ஈசன், சிவபெருமான் என்முன்னே தோன்றினால்...
பந்தத்தை உண்டாக்குவதற்காக மாறி அமைகிற சத்வம், ரஜஸ், தமஸ் என்கிற மூன்று குணங்களும் வேரோடு களைந்தெடுக்கப்பட்டுவிடும்,
பாவனை என்கிற, கருத்தினில் உதிக்கிற தெய்விகக் காட்சியாகிய ஒப்பற்ற அமுதத்தைச் சுவைக்க இயலாது, (சிவமயமான நிலையில் இக்கருத்து அனுபவம் இருக்காது),
எல்லையில்லாத உலகப்பொருள்கள் நம் உள்ளத்தில் அகப்படாது, (சிவத்தில் மட்டும் கவனம் செல்லும்),
அனைத்துக்கும் முதலாவதான, உயர்ந்த பரஞ்சுடர் நம்மை நெருங்காது, (சிவத்தில் ஒன்றிவிட்டதால், அதனைத் தனித்துக்கண்டு, பின் நெருங்குவதாகச் சொல்லும் நிலை இல்லை),
சிவந்த வாயைக்கொண்ட பெண்களால் ஏற்படும் துயரங்கள் நீங்கிவிடும்,
மீன்போன்ற கண்கள் அவனுடைய திருமேனியைக் கண்டு திளைக்காது, (அவனுடன் ஒன்றிவிட்டதால், ஊனக்கண்களால் பார்க்கும் அவசியம் இல்லை),
இந்திரஜாலத்தைப் போன்ற, துன்பத்தைத் தருகிற பிறவித்துயரம் ஒழிந்துபோகும்.
*
என்னை அடிமையாகக் கொண்ட சிவபெருமான், அருள்செய்யும் ஈசன் என்முன்னே எழுந்தருளினால்...
அழகிய என் மார்புகள் அவனுடைய திருமேனியைத் தழுவி இன்புறாது, (சிவனை உருவமாகக் காணாமல் உணர்வுநிலையில் காணுவேன்),
எல்லையில்லாத உயர்ந்த கருணைக்கடலான இறைவனில் இனிமையாக நீராடுவது நிகழாது, (அவ்வாறு தோய்வதற்குத் தனியே ஒருவர் இருப்பதில்லை என்பதே சிவமயமான நிலை),
சிவனடியார்களுக்குள்ளே கேட்கிற நல்ல மணிநாதம் எனக்குள் கேட்காது, (அசைவற்ற நிலை அது),
தலைவனாகிய சிவபெருமான் அணிகிற திருநீறை தினமும் தேடி அணியும் தேவை வராது, (வெறும் சின்னங்களில் ஆர்வம் இருக்காது),
அன்பர்களுக்கு முந்திச்சென்று பணிவிடை செய்தல் நடைபெறாது, (அதைவிடப் பெரிய ஆனந்தநிலையில் ஒன்றுகலந்திருப்பதால்),
உயர்ந்த வேதங்களாலும் அறியப்படாத மலர்த் திருவடிகளை வணங்குதல் நடைபெறாது, (அவ்வாறு வணங்குவதற்குத் தனியே ஒருவர் இருப்பதில்லை என்பதே சிவமயமான நிலை),
இனிய இயல்பைக்கொண்ட செங்கழுநீர் மலர் போன்ற இறைவனுடைய திருவடிகளை என் தலையில் பொருத்திக்கொள்ளுதல் நிகழாது, (அவ்வாறு வணங்குவதற்குத் தனியே ஒருவர் இருப்பதில்லை என்பதே சிவமயமான நிலை),
சொல்லின்பம்
பந்த விகார குணங்கள்: பற்றுகளை உண்டாக்குவதற்காக வேறுபட்டு நிற்கும் முக்குணங்கள் (சத்வம், ரஜஸ், தமஸ்)
பறிந்து மறிந்திடும்: வேரோடு அழிந்திடும்
பாவனை: கருத்தில் தோன்றும் காட்சி
பராஅமுது: உயர்ந்த அமுதம்
அந்தம் இலாத அகண்டம்: எல்லையில்லாத உலகப்பொருள்கள்
ஆதி: முதன்மை
பரம்: உயர்ந்த பொருள்
அண்ணுவது: நெருங்குவது
செந்துவர்: பவளம்
மடவார்: பெண்கள்
சிந்திடும்: அழிந்திடும்
சேல்: மீன்
இந்திரஞால இடர்: இந்திரஜாலம் போன்ற, துன்பமான
ஏகுவது: அடைவது
அணி: அழகிய
ஆகம்: உடல்
அளைந்து: தழுவி
மாகருணைக்கடல்: பெரிய கருணைக்கடல்
நண்ணுவது: பொருந்துவது
நித்தலும்: தினமும்
மன்னிய: பொருந்திய
வைகுவது: முற்படுதல்
மாமறையும் அறியா மலர்ப்பாதம்: உயர்ந்த வேதங்களும் அறியாத மலர்த் திருவடிகள்
இன் இயல்: இனிமையான இயல்பைக்கொண்ட
எய்துவது: அடைவது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.