பகுதி 50 – ஆனந்த மாலை - 3

எங்கள் அரசனே, சிவபெருமானே, நீ எனக்கு அருள வேண்டாமா? கொடியவனான நான் கெட்டுஅழிய வேண்டுமோ?
Published on
Updated on
1 min read

சிவனை வணங்குவோர் அனுபவிக்கும் ஆனந்தத்தின் இயல்பை விவரிக்கும் பாடல்கள் இவை.

தில்லையில் அருளப்பட்டவை. மொத்தம் ஏழு பாடல்களின் தொகுப்பு.

266

பாடலின்பம்

கோவே, அருளவேண்டாவோ, கொடியேன் கெடவே அமையுமே,

ஆஆ என்னாவிடில் என்னை அஞ்சேல் என்பார் ஆரோதான்?

சாவார்எல்லாம் என்அளவோ, தக்கவாறுஅன்று என்னாரோ,

தேவே, தில்லை நடம்ஆடீ, திகைத்தேன் இனித்தான் தேற்றாயே.

*

நரியைக் குதிரைப் பரிஆக்கி, ஞாலம்எல்லாம் நிகழ்வித்துப்

பரிய தென்னன் மதுரைஎல்லாம் பிச்சுஅதுஏற்றும் பெருந்துறையாய்,

அரிய பொருளே, அவிநாசி அப்பா, பாண்டி வெள்ளமே,

தெரிய அரிய பரஞ்சோதீ, செய்வதுஒன்றும் அறியேனே.

பொருளின்பம்

எங்கள் அரசனே, சிவபெருமானே, நீ எனக்கு அருள வேண்டாமா? கொடியவனான நான் கெட்டுஅழிய வேண்டுமோ?

‘அடடா’ என்று நீ என் மீது கருணை காட்டாவிட்டால், ‘அஞ்சாதே’ என்று சொல்லி என்னைக் காப்பவர்கள் யார்?

எடுத்த பிறவியின் பயனை நிறைவேற்றாமல் சாகிறவர்களில் நானும் ஒருவனாகிவிடுவேனோ? ‘இது முறையல்ல’ என்று உன்னருகே உள்ள சான்றோர் உன்னிடம் சொல்லி, எனக்காகச் சிபாரிசு செய்யமாட்டார்களா!

இறைவா, தில்லையில் நடனமாடுபவனே, நான் திகைத்து நிற்கிறேன், என்னை இனி நீதான் தேற்றிக் காக்க வேண்டும்.

*

திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, அரியவனே, அவிநாசியில் அருள்செய்பவனே, எங்கள் தந்தையே, பாண்டிநாட்டின் கருணைவெள்ளமே, யாரும் தெரிந்துகொள்ள அரியவனான பரஞ்சோதியே,

நரியைக் குதிரை வாகனமாக்கினாய், பெரிய பாண்டியனின் மதுரை நகரம் முழுவதும் பித்துப்பிடித்த நிலையை உண்டாக்கினாய்,  அதைக்கண்டு உலகங்களெல்லாம் வியந்தன,

இப்போது நான் செய்வதறியாது நிற்கிறேன், என்னை ஆட்கொண்டு அருள்செய்வாய்.

சொல்லின்பம்

கோவே: தலைவா

கொடியேன்: கொடியவன்

கெடவே அமையுமே: கெட்டுப்போவேனே

ஆஆ: அடடா / இரக்கம்

என்னாவிடில்: என்று சொல்லாவிட்டால்

அஞ்சேல்: அஞ்சாதே

ஆரோ: யாரோ

தக்கவாறு அன்று: சரியானமுறை அல்ல

தேவே: தெய்வமே

நடம் ஆடீ: நடனம் ஆடுபவனே

தேற்றாயே: தேற்றமாட்டாயா

குதிரைப்பரி: குதிரை வாகனம்

ஞாலம்: உலகம்

பரிய தென்னன்: பெரிய பாண்டியன்

பிச்சு: பித்து

தெரிய அரிய பரஞ்சோதீ: தெரிந்துகொள்ள அரிய பரஞ்சோதியே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com