பகுதி - 265

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதன் ஊடே
Updated on
3 min read

பதச் சேதம்

சொற் பொருள்

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு உடம்பு கால் கை ஆகி நாரி என்பில் ஆகும் ஆகம் அதன் ஊடே

நாலும் ஐந்தும் வாசல்: 4+5 ஒன்பது வாசல்கள்; கீறு: வகுக்கப்பட்ட; தூறு: அற்பமான; நாரியென்பு: நாரும் எலும்பும்—நரம்பும் எலும்புமாக; ஆகம்: உடல்;

நாதம் ஒன்ற ஆதி வாயில் நாடகங்கள் ஆன ஆடி நாடு அறிந்திடாமல் ஏக வளரா முன்

நாதம் ஒன்ற: ஓசையாகிய புலன் பொருந்த; ஆதிவாயில்: ஆதியில் இருந்த வழியிலேயே; நாடகங்கள் ஆடி: பலவிதமான கூத்துகளை ஆடி; நாடறிந்திடாமல்: நாட்டில் ஒருவராலும் அறியப்படாமல்; ஏக வளராமுன்: (இறந்து) போவதற்கென்றே வளர்வதற்கு முன்னால்;

நூல் அநந்த கோடி தேடி மால் மிகுந்து பார் உளோரை நூறு செம் சொல் கூறி மாறி விளை தீமை

அனந்த: எண்ணிறந்த; மால்: மயக்கம், ஆசை;

நோய் கலந்த வாழ்வு உறாமல் நீ கலந்து உ(ள்)ளாகு(ம்) ஞான நூல் அடங்க ஓத வாழ்வு தருவாயே

அடங்க: முற்றிலும்;

காலன் வந்து பாலன் ஆவி காய வென்று பாசம் வீசு காலம் வந்து ஓலம் ஓலம் என்னும் ஆதி

காய: கோபிக்க; பாசம்: பாசக் கயிறு;

காமன் ஐந்து பாணமோடும் வேமின் என்று காணும் மோனர்  காள கண்டரோடு வேதம் மொழிவோனே

வேமின்: வெந்து போ.  (நில்மின், சொல்மின் என்ற ஏவல் வினைமுற்று); மோனர்: மௌன மூர்த்தி; காளகண்டர்: கறுத்த கழுத்தை உடையவர்;

ஆலம் ஒன்று(ம்) வேலையாகி யானை அஞ்சல் தீரும் மூல ஆழி அம் கை ஆயன் மாயன் மருகோனே

ஆலம் ஒன்றும்: விஷம் தோன்றிய; வேலை ஆகி: கடலில் பள்ளிகொண்டு; யானை: கஜேந்திரன்; அஞ்சல்: அச்சம்; மூல: ஆதிமூலமாகிய; ஆழிஅம்கை: சக்கரைப் படையை கையில் ஏந்திய;

ஆரணங்கள் தாளை நாட வாரணம் கை மேவும் ஆதியான செந்தில் வாழ்வு அதான பெருமாளே.

ஆரணம்: வேதம்; வாரணம்: சேவல்;

நாலும் ஐந்து வாசல் கீறு தூறு ... ஒன்பது வாசல்களாகக் கீறி வகுக்கப்பட்டதும்; அற்பமானதுமான;

உடம்பு கால்கை யாகி ... உடலாகி அதற்குக் காலும் கையும் ஏற்பட்டு;

நாரி யென்பில் ஆகும் ஆகம் ... நரம்பாலும் எலும்பாலும் ஆன இந்த உடலிலே,

அதனூடே நாதம் ஒன்ற ... ஒலியாகிய புலன் பொருந்த,

ஆதி வாயில் ... எல்லாச் செயல்களுக்கும் மூலமாக இருக்கும் ஐம்புலன்களின் மூலமாக,

நாடகங்க ளான ஆடி ... இந்த உலகத்திலே பலவகையான கூத்துகளை ஆடியும்;

நாடறிந்திடாமல் ஏக ... உயிர் எவ்வாறு போயிற்று என்பதை உலகம் அறிந்திடாத வகையில் அது பிரிவதற்காகவே

வளராமுன் ... இந்த உடல் வளர்ந்து முடிப்பதற்குள்,

நூல் அநந்த கோடி தேடி மால்மிகுந்து ... எண்ணற்ற பலகோடி நூல்களைத் தேடிப் படித்து அதனாலே மயக்கம் ஏற்பட்டு,

பாருளோரை நூறு செஞ்சொல் கூறி ... உலகத்தில் இருக்கும் செல்வந்தர்களை நூறுவிதமான சொற்களால் புகழ்ந்து பாடி, (அதனால் ஒருபயனும் இல்லாததால்

மாறி விளைதீமை ... மனம் மாறி சோர்வுற்று, இப்படி விளைகின்ற தீமையால்,

நோய்கலந்த வாழ்வுறாமல் ... நோய்கள் கலந்த வாழ்க்கையை அடையாமல் (அதற்கு பதிலாக)

நீகலந்து உள் ஆகு ஞான நூல் அடங்க . ... நீ என்னுளே கலந்து, என் உள்ளத்திலேயே பொருந்தியிருக்கச் செய்யும் ஞானநூல்கள் அனைத்தையும்,

ஓத வாழ்வு தருவாயே ... ஓதவும் உணரவும் கூடியதான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

காலன் வந்து பாலன் ஆவி காய வென்று ... பாலனான மார்கண்டேயனுடைய உயிரை யமன் வந்து வருத்த,

பாசம் வீசு காலம் வந்து ... அவன் பாசக்கயிற்றை வீசிய சமயத்திலே வெளிப்பட்டு,

ஓலம் ஓலம் எனும் ஆதி ... ‘அபயம் அபயம்’ என்று ஓலமிட்டு அழைக்கப்பட்ட ஆதிமுதல்வனும்;

காமன் ஐந்து பாணமோடு வேமின் என்றுகாணு மோனர் ... ‘உன்னுடைய ஐந்து மலர்க்கணைகளோடு நீ எரிந்து போவாயாக’ என்று கண்ணைத் திறந்து பார்த்த மௌன மூர்த்தியும்;

காள கண்ட ரோடு ... நீலகண்டருமாகிய சிவபெருமானுக்கு

வேத மொழிவோனே ... வேதத்தின் தொடக்கமாகிய பிரணவத்தின் பொருளை உபதேசித்தவனே!

ஆல மொன்று வேலை யாகி ... ஆலகாலம் தோன்றிய பாற்கடலில் பள்ளிகொண்டு,

யானை யஞ்சல் தீரு மூல ... யானையான கஜேந்திரனுடைய அச்சத்தைப் போக்கிய ஆதிமூலனும்;

ஆழி யங்கை ஆயன் மாயன் மருகோனே ... தன் திருக்கரத்தில் சக்கரப்படையை ஏந்தியவனும்; இடைக் குலத்தில் கண்ணனாகப் பிறந்தவனுமான திருமாலின் மருமகனே!

ஆரணங்கள் தாளை நாட ... எல்லா வேதங்களும் உன் திருவடிகளைத் தேடிநிற்க,

வாரணம் கை மேவும் ... கையிலே சேவற்கொடியை ஏந்தி,

ஆதியான செந்தில் வாழ்வதான பெருமாளே. ... ஆதிப்பரம்பொருள் வடிவாய் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் பெருமாளே.

சுருக்க உரை

மார்க்கண்டேயனுடைய உயிரைக் கவர்வதற்காக யமன் வந்து வருத்திய சமயத்தில், ‘அபயம் அபயம்’ என்ற குரலுக்குத் ‘தந்தோம் தந்தோம்’ என்று சொல்லி வெளிப்பட்ட முதல்வரும்; தன் ஐந்து மலர்க்கணைகளோடு மன்மதன் எரிந்துபோகுமாறு கண்ணைத் திறந்து பார்த்த மௌன மூர்த்தியும், கரிய கண்டத்தை உடையவருமான சிவபெருமானுக்கு வேதப்பொருளை உபதேசித்தவனே!  ஆலகால விஷம் தோன்றிய பாற்கடலில் பள்ளிகொண்டிருப்பவரும்; கஜேந்திரனுடைய அச்சத்தைத் தீர்த்த ஆதி மூலனும்; கையில் சக்கரப் படையை ஏந்தியவனும்; இடையர் குலத்தில் பிறந்தவனுமான திரமாலுடைய மருமகனே!  வேதங்கள் தேடும் திருவடியைக் கொண்டவனே!  கையில் கோழிக்கொடியை ஏந்தியவனே!  முதல்வனான பெருமாளே!  திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே!

ஒன்பது வாயில்கள் வகுக்கப்பட்டதும்; அற்பமானதும்; கை கால்கள் முளைத்த உடலாகவும் எலும்பாலும் நரம்பாலும் அமைந்ததுமான உடலுக்குள்ளே ஓசை என்னும் புலன் பொருந்த; எல்லாச் செயல்களுக்கும் மூலகாரணமான ஐம்புலன்களால் செலுத்தப்பட்டு இந்த உலகில் பலவிதமான கூத்துகளை ஆடி, உயிர் எப்படிப் பிரிந்தது என்பதை உலகோர் அறியாமலேயே பிரிவதற்காகவே வளர்வதற்கு முன்னால்;

எண்ணற்ற பலகோடி நூல்களைக் கற்று, பொருளில் ஆசைகொண்டு, செல்வந்தர்களைத் தேடிச் சென்று அவர்களைச் செம்மையான சொற்களால் புகழ்ந்து பாடியும் எந்தப் பயனும் ஏற்படாமல் அதனால் விளைந்த கெடுதல்களும் நோய்களும் கலந்த இந்த வாழ்வை இனிமேலும் நான் அடையாமல், உன்னை என் உள்ளத்தினுள்ளேயே கலந்து தங்கியிருக்கும்படி வழிகாட்டக்கூடிய ஞானநூல்கள் அனைத்தையும் நான் ஓதும்படியான வாழ்வைத் தந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com