பதச் சேதம் | சொற் பொருள் |
வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி
| காதலின் பொருள் மேவின பாதகர்: காதலோடு பணத்தை நாடும் பாதகர்; விண்டு: பகைத்து; உள: உள்ளம், உள்ளத்தை; நாடியர்: ஆராய்பவர்; |
வேளை என்பது இல்லா வசை பேசியர் வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும்
| இசையிலே மோகிகள்: பாடல்களில் மோகங்கொண்டவர்கள்; |
மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்தரன் ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே
| மால்: திருமால்; அயன்: பிரமன்; பரனார்: சிவன்; இமையோர்: தேவர்கள்; புரந்தரன்: இந்திரன்; |
வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே
| வினாவுடனே: ஆராயும் தன்மையுடனே; |
நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி
| கோமளி: இளமையானவள்; யாமளி: பச்சை நிறத்தவள்; நாடகம்: நடனம், கூத்து; பூரணி: நிறைந்தவள்; பஞ்சவி: பஞ்சமி எனப்படும் ஐந்தாவது அனுக்கிரக சக்தி; சூலினி: சூலத்தை ஏந்தியவள்; மாலினி: மாலையை அணிந்தவள்; |
நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச
| நீர்பொரும்: நீர் தங்கிய; தேசிக: குருநாதன்; |
ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே
| ஆலில்: ஆல இலையில்; |
ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே.
| ஆடகம்: பொன்; |

வேல் இரண்டு எனு நீள் விழி மாதர்கள் காதலின் பொருள் மேவின பாதகர் ... இரண்டு வேல்களோ என்னும்படியான நீண்ட விழிகளை உடையவர்களும்; பொருளின்மீது அளவிலாத ஆசைகொண்டவர்களும்;

வீணில் விண்டு உ(ள்)ள நாடியர் ஊமைகள் விலை கூறி வேளை என்பது இ(ல்)லா வசை பேசியர் ... தம்மிடம் வந்தவர்களை வீணாகப் பகைத்து அவர்களுடைய உள்ளம் ‘இன்னது’ என்று ஆராய்பவர்களும்; சிலசமயங்களில் ஊமையைப் போல் இருப்பவர்களும்; விலைபேசி, சமயம் பொழுதில்லாமல் வசைமொழிகளைப் பேசுபவர்களும்;

வேசி என்பவராம் இசையிலே மோகிகள் மீது நெஞ்சு அழி ஆசையிலே உழல் சிறியேனும் ... விலைமகளிர் எனப்படுபவர்களுமான இவர்கள் பாடலில் ஆசை கொள்பவர். இத்தகைய பெண்களின்மேல் மனம் அழிவுற்று, ஆசைகொண்டு திரிகின்ற சிறியேனான நானும்—

மால் அயன் பரனார் இமையோர் முனிவோர் புரந்தரன் ஆதியரே தொழ மா தவம் பெறு தாள் இணையே தினம் மறவாதே ... திருமால், பிரமன், சிவன், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானவர்களே தொழுவதற்காக பெரிய தவத்தைச் செய்யும் உன்னுடைய திருவடிகளை என்றும் மறக்காமல்;

வாழ் தரும் சிவ போக நல் நூல் நெறியே விரும்பி வினாவுடனே தொழ ... நல்ல வாழ்வை அளிக்கவல்ல சிவபோகத்தை விளக்குகின்ற அரிய நூல்களில் சொல்லியிருக்கும் வழிமுறையை நான் ஆராய்ந்து அறிந்து (உன் திருவடிகளைத்) தொழுது,

வாழ் வரம் தருவாய் அடியேன் இடர் களைவாயே ... வாழ்கின்ற வரத்தைத் தந்து அடியேனுடைய துன்பங்களை நீக்கியருள வேண்டும்.

நீல சுந்தரி கோமளி யாமளி நாடகம் பயில் நாரணி பூரணி ... நீல நிறம் கொண்டவள்; அழகி; இளமையானவள்; பச்சை நிறத்தவள்; பல கூத்துகளை நடிக்கும் நாராயணி; பூரணமானவள்;

நீடு பஞ்சவி சூலினி மாலினி உமை காளி ... சிறந்த ஐந்தாவதும் அனுக்கிரப்பதுமான சக்தியானவள்; சூலத்தை ஏந்தியவள்; மாலையை அணிந்தவள்; உமாதேவி; காளி;

நேயர் பங்கு எழு மாதவியாள் சிவகாம சுந்தரியே தரு பாலக ... சிவபெருமான் இடபாகத்திலே விளங்கும் மாதவிக்கொடி போன்றவள்; சிவகாமசுந்தரி (என்றெல்லாம் நாமம் படைத்த) உமாதேவியார் ஈன்ற பாலனே!

நீர் பொரும் சடையார் அருள் தேசிக முருகேச ... கங்கை நீர் தங்கிய சடையைத் தாங்கியுள்ள சிவபெருமான் பெற்றவனே! குருவாகிய முருகேசனே!

ஆலில் நின்று உலகோர் நிலையே பெற மா நிலங்கள் எல்லா நிலையே தரு ஆயன் நம் திருவூரகம் மால் திரு மருகோனே ... ஆலிலையில் கிடந்தபடி, உலகத்தவர்கள் நிலைபெற்று வாழவும்; கிரகங்களும் நட்சத்திர மண்டலங்களும் நிலைபெற்றிருக்கவும் செய்பவனும்; இடையர் குலத்தில் பிறந்தவனும்; சிறுவாபுரியில் ‘திருவூரகப் பெருமாள்’ என்ற பெயரோடு விளங்குபவனுமான திருமாலின் மருகனே!

ஆடகம் பயில் கோபுர மா மதில் ஆலயம் பல வீதியுமே நிறைவான ... பொன் பொதிந்த கோபுரம், பெரிய மதிற்சுவர், ஆலயம், பல தெருக்கள் யாவும் நிறைந்துள்ள,

தென் சிறுவாபுரி மேவிய பெருமாளே. ... வளம் நிறைந்த சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

நீலநிறத்தவளும்; அழகியும்; இளமையானவளும்; பச்சை நிறத்தவளும்; பலவிதமான கூத்துகளைப் பயிலும் நாராயணியும்; பூரணமாக நிறைந்தவளும்; ஐந்தாவது அனுக்கிரக சக்தியாக விளங்கும் பஞ்சமியும்; சூலத்தை ஏந்தியவளும்; மாலையை அணிந்தவளும்; உமா, காளி என்றெல்லாம் அறியப்படுபவளும்; பரமசிவனாரின் இடபாகத்தில் வீற்றிருப்பவளும்; மாதவிக் கொடியைப் போன்றவளும்; துர்க்கையும், சிவகாமசுந்தரியுமான பார்வதியம்மை பெற்ற பாலகனே! ஆலிலையில் கிடந்தபடி உலகத்திலுள்ளோர் அனைவரையும் பாதுகாப்பவனும்; கிரகங்களும் நட்சத்திர மண்டலங்களும் இயங்கச் செய்பவனும்; இடையர் குலத்தில் உதித்தவனும்; சிறுவைத் தலத்தில் ‘திருவூரகப் பெருமாள்’ என்ற பெயரோடு விளங்குபவனுமான திருமாலுக்கு மருகனே! பொன் பொதிந்த கோபுரம், பெரிய மதில், கோயில், பல வீதிகள் எல்லாமும் நிறைந்ததான சிறுவாபுரியில் வீற்றிருக்கும் பெருமாளே!

இரண்டு வேல்கள் எனச் சொல்லத்தக்க கண்களை உடையவர்களும்; பொருளையே விரும்பும் பாதகர்களும்; வந்தாரிடம் வீண்பகை கொண்டு அவர்கள் உள்ளம் ‘இன்ன வகையானது’ என்று ஆராய்பவர்களும்; நேரம் காலமில்லாமல் வசைச் சொற்களைப் பேசுபவர்களுமான விலைமாதர்களின்மேல் மனம் கசிந்துருகித் திரிகின்ற சிறியேனாகிய நான்,

திருமால், பிரமா, சிவன், தேவர்கள், முனிவர்கள், இந்திரன் முதலானவர்களேகூட தொழுவதற்காகத் தவமிருக்கக்கூடிய உனதிரு திருவடிகளை என்றும் மறவாமலும்; நல்ல வாழ்வை அளிக்கவல்ல சிவபோதத்தை விளக்கும் நூல்கள் சொல்லியிருக்கும் வழியையே மனத்தில் விரும்பி, ஆராய்ந்து அறிந்து வாழ்வதான வரத்தைக் கொடுத்து அடியேனுடைய துன்பங்களைக் களைந்தருள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.