பகுதி - 415

அபிராமியும்; சிவகாமியுமான உமையம்மை ஈன்ற பாலனே! 

பதச் சேதம்

சொற் பொருள்

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டு உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர் சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல

 

தத்தை: கிளி; மோக நகை: மோகத்தை ஏற்படுத்த வல்ல புன்னகை; நாணி: வெட்கப்பட்டு;

தை சரசமோடு உறவே ஆடி அகமே கொடு போய் எத்தி அணை மீதில் இது காலம் என் நிர் போவது என தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி

 

தை: தைக்கும்படியான; எத்தி: சாய்த்து; அணைமீதில்: படுக்கையில்; நிர்: நீர்; புழுகு: புனுகு; சவாதை: ஜவ்வாதை;

வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர

 

உடைசோர: உடை நெகிழ; குழல் அளாவ: கூந்தல் கலைய;

மச்ச விழி பூசலிட வாய்  பு(ல்)லி  உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரும் மயல் மூழ்கிய பின் ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாகுமோ

 

மச்சவிழி: மீன்போன்ற விழி; பூசலிட: (மன்மதப்) போரை எழுப்ப; வாய் பு(ல்): வாய்ந்து புல்லி, நெருங்கி அணைத்து;

சத்தி சரசோதி திரு மாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா

 

சத்தி: உமை; சரசோதி: சரஸ்வதி; திருமாது: இலக்குமி; வெகுரூபி: பல உருவங்களைக் கொண்டவள்; ஈண: ஈன்ற;

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் இடுவோனே

 

சக்ரகிரி: சக்ரவாளகிரி; மூரி: வலிய; சத்தியினை ஏவி: சக்திவேலை விடுத்து;

துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா

 

துத்தி: பசலை; சுகவாரி: சுகக் கடல் (போன்றவள்); சித்ரமுக: அழகிய முக; எனது ஆயி: என் தாய்; சுத்த அணையூடு: பரிசுத்தமான படுக்கையில்; வட: மாலை (அணிந்த);

சுத்த அ(ம்) மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே.

 

 

தத்தை மயில் போலும் இயல் பேசி பல மோக நகை இட்டும் உடன் நாணி முலை மீது துகில் மூடி அவர்... கிளியைப் போல இனிமையாகப் பேசியும்; மயிலைப் போல நடித்தும்; மோகத்தைத் தூண்டுவதுபோலச் சிரித்தும்; உடனே வெட்கப்பட்டும்; மார்பகத்தை ஆடையால் மூடிக்கொண்டும்;

சற்று அவிடம் வீடும் இனி வாரும் என ஓடி மடி பிடி போல தைச் சரசமோடு உறவெ ஆடி அகமே கொடு போய்... ‘இதோ இங்கேதான் வீடு இருக்கிறது.  அங்கே நீங்கள் வரவேண்டும் என்று மடியைப் பற்றிக்கொள்வதைப் போலப் பிடித்து அழைத்துச் சென்றும்; மனத்தில் தைக்கும்படியாக சரசமாடியும்; வீட்டுக்கு அழைத்துச் சென்றும்;

எத்தி அணை மீதில் இது காலம் என் நி(நீ)ர் போவது என தட்டு புழுகோடு பனி நீர் பல சவாதை அவர் உடல் பூசி வைத்து முகமோடு இரச வாய் இதழின் ஊறல் பெருக... படுக்கையில் சாய்த்து, ‘இது தக்க சமயமல்லவா?  இப்போது பார்த்து நீங்கள் போகத்தான் வேண்டுமா’ என்றெல்லாம் பேசி; தட்டு நிறைய புனுகு, பன்னீர், ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களைக் கொண்டுவந்து (வந்த) அவர்களுடைய உடலில் பூசி; முகத்தோடு முகம் வைத்து; உதட்டின் ஊறலாகிய ரசம் பெருக்கெடுக்க;

குழல் அளாவ சுழல் வாள் விழிகளே பதற வட்ட முலை மார் புதைய வேர்வை தர தோள் இறுகி உடை சோர மச்ச விழி பூசலிட வாய் பு(ல்)லி உ(ல்)லாசமுடன் ஒப்பி இருவோரு(ம்) மயல் மூழ்கிய பின்... கூந்தல் நெகிழ; ஒளிகொண்ட விழிகள் சுழன்று பதற; வட்டமான முலை மார்பிலே புதைய; வேர்வை தோன்ற; தேளை இறுகத் தழுவி; உடை நெகிழ; மீனைப் போன்ற விழகள் மன்மதப் போரை எழுப்ப; நெருங்கித் தழுவி; இருவரும் மனமொப்பி உல்லாசமாக மையலில் கலந்தபின்னால்,

ஆபரணம் வைத்து அடகு தேடு பொருள் சூறை கொளுவார் கலவி செயலாமோ... வந்தவர்களுடைய ஆபரணங்களை எடுத்து அடகு வைத்தும்; தேடிய பொருளையெல்லாம் கொள்ளை கொண்டும் செல்பவர்களோடு கலந்து கிடக்கலாமோ?

சத்தி சரசோதி திருமாது வெகு ரூபி சுக நித்திய கல்யாணி எனை ஈண மலை மாது சிவை தற் பரனொடு ஆடும் அபிராமி சிவகாமி உமை அருள் பாலா... சக்தியாகவும்; சரசுவதியாகவும்; இலக்குமியாகவும் பலவிதமான வடிவங்களை உடையவளும்; சுக நிலையில் நிற்பவளும்; நித்திய கல்யாணியும்; என்னைப் பெற்ற தாயுமான மலைமகளும்; சிவையும்; தற்பரனாகிய பரமேஸ்வரனோடு நடனமாடும் அபிராமியும்; சிவகாமியுமான உமாதேவியார் ஈன்ற பாலனே!

சக்ர கிரி மூரி மக மேரு கடல் தூளிபட ரத்ந மயில் ஏறி விளையாடி அசுராரை விழ சத்தியினை ஏவி அமரோர்கள் சிறை மீள நடம் இடுவோனே... (அண்டத்தின் புற எல்லையான) சக்ரவாளகிரியும்; வலிமையுள்ள மேருவும்; கடலும் புழுதிபறக்குமாறு, ரத்தினமயமான மயிலின் மீது ஏறி, விளைடிய, அசுரர்கள் மாளுமாறு சக்திவேலைச் செலுத்தி; அமரர்களைச் சிறை மீட்டு நடமாடுபவனே!

துத்தி தனபார வெகு மோக சுக வாரி மிகு சித்ர முக ரூபி எனது ஆயி வ(ள்)ளி நாயகியை சுத்த அணையூடு வட மா முலை விடாத கர மணி மார்பா... பசலை படர்ந்த தனபாரத்தைக் கொண்டவரும்; பெரிய மோகத்தைத் தருகின்ற சுகக்கடல் போன்றவரும்; அழகிய முகத்தைக் கொண்டவரும்; என் தாயும் ஆன வள்ளியம்மையை, தூயதான மெல்லணையிலே (இருந்தபடி), முத்துவடங்களை அணிந்த அவருடைய மார்பகத்தை விட்டுப் பிரியாத திருக்கரத்துடன் கூடிய மணிபார்பனே!

சுத்த அம் மகா தவ சிகாமணி என ஓதும் அவர் சித்தம் அதிலே குடியதா(ய்) உறையும் ஆறு முக... ‘தூய, அழகிய பெரிய தவசிகாமணியே’ என்று ஓதுகின்ற அடியார்களுடைய உள்ளத்தில் குடிகொண்டு உறைகின்ற ஆறுமுகனே!

சுப்ரமணியா புலியூர் மேவி உறை தேவர் புகழ் பெருமாளே.... சுப்ரமணியனே!  புலியூரிலே பொருந்தி வீற்றிருக்கின்றவனே!  தேவர்கள் புகழ்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

சக்தியாகவும்; சரஸ்வதியாகவும்; திருமகளாகவும் பலவிதமான ரூபங்களை உடையவளும்; சுகநிலையில் நிற்பவளும்; நித்ய கல்யாணியும்; என்னை ஈன்ற மலைமகளும்; சிவையும்; தற்பரனாகிய பரமேஸ்வரனுடன் நடனமாடுபவளும்; அபிராமியும்; சிவகாமியுமான உமையம்மை ஈன்ற பாலனே!  சக்ரவாளகிரியும் வலிமையுள்ள மேருவும் கடலும் புழுதி பறக்கும்படியாக ரத்னமயமான மயிலின்மேல் ஏறிக்கொண்டு சக்திவேலைச் செலுத்தி, தேவர்களை சிறையிலிருந்து விடுவித்து நடனமாடுபவனே!

பசலைபூத்த தனபாரங்களையுடையவரும்; பெரிய மோகத்தையூட்டுகின்ற சுகக்கடல் போன்றவரும்; மிக அழகிய முகத்தவரும்; என் தாயும் ஆன வள்ளியம்மையுடன் மெல்லணையில் இருந்தபடி அவரது தனத்தைவிட்டுப் பிரியாத கரத்தை உடையவனே!  அழகிய மார்பனே!

கிளிபோலப் பேசியும்; மயில்போல நடித்தும்; மோகத்தையூட்டும்படியாக முறுவல் பூத்தும்; உடனே வெட்கப்படுவதைப் போல ஆடையால் மார்பகத்தை மூடிக்கொண்டும்; ‘வீடு அருகில்தான் இருக்கிறது, நீர் வரவேண்டும்’ என்று விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டுபோய்; மனத்தில் தைக்குமாறு சரசமாடி; வீட்டுக்குள் அழைத்துச் சென்று; ‘இது தக்க சமயமல்லவா?  இப்போது நீங்கள் பிரிந்து போகலாமா’ என்றெல்லாம் பேசி, படுக்கையில் சாய்த்து; புனுகு, பன்னீர் ஜவ்வாது போன்ற வாசனைத் திரவியங்களைப் பூசி; இருவரும் மனமொப்பிக் கலந்தபின்னால், கையிலுள்ள ஆபரணங்களைப் பறித்துக்கொண்டும், அடகுவைத்தும் அத்தனை செல்வங்களையும் கொள்ளைகொள்பவர்களான இவர்களோடா நான் கூடிக்கிடப்பது?  (இவ்வாறு நான் அழிந்துபோகாமல் அடியேனை ஆண்டுகொள்ள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com