பகுதி - 417

ஒப்பிட முடியாதவரான பரமசிவனாரின் சேயே!

பதச் சேதம்

சொற் பொருள்

சிகரிகள் இடிய நட(ம்) நவில் கலவி செவ்வி மலர் கடம்பு சிறு வாள் வேல்

 

சிகரிகள்: மலைகள் (சிகரத்தை உடையது சிகரி); கலவி: கலாபி. கலாபத்தை உடைய (மயில்); சிறுவாள்: சீரா என்ற பெயரால் பல பாடல்களில் குறிக்கப்படுவது; செவ்வி: புதிய;

திரு முக சமுக சததள முளரி திவ்ய கரத்தில் இணங்கு பொரு சேவல்

 

சமுக: சமூக, கூட்டமான (ஆறுமுகங்களின் கூட்டம்); சததள முளரி: நூறு இதழ்களைக் கொண்ட தாமரை; பொரு: பொருந்திய;

அகில் அடி பறிய எறி திரை அருவி ஐவன(ம்) வெற்பில் வஞ்சி கணவா என்று

 

அடிபறிய எரிதிரை: வேரோடு பறித்தெறிகின்ற மோதுவதான அலை; ஐவனம்: மலைநெல்; வெற்பு மலை; வஞ்சி கணவா: வள்ளி மணாளா;

அகிலமும் உணர மொழி தரு மொழியின் அல்லது பொன் பதங்கள் பெறலாமோ

 

அகிலமும் உணர: உலகெல்லாம் உணரும்படி; மொழிதரு: எடுத்துச் சொல்கின்ற; மொழியின் அல்லது: சொன்னாலொழிய;

நிகர் இட அரிய சிவசுத பரம நிர்வசன ப்ரசங்க குரு நாதா

 

நிர்வசன: சொல்லில்லாமல்; ப்ரசங்க: சொற்பொழிவு;

நிரை திகழ் பொதுவர் நெறி படு பழைய நெல்லி மரத்து அமர்ந்த அபிராம

 

நிரை: கூட்டம், ஆநிரை: பசுக்கூட்டம்; பொதுவர்: இடையர்; நெறிபடு: வழியிலுள்ள; அபிராம: அழகனே;

வெகு முக ககன நதி மதி இதழி வில்வம் முடித்த நம்பர் பெரு வாழ்வே

 

வெகுமுக: பல கிளைகளையுடைய; ககன நதி: ஆகாய கங்கை; இதழி: கொன்றை; நம்பர்: தலைவர், பரமேஸ்வரர்; வாழ்வே: செல்வமே;

விகசித கமல பரிமள முளரி வெள்ளிகரத்து அமர்ந்த பெருமாளே.

 

விகசித: மலர்ந்த; கமல: தாமரை; பரிமள: மணம் வீசும்; முளரி: தாமரை;

சிகரிக ளிடிய நடநவில் கலவி செவ்வி மலர்க்க டம்பு சிறுவாள்வேல்... மலைகளெல்லாம் இடியும்படியாக நடனமாடுகின்ற கலாபத்தை உடைய மயிலும்; புதிதாக அன்று பூத்த கடப்ப மலரும்; சீரா* எனப்படும் சிறுவாளும்; வேலும்;

(‘நவரத்தனம் பதித்த நற்சீராவும்’ என்பது சஷ்டி கவசம்.  திருப்புகழிலும் கந்தரலங்காரம் முதலானவற்றிலும் பலமுறை குறிக்கப்படுவதும்; முருகனுடைய ஆயுதங்களில் ஒன்றானதுமான குறுவாள்.)

திருமுக சமுக சததள முளரி திவ்ய கரத்திணங்கு பொருசேவல்... ஆறுமுகங்களும் ஒன்றாகச் சேர்ந்த கூட்டமான நூறு இதழ்த் தாமரைகளும்; திவ்யமான கரத்தில் ஏந்தியிருப்பதும் போர்செய்ய வல்லதுமான சேவற்கொடியும் (விளங்கித் தோன்றுபவனும்);

அகிலடி பறிய எறிதிரை யருவி ஐவனவெற்பில் வஞ்சி கணவா என்று... அகில் மரங்களை வேரோடு பறித்து வீசுகின்ற அலைகள் மோதும் அருவிகள் நிறைந்ததும்; மலைநெல் விளையும் வள்ளிமலைக்குரிய வள்ளியின் கணவனே என்று

அகிலமு முணர மொழிதரு மொழியினல்லது பொற்பதங்கள் பெறலாமோ... உலகம் எல்லாமும் உணரும்படியாக எடுத்துச் சொல்லும் சொற்களாலன்றி உன்னுடைய பொற்பாதங்களை அடைய முடியுமா!

நிகரிட அரிய சிவசுத பரம நிர்வசனப்ர சங்க குருநாதா... ஒப்பிடுவதற்கு முடியாதவரான சிவனுடைய மகனே!  (சொற்களற்று மௌனமாக இரு என்று) மௌன மொழியால் உபதேசிக்கும் குருநாதனே!

நிரைதிகழ் பொதுவர் நெறிபடு பழைய நெல்லி மரத்தமர்ந்த அபிராம... பசுக்கூட்டங்களை மேய்க்கும் இடையர்கள் போகும் வழியிலிருக்கிற பழைய நெல்லி மரத்தினடியில்* வீற்றிருக்கின்ற அழகனே!

(இது எந்த நெல்லிமரம் என்று ஊகிக்க முடியவில்லை என்று குறிப்பிடும் உரையாசிரியர் செங்கல்வராய பிள்ளையவர்கள், இது திருவேரக மான்மியத்தில் குறிக்கப்படும் சுவாமிமலை நெல்லி மரமாகவும் இருக்கலாம்; அல்லது திருவாவினன்குடியின் தல விருட்சமான நெல்லிமரத்தைக் குறிப்பதாகவும் இருக்கலாம் என்கிறார்.)

வெகுமுக ககன நதிமதி இதழி வில்வ முடித்த நம்பர் பெருவாழ்வே... பல கிளைநதிகளாக ஓடுகின்ற ஆகாய கங்கையையும்; பிறைச் சந்திரனையும்; கொன்றைப் பூவையும்; வில்வத்தையும் சடையிலே அணிந்த தலைவரான சிவபிரானுடைய பெருஞ்செல்வமே!

விகசித கமல பரிபுர முளரி வெள்ளி கரத்த மர்ந்த பெருமாளே.... மலர்ந்த, நறுமணம் வீசுகின்ற தாமரையை ஒத்த திருவடிகளை உடையவனே!  வெள்ளிகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

ஒப்பிட முடியாதவரான பரமசிவனாரின் சேயே!  மௌன மொழியாலே உபதேசிப்பவனே!  பசுக்கூட்டங்களை மேய்க்கின்ற இடையர்கள் செல்லும் வழியிலே இருப்பதான பழைய நெல்லிமரத்துக்கடியில் அமர்ந்த அழகனே!  பல கிளைநதிகளோடு ஓடும் ஆகாய கங்கையையும்; பிறைச் சந்திரனையும்; கொன்றைப் பூவையும்; வில்வத்தையும் சடையிலு சூடிய சிவபெருமானுடைய பெரும் செல்வமே!  மலர்ந்தததும் நறுமணம் கமழ்வதுமான தாமரைகளை ஒத்த திருவடிகளைக் கொண்டவனே!  வெள்ளிகரத்தில் வீற்றிருக்கும் பெருமாளே!

எல்லா மலைகளும் பொடிபடும்படியாக நடனம் செய்கிற மயிலும்; அன்று பூத்த கடப்ப மலரும்; குறுவாறும்; வேலும்; ஒவ்வொன்றும் நூறு இதழ்களைக் கொண்ட தாமரையைப் போலக் கூட்டமாகப் பூத்திருக்கும் ஆறுமுகங்களும்; திருக்கரத்தில் ஏந்திய சேவற்கொடியும் விளங்கித் தோன்ற நிற்பவனே என்றும்; அகில் மரங்களை வேரோடு பறித்தெறியும்படியாக அலைவீசிக் கொண்டிருக்கிற அருவிகள் நிறைந்ததும், மலைநெல் விளைவதுமான வள்ளிமலைக்குரிய வள்ளியம்மையின் கணவனே என்றும்,

எல்லா உலகமும் அறியும்படியாக எடுத்துரைக்கும் சொற்களால் அன்றி (சொற்களின் துணையில்லாமல்) உன்னுடைய பொற்பாதங்களைப் பெற முடியுமோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com