பகுதி - 535

புள்ளி மயில் வாகனனே

பதச் சேதம்

சொற் பொருள்

குடி வாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்

 

குடிவாழ்க்கை: இல்லற வாழ்க்கை; ப்ரசன்ன: பிரசன்னமாகும், வெளிப்படும்;

குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்தது என்ன குரு வார்த்தை தன்னை உணராதே

 

தனம் வாய்த்தது: செல்வம் கிடைத்தது;

இட நாட்கள் வெய்ய நமன் நீட்டி தொய்ய இடர் கூட்ட இன்னல் கொடு போகி

 

தொய்ய: சோர்வடைய;

இடு காட்டில் என்னை எரி ஊட்டும் முன் உன் இரு தாட்கள் தம்மை உணர்வேனோ

 

 

வட நாட்டில் வெள்ளி மலை காத்து புள்ளி மயில் மேல் திகழ்ந்த குமரேசா

 

வெள்ளி மலை: கயிலை; மலைகாத்து: மலையின் முன்புறத்திலே வீற்றிருந்து;

வடிவாட்டி வள்ளி அடி போற்றி வள்ளி மலை காத்த நல்ல மணவாளா

 

வடிவாட்டி: வடிவில் சிறந்த, அழகான;

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள் போற்றும் வண்மை தரும் வாழ்வே

 

அடிநாட்கள்: வாழ்வின் ஆரம்ப காலத்திலே; வண்மை: வளம்;

அடி போற்றி அல்லி முடி சூட்ட வல்ல அடியார்க்கு நல்ல பெருமாளே.

 

அல்லி: தாமரை (என்றும் பொருள்);

குடிவாழ்க்கை அன்னை மனையாட்டி பிள்ளை குயில் போல் ப்ரசன்ன மொழியார்கள்... இல்லற வாழ்விலே வாய்க்கப்பெற்ற தாயார்; மனைவி; குயிலைப் போல பேசியபடி (கண்முன்னாலே) தோன்றுகிற பெண்கள்;

குலம் வாய்த்த நல்ல தனம் வாய்த்த தென்ன குருவார்த்தை தன்னை உணராதே... நான் பிறப்பெடுத்த குலம்; கிடைக்கப்பெற்ற செல்வம் (எல்லாவற்றையும்) நான் பெற்றிருக்கிறேன் என்று இறுமாந்தும்; குருவானவர் உபதேசிக்கின்ற மொழிகளை மனத்தில் உணர்ந்துகொள்ளாமலும்;

இட நாட்கள் வெய்ய நமனீட்டி தொய்ய இடர்கூட்ட... நாட்களை வீணில் கழித்த பின்னாலே இறுதியில் கொடிய யமன் நெருங்கிவந்து சோர்வடையச் செய்யுமாறு துன்பங்களைக் கொடுக்க,

இன்னல் கொடுபோகி இடுகாட்டில் என்னை எரியூட்டு முன் உன் இருதாட்கள் தம்மை உணர்வேனோ.. துக்கத்தோடு மயானத்துக்குக் கொண்டுபோய் என்னைச் (சிதையில்) எரிப்பதற்கு முன்னாலே உன்னுடைய இரண்டு திருவடிகளையும் உணர்வதும் அறிவதும் எனக்குக் கிட்டுமோ (கிட்டுமாறு அருள்செய்ய வேண்டும்).

வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளி மயில்மேல் திகழ்ந்த குமரேசா...வடக்கே இருக்கின்ற வெள்ளிமலையான கயிலையின் முன்புறத்திலே காவலாக அமர்ந்தவனே!  புள்ளி மயிலின்மேலே அமர்ந்திருக்கின்ற குமரேசனே!

வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளிமலை காத்த நல்ல மணவாளா... வடிவில் சிறந்த அழகியான வள்ளியின் திருவடிகளைத் துதித்தும்; வள்ளி மலையிலே அவருக்காகக் காத்திருந்த மணாளனே!

அடி நாட்கள் செய்த பிழை நீக்கி என்னை அருள்போற்றும் வண்மை தரும்வாழ்வே..... வாழ்வின் ஆரம்ப காலங்களிலே நான் செய்த குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு உன்னுடைய திருவடிகளைப் போற்றுகின்ற வளமை நிறைந்த குணத்தை அடியேனுக்குத் தந்த செல்வமே!

அடிபோற்றி அல்லி முடிசூட்ட வல்ல. அடியார்க்கு நல்ல பெருமாளே. உன்னுடைய திருவடிகளைத் தொழுது; உன் திருமுடியில் தாமரை மலரைச் சூட்டுகின்ற அடியவர்களுக்கு நன்மைகளைத் தருகின்ற பெருமாளே!

சுருக்க உரை

வடக்கே கயிலாய மலையின் முகப்பிலே காவலிருப்பதுபோல வீற்றிருப்பவனே!  புள்ளி மயில் வாகனனே!  வள்ளி மலையில் வள்ளியம்மையைப் போற்றித் துதித்த மணாளனே!  வாழ்வின் ஆரம்ப நாட்களில் நான் செய்த பிழைகளை மன்னித்து உன் திருவடிகளைப் போற்றுகின்ற நல்ல குணத்தை அடியேனுக்கு அருளிய செல்வமே!  உன் திருவடிகளைப் போற்றியும்; தாமரை மலரை உன் திருமுடிக்குக்குச் சூட்டியும் நிற்கின்ற அடியார்களுக்கு நன்மைகளைத் தருகின்ற பெருமாளே!

இந்த வாழ்க்கையிலே அமையப்பெற்ற தாய், மனைவி, பிள்ளை, பெண்கள், கிடைக்கப்பெற்ற பெருஞ்செல்வம் எல்லாமும் ‘என்னுடையவை’ என்று செருக்கடைந்து, குருவின் உபதேச மொழிகளை மனத்தில் கொள்ளாமல் இறுதியில் யமன் நெருங்கிப் பலவிதமான துன்பங்களைத் தர,

(உறவினர்கள்) துக்கத்தோடு என் உடலைக் கொண்டுசென்று சிதையில் சேர்த்து எரியூட்டுவதற்கு முன்னாலாவது அடியேன் உன்னுடைய இரண்டு திருவடிகளையும் உணரவும் அறியவும் செய்வேனோ.  (உணர்ந்து அறியுமாறு உன்னுடைய திருவருளைத் தரவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com