பகுதி - 583

கண்ணனுடைய மருகனே

பதச் சேதம்

சொற் பொருள்

மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி

 

வேய்ந்த: மூடப்பட்ட; வாந்தவியம்: பாந்தவியம், உறவுமுறை வைத்து;

வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடி வாழ்ந்த மனை தேடி உறவாடி

 

வாஞ்சை: விருப்பம்; மோகசாந்தி: மோகத்தைத் தணிக்க;

ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி

 

ஏந்து: நிமிர்ந்த;

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலை மாதர் உறவாமோ

 

ஈங்கிசை: இம்சை, உபத்திரவம்; லாஞ்சனை: லஜ்ஜை, வெட்கம்;

பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ என ஓசை

 

பாந்தள்: பாம்பு (காளிங்கன்);

பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே

 

தாளம் ஏங்க: தாளம் உயர்ந்தொலிக்க;

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை

 

பூங்கதலி: அழகிய வாழை;

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே.

 

கோம்பை: நாய் வகை (ராஜபாளையம் கோம்பை என்பதைப் போல);

மாந்தளிர்கள் போல வேய்ந்த உடல் மாதர் வாந்தவியமாக முறை பேசி... மாந்தளிர் போன்ற (சருமத்தால்) மூடப்பட்ட உடலைக் கொண்ட பெண்கள், பலவிதமான உறவுமுறைகளைச் சொல்லிப் பேசுவதனால்,

வாஞ்சை பெரு மோக சாந்தி தர நாடிவாழ்ந்த மனை தேடி உறவாடி... அவர்களின் மேலே விருப்ம் கொண்டு, மோகத்தைத் தணித்துக் கொள்வதற்கக அவர்கள் வாழ்திருக்கும் வீடுகளைத் தேடிப்போய் உறவு கொண்டிருந்து,

ஏந்து முலை மீது சாந்து பல பூசி ஏங்கும் இடை வாட விளையாடி... நிமிர்ந்திருக்கின்ற மார்பில் பலவிதமான நறுமணக் கலவைகளைப் பூசியும்; மெலிந்திருக்கின்ற இடை வாடும்படி விளையாடியும்,

ஈங்கிசைகள் மேவ லாஞ்சனை இல்லாமல் ஏய்ந்த விலைமாதர் உறவாமோ... உபத்திரவங்கள் ஏற்படுமாறு வெட்கமில்லாமல் விலைமாதர்களோடு கொண்ட உறவு நல்லதாமோ?

பாந்த(ள்) முடி மீது தாந்த திமி தோதி தாஞ் செகண சேசெ என ஓசை... காளிங்கனாகிய பாம்பின் தலைமேலே தாந்த திமிதோதி என்று பலவிதமான ஓசைகள்,

பாங்கு பெற தாளம் ஏங்க நடமாடும் பாண்டவர் சகாயன் மருகோனே... இசைவாகத் தாளம் ஒலிக்க நடனமாடிவனும்; பாண்டவர்களுடைய துணைவனுமான திருமாலின் மருகனே!

பூந்தளிர்கள் வீறு வேங்கைகள் பலாசு பூம் கதலி கோடி திகழ் சோலை... அழகிய தளிர்களும் சிறப்பான வேங்கை மரங்களும் பலாச மரங்களும் வாழை மரங்களும் கோடிக்கணக்காகத் திகழ்கின்ற சோலைகளும்,

பூம் தடம் உலாவு கோம்பைகள் குலாவு பூம்பறையில் மேவும் பெருமாளே.... அழகிய குளமும், திரிவதான கோம்பை* நாய்களும் இருப்பததான பூம்பறையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

(மதுரையில், ‘கோம்பை’ என்ற ஊரில் பெயர்பெற்றதான பெரியதும் சிவப்பானதுமான நாய் என்பது உரையாசிரியர் தணிகைமணி வ சு செங்கல்வராய பிள்ளையவர்கள் தரும் குறிப்பு)

சுருக்க உரை

காளிங்கனாகிய பாம்பின் தலைக்கு மேலே நின்றபடி பலவகையான தாளங்கள் ஒலிக்க அதற்கிசைந்தவாறு நடனமாடியவனும்; பாண்டவர்களுக்குத் துணைவனுமான கண்ணனுடைய மருகனே!  அழகிய தளிர்கள் நிறைந்த வேங்கை, பலாசு, வாழை மரங்கள் கோடிக்கணக்கிலே நிறைந்திருக்கின்ற சோலைகளும் குளமும், (தெருக்களில்) திரிகின்ற கோம்பை நாய்களும் இருப்பதான பூம்பறையில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

மாந்தளிர் போன்ற சருமத்தால் மூடப்பட்ட உடலைக்கொண்ட விலைமாதர்கள், பலவிதமாக உறவுமுறை வைத்துப் பேசி, விருப்பத்தைத் தூண்ட; அதனால் ஏற்பட்ட மோகத்தைத் தணித்துக்கொள்வதற்காக அவர்கள் வாழ்ந்திருக்கும் வீடுகளைத் தேடிச்சென்று, நிமிர்ந்திருக்கின்ற மார்புகளில் நறுமணக் கலவைகளைப் பூசி, மெல்லிய இடை வாடும்படியாக வெட்கமில்லாமல் அடைகின்ற இன்பத்தை நாடுவது நல்லதா?  (அவ்விதமான எண்ணங்கள் ஏற்படாமல் ஆண்டருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com