பகுதி - 689

வடதிருமுல்லைவாயிலில் வீற்றிருக்கின்ற மாசிலாமணீஸ்வரர்

பதச் சேதம்

சொற் பொருள்

சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொ(ண்)டு தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிராயே

 

சோதி: ஒளி (பொருந்திய); கிளர்: ஒளி; எதிராயே: எதிர்ப்பட்டு;

சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல் இரு தோளில் விழுந்து ஒரு சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி

 

சோலி: ஜோலி, வேலை—வியாபாரம்; சூதினால்: வஞ்சக(ப் பேச்சினால்);

மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் மோனமாய் அவமே சில சண்டைகளுடனே ஏசி

 

மோதியே: அணைத்துக்கொண்டு; சூறைகள் கொண்டு: களவாடி; மோனமாய்: மௌனமாய்; அவமே: வீணாக;

மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர் மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ

 

தோதக(ம்): வஞ்சகம்; மோடன் ஆகிய: மூடன் ஆகிய;

ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா

 

ஆதியே எனும்: ஆதி மூர்த்தியே என்றழைக்கும்;

ஆயர் வாழ் பதி தோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே கொடுபோத நுகர்ந்தவன் மருகோனே

 

கொடுபோத: கொண்டுபோய்; நுகர்ந்தவன்: உண்டவன்;

வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு கை வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர்

 

வீறு தயங்கும்: மேலிட்டு விளங்கும்; கை வாரி ராசன்: அலைக் கரங்களைக் கொண்ட கடலரசன் (வாரி: கடல்), வருணன்; நடபாதர்: நடராசர்;

வாச மா மலரோனோடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே.

 

வாச மாமலரோன்: நறுமணமுள்ள பூவில் வீற்றிப்பவன் (பிரமன்);

சோதி மா மதி போல் முகமும் கிளர் மேரு உலாவிய மா முலையும் கொ(ண்)டு... ஒளிவீசும் சிறந்த நிலவைப் போன்ற முகத்தையும் விளங்குகின்ற மேருமலையைப் போன்ற மார்பகத்தையும் கொண்டு,

தூரவே வரும் ஆடவர் தங்கள் முன் எதிர் ஆயே சோலி பேசி முன் நாளில் இணங்கிய மாதர் போல்... தூரத்தில் வருகின்ற ஆடவர்களுக்கு முன்னால் எதிர்ப்பட்டுத் தங்கள் வியாபாரப் பேச்சைப் பேசியும்; பல நாட்கள் பழகியவர்களைப் போல,

இரு தோளில் விழுந்து ஒரு சூதினால் வரவே மனை கொண்டு அவருடன் மேவி... இரண்டு தோளிலும் விழுந்து அணைத்துக்காண்டு, வஞ்சனைப் பேச்சால் வீட்டுக்கு அழைத்துப்போய் அவர்களோடு இருந்து,

மோதியே கனி வாய் அதரம் தரு நாளிலே பொருள் சூறைகள் கொண்டு பின் மோனமாய் அவமே சில சண்டைகளுடன் ஏசி...அணைத்துக்கொண்டும்; கொவ்வைக் கனி போன்ற வாய் இதழைத் தந்தும் இருக்கின்ற சமயத்தில் (அவர்களுடைய) பொருளையெல்லாம் கவர்ந்துகொண்டும்; (அலட்சியத்தால்) மௌனமாக இருந்தும்; வீணாகச் சண்டையிட்டும்; ஏசியும்

மோசமே தரு தோதக வம்பியர் மீதிலே மயலாகி மனம் தளர் மோடனாகிய பாதகனும் கதி பெறுவேனோ... மோசம் செய்கின்ற வஞ்சனை நிறைந்த துஷ்டர்களின்மேல் மையல்கொண்டு மனம் தளரும் மூடனும் பாதகனுமாகிய நான் நற்கதியை அடைவேனோ? (நற்கதியைப் பெருமாறு அருளவேண்டும்.)

ஆதியே எனும் வானவர் தம் பகை ஆன சூரனை மோதி அரும் பொடி ஆகவே மயில் ஏறி முனிந்திடு நெடு வேலா... ‘ஆதி மூர்த்தியே’ என்று அழைத்த வானவர்களுடைய பகைவனான சூரனோடு போரிட்டு அழித்த; மயிலில் ஏறிச் சினந்த நீண்ட வேலை உடையவனே!

ஆயர் வாழ் பதி தோறும் உகந்து உரல் ஏறியே உறி மீது அளையும் களவாகவே கொடு போத(ம்) நுகர்ந்தவன் மருகோனே...இடையர்களுடைய ஊர்களுக்கெல்லாம் மகிழ்வோடு சென்று, உரலில் ஏறி, உறியிலுள்ள வெண்ணெயை கள்ளத்தனமாகக் கொண்டுபோய் உண்ட கண்ணனுடைய மருமகனே!

வாதினால் வரு காளியை வென்றிடும் ஆதி நாயகர் வீறு தயங்கு(ம்) கை வாரி ராசனுமே பணியும் திரு நட பாதர்... வாதிட்டு வந்த காளியை வென்ற ஆதி நாயகர்; மேலே உயர்வதைப் போல எழுகின்ற அலைக் கரங்களைக் கொண்ட கடலரசனாகிய வருணனும் வணங்குகின்ற நடராசரும்;

வாச மா மலரோனோடு செம் திரு மார்பில் வீறிய மாயவனும் பணி மாசிலா மணி ஈசர் மகிழ்ந்து அருள் பெருமாளே.... நறுமணம் வீசும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் திருமகள் தனது மார்பில் உறைபவனான திருமாலும் வணங்குகின்ற (வடதிருமுல்லைவாயிலின்*) இறைவனான மாசிலாமணி ஈசர் மகிழ்வோடு அருளிய பெருமாளே!

(வடதிருமுல்லைவாயிலில் உள்ள சிவனுக்கு ‘மாசிலாமணீஸ்வரர்’ என்று பெயர்.)

சுருக்க உரை

‘ஆதிமூர்த்தியே’ என்று போற்றிய தேவர்களுடைய பகைவனான சூரனோடு போரிட்டு அழித்த; மயிலில் ஏறி சூரனைச் சினந்த நெடிய வேலனே!  இடையர்களுடைய ஊர்களிலெல்லாம் மகிழ்வோடு சென்று உரலின் மீதேறி, உறியிலுள்ள வெண்ணெயை உண்ட கண்ணனின் மருகனே! வாதிட்டு வந்த காளியை வென்ற ஆதிநாயகரும்; அலைக் கரங்களைக் கொண்டு வருணனும் பணியும் நடராசரும்; பிரமனும் திருமாலும் பணிகின்ற (வடதிருமுல்லைவாயிலில் வீற்றிருக்கின்ற மாசிலாமணீஸ்வரர் அருளிய பெருமாளே!

ஒளிவீசும் நிலவைப் போன்ற முகத்தையும்; மேரு மலையை ஒத்த தனங்களையும் கொண்டு தூரே வருகின்ற ஆடவர்களிடம் சென்று அவர்களிடம் நெடுநாள் பழகியவர்களைப் போலத் தழுவிக்கொண்டு; தங்கள் வியாபாரப் பேச்சுகளைப் பேசி அவர்களை வஞ்சகமாத் தங்கள் வீட்டுக்கு அழைத்துச் சென்று அவர்களுடைய பொருட்களைக் கவர்ந்துகொண்டு அதன்பின்னர் மௌனமாக இருந்தும் ஏசிப் பேசியும் மோசத்தையே செய்கின்ற வஞ்சகம் நிறைந்த துஷ்டர்களிடம் மையல்கொண்டு மனம் தளர்கின்ற மூடனும் பாதகனுமாகிய அடியேனுக்கும் நற்கதியைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com